Enable Javscript for better performance
rajasthan brothers selling cowdung cakes through amazon | அமேஸானில் சாண வறட்டி விற்றாலும் தவறில்லை!- Dinamani

சுடச்சுட

  

  குடும்பத் தொழிலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல அமேஸானில் சாண வறட்டி விற்றாலும் தவறில்லை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 08th May 2017 03:55 PM  |   அ+அ அ-   |    |  

  cowdung_cake1

   

  தாங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறாத மாணவர்களைத் திட்ட ஆசிரியர்கள் பயன்படுத்தும் மிகச் சாதாராணமான திட்டுகளில் ஒன்று, ‘பேசாம வறட்டி தட்டப் போ’ அல்லது ‘சாணி அள்ளப் போ’ என்பதாகவே இருக்கும். இம்மாதிரி திட்டு வாங்கும் போதெல்லாம் கடந்த தலைமுறை மாணவ, மாணவியருக்கு மிகுந்த அவமானமாக இருக்கும். இப்போதைய ஆசிரியர்கள் இப்படித் திட்டுவார்களா? எனத் தெரியவில்லை. ஏனெனில் மொத்தமும் சி.பி.இ.எஸ்.சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தான் முக்காலே மூணு வீசம் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் இப்படித் திட்டும் போது எப்படி இருக்குமென்று கற்பனை செய்யமுடியவில்லை.

  ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? இந்த சாணி மற்றும் வறட்டியை மந்த குணம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மிகக் கீழாக நொந்த மாணவர்களின் நிலையைக் குறிக்கவே அன்றைய ஆசிரியர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்குப் பாருங்கள்... இதோ ஆந்திராவுக்கு அந்தப் பக்கம் இருக்கே ராஜஸ்தான் அங்கே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் தங்களது குடும்பத் தொழிலான பால் வியாபாரத்தின் உப வியாபாரமாக இந்த வறட்டி பிஸினஸைச் செய்து சூப்பராக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அதெப்படி என்கிறீர்களா? 

  தெருத் தெருவாக கூவி வரட்டி விற்றால் இவர்களைப் பார்த்தும் உலகம் சிரித்திருக்குமோ என்னவோ? ஆனால் இவர்கள் வறட்டி விற்பது அமேஸானில். ஒரு டஜன் வறட்டிகள் உடையாமல் கிரிஸ்பியாகக் கிடைக்க வேண்டுமெனில் எங்களிடம் வாருங்கள் என்று கோரிக்கை விடுத்திருப்பார்கள் போலும்... அமேஸானில் இவர்களது வறட்டிகளுக்கு ஆதரவு அமோகமாகப் பிய்த்துக் கொண்டு போகிறதாம். ராஜஸ்தான், ஜெய்பூரின், கோட்டா நகரைச் சேர்ந்த அந்த மூன்று சகோதரர்களும் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

  இவர்களது APEI ஆர்கனிக் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மூன்று டைரக்டர்களில் ஒருவர் அமன் ப்ரீத் சிங்; அவரது கூற்றுப்படி வருங்காலத்தில் வறட்டிக்கு இருக்கும் முக்கியத் துவத்தை அவர்கள் கணித்ததால் கடந்த மூன்று மாதங்களாக இவர்கலது நிறுவனம் அமேஸானில் ஈ டெயிலிங் முறையில் வறட்டி விற்றுக்கொண்டிருக்கிறதாம். தற்போது மக்களிடையே இவர்களது வறட்டிக்கு மிக நல்ல வரவேற்பு நிலவி வருவதால் ஒரு டஜன் உடையாத வறட்டிகளுக்கு ரூபாய் 120 கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள். வாரம் ஒன்றுக்கு 15 சரக்குகள் விற்பனை ஆகி விடுகிறதாம். ஒரு சரக்கு என்றால் சுமார் 500 முதல் 1000 வறட்டிகள் வரை இருக்குமாம். மும்பை, புனே, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இவர்களது வறட்டி மிக நன்றாக விற்பனை ஆகிறதாம். கார்ட் போர்டுகள் பயன்படுத்தி பேக்கிங் செய்யப்படுவதால் வட்டமான சி டிக்கள் போல அடுக்கி பேக் செய்யப்படும் வறட்டிகள் உடைவதே இல்லை.

  முதல் முறை வறட்டி உபயோகிப்பவர்கள் எனில்; அவர்களுக்கு வறட்டியைப் பற்றி சின்னதாய் ஒரு உதாரணம்; அரைத் திரவ நிலையில் இருக்கும் மாட்டுச் சாணம் சின்னச் சின்ன வட்டங்களாகத் தட்டப்பட்டு முதலில் திறந்த வெளிகளில் வெயிலில் காய வைக்கப் படுகிறது. வெயிலில் உலரும் போது தானாகவே அது சுருங்கி காய்ந்து தட்டை போலாகி விடுகிறது. இந்தத் தட்டை வடிவிலான வட்ட வட்டமான வறட்டிகள் பிறகு கார்ட்போர்டு அட்டைகளில் டஜன் டஜனாக அடுக்கி பேக்கிங் செய்யப்படுகிறது. இவற்றைத் தான் அமேஸான் மூலமாக இணையத்தில் விற்பனை செய்கிறோம் என்கிறார் அவர். மாட்டுச் சாணத்தை முறையாக எப்படிப் பராமரித்து எப்படிப் பயன்படுத்துவது எனும் அடிப்படை புரிதல் இல்லாத நாடுகளில் இதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்களது மதச் சம்பிரதாயங்களை, சடங்குகளை நிறைவேற்ற நெருப்பு மூட்ட இந்த சாண வரட்டிகள் தேவைப்படுகின்றன.

  கோட்டாவில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 120 பசுக்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் இவர்களது பண்ணையில் உயர் தொழில்நுட்பம் பேணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வேலையாட்கள், நாட்டின் எந்த பாகத்திலிருந்தும் உடனடியாகத் தொடர்பு கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளிட்டவற்றால் இவர்களது பண்ணையில் தயாராகும் வறட்டிகள் வாடிக்கையாளர்களால் விரும்பப் படுகின்றன. இவர்களது நிறுவனத்தின் பெயர் GAU. ‘காவ்’ என்றால் இந்தியில் பசு என்று பொருள். ஆனால் இவர்களது நிறுவனத்தின் பெயருக்கு அது மட்டுமே பொருளில்லை. நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களின் பெயர்களின் முதல் எழுத்தை எடுத்து ஒன்றாக்கினால் GAU என்றே வருகிறது. கங்கதீப் சிங், அமன் ப்ரீத் சிங், உத்தம்ஜியோத் சிங் எனும் மூவரது பெயரின் முதல் எழுத்தும் இணைந்து GAU ஆனது. 

  ராஜஸ்தானில் மே மாத இறுதியில் 24 முதல் 26 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் குளோபல் ராஜஸ்தான் அக்ரிடெக் சந்திப்பில் இவர்களது நிறுவனத் தயாரிப்புகளுக்கு மிகுந்த டிமாண்ட் இருக்கும் என நம்பப் படுகிறது.

  தங்களது பண்ணையைப் பற்றிப் பேசும் போது அமன் ப்ரீத் சிங் பெருமிதமாகப் பகிர்ந்து கொண்ட மற்றொரு விசயம்; இவர்களது பண்ணைகளில் வளர்க்கப் படும் பசுக்கள் மிகுந்த சுகாதாரத்தோடு பேணப் படுவதாகவும். அவற்றின் சாணத்திலிருந்து மின்சாரம் மற்றூம் எரிவாயு எடுக்கிறார்களாம். அதோடு இருக்கவே இருக்கிறது புதிதாக இறங்கியுள்ள வரட்டி பிஸினஸ் வேறு! இவரக்ளது பண்ணையிலிருந்து கிடைத்த சாணத்திலிருந்து தான் ராஜஸ்தானத்தின் முதல் பயோ கேஸ் பிளாண்ட் அமைக்கப்பட்டதாம். மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு தான் பண்ணையின் மொத்த மின்சாரத் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுவருகிறதாம். இதிலிருந்து தினமொன்றுக்கு கிடைக்கும் 40 KW மின்சாரத்தால் இவர்களுக்கு ஆண்டுக்கு 24 லட்ச ரூபாய்கள் மிச்சமாகிறதாம். 

  இந்தக் கதை கேட்கவே சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது... இல்லையா?

  இனிமேல் யாராவது உங்களை வறட்டி தட்டப் போ! சாணி அள்ளப் போ... என்று கிண்டல் செய்தால் கவலையே படத் தேவையில்லை. சாணி வறட்டி இணையத்திலேயே விற்பனைக்கு வந்து விட்டதை ஒருமுறை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள் அது போதும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai