மனதுக்கு இனியவரோடு காதலர் தினத்தை மகிழ்ந்து கொண்டாட வேண்டுமா?  

பிப்ரவரி மாதம் வந்தால் காதலர்கள் பரபரப்பாகிவிடுவார்கள். தங்கள் மனத்தை கொள்ளையடித்த
மனதுக்கு இனியவரோடு காதலர் தினத்தை மகிழ்ந்து கொண்டாட வேண்டுமா?  
Published on
Updated on
4 min read

பிப்ரவரி மாதம் வந்தால் காதலர்கள் பரபரப்பாகிவிடுவார்கள். தங்கள் மனத்தை கொள்ளையடித்த காதலியை அசத்த மாதத் தொடக்கதிலேயே ப்ளான் போடத் தொடங்கி விடுவார்கள். முழுங்காலிட்டு மண்டியிட்டு ரோஜா மலரை தந்து காதலை அறிவிப்பது பழங்காலத்திலும் பழங்கால வழக்கம். ஒவ்வொரு வருடமும் புடவை, நகை அல்லது பரிசுப் பொருட்கள் கொடுத்து அலுத்துவிட்டது. பிறகு என்ன தான் செய்வது? 

பிறகு காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று யோசித்துக் குழம்பித் தவிக்கிறீர்களா? வழக்கமான கொண்டாட்ட யோசனைகளை விட புதுமையாகவும் தனித்துவமாகவும் அந்த தினத்தை மாற்றி உங்கள் துணையை ஆச்சரியப்படுத்தலாம் அல்லவா. காதலர் தினத்தின் மகத்துவத்தை நீங்கள் நம்புகிறீர்கள் எனில், பழமையான வழக்கமான வழிகளில் அதைக் கொண்டாடுவது அலுப்பான விஷயம்.

எனவே மாற்றி யோசித்து புதிய பாதைக்குத் திரும்புங்கள். உங்கள் காதலியின் மீதான அன்பின் ஆழத்தை அவருக்கு உணர்த்தும் வகையிலும் மலரினும் மென் உணர்வான காதலுணர்வை மீட்டெடுக்கும் வகையிலும் உங்கள் கொண்டாட்டம் இருக்க வேண்டும். அதற்கு இந்த 7 வழிமுறைகள் உங்களுக்கு உதவக் கூடும்.

1. காலை உணவை இங்கு சாப்பிடுங்கள்!

காதலர் தினத்தில் என்ன ஸ்பெஷல்? உங்கள் காதலிதான் மிக மிக ஸ்பெஷல். உங்கள் துணையை மிகவும் முக்கியமானவராக உணரச் செய்து, சந்தோஷப்படுத்த ஏற்ற தினம் இதுதான். உங்கள் காதலிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து, தூங்கி விழிப்பதற்கு முன்னால் ஆச்சரியப்படுத்தும் வகையில் படுக்கையிலேயே வைத்து சாப்பிடக் கொடுங்கள் அல்லது நீங்களே ஊட்டி விடுங்கள்.

நிச்சயம் அவர் சந்தோஷத்தில் திக்கு முக்காடிவிடுவார். உங்களையும் இதற்கு மேல் பத்து மடங்கு 'திரும்ப கவனித்து’ மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடுவார் என்பதும் உறுதி. இதைவிட ஒரு சிறந்த காதலர் தினத்தை நீங்கள் கொண்டாடி இருக்க மாட்டீர்கள். 

2. DIY கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள்

எப்படியும் காதலர் தினத்துக்கு பரிசளிக்க வேண்டும். என்ன பரிசு என்பதை விட எப்படி அதைத் தரப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அழகான அவருக்கு காதலர் பரிசு வாங்கி, உங்கள் மனத்தில் உள்ள அன்பை கொட்டி பரிசளியுங்கள்.

பழைய வழிமுறைகளான சாக்லெட்டுகள் மற்றும் பூங்கொத்துக்களை தருவதை விடவும் இத்தகைய அழகான கிப்டுடன் உங்கள் கைவண்ணத்தில் ஒரு அழகிய ஆர்டின் வடிவ வாழ்த்து அட்டையையும் சேர்த்து கொடுத்துப் பாருங்கள்.

சந்தோஷம் இரட்டிப்பாகும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.

3. பார்ட்டி பறவைகள்

உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்யுங்கள்.

உங்கள் காதலை இதுவரை அவர்களிடம் தெரிவிக்கவில்லை என்றால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களுடைய காதலி / காதலரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழுங்கள். பார்ட்டியில் பறவைகளாகி மகிழுங்கள்.

4. தீம் தீம் என ஒரு தீம் இரவு 

உங்கள் இணையுடன் சந்தோஷமாக இருக்க பகலை விட இரவு நேரமே உகந்தது. உங்கள் மனத்துக்குப் பிடித்த இடத்துக்கு இருவரும் கிளம்பிச் செல்லுங்கள். அது ஜாலி ரைட் பயணமாக இருக்கலாம்,

அல்லது நீங்கள் இருவரும் பங்கு பெறும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், அது உங்களை கொண்டாட்ட மனநிலையின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

5. காதல் கவிதை எழுதும் நேரம், இதழோரம்

கவிதையை ரசிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாருமிருக்க முடியாது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்று எழுதத் தொடங்கி உங்கள் சொந்த கற்பனையில் கவித்துவமான வரிகளைச் சேர்த்து மானே தேனே போட்டு எழுதி உங்கள் காதலியிடம் கொடுத்துப் பாருங்கள்.

கவிதை வரவில்லையா ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு அழகான காதல் கடிதத்தை உங்கள் கைப்பட எழுதி அவரிடம் கொடுத்து விடுங்கள். வார்த்தைகள் மந்திர சக்தி வாய்ந்தவை. அவை உங்கள் காதலியை சொக்க வைத்துவிடும் என்பது உறுதி.

6. சுற்றுலா செல்லுங்கள்

ஊர் சுற்றுவது யாருக்குத் தான் பிடிக்காது? அதுவும் மனத்துக்கு பிடித்தவருடன் கை கோர்த்து புத்தம் புதிய ஊர்களின் தெருக்களில் உலவுவது மனத்தை புத்துணர்வாக்கும் என்பதுடன் உறவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.

உங்கள் காதலியுடன் நீண்ட நேரம் செலவழிக்க இதுவே மிகச் சிறந்த வழி. உங்கள் மொபைல் ஃபோன்கள் லாப்டாப் போன்ற கருவிகளை எல்லாம் அணைத்து ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் காதல் துணையை அணைத்தபடி ஊர் சுற்றுங்கள். இதுவே ஆகச் சிறந்த காதலர் தின பரிசாக அவருக்கு இருக்கும்.

7. இரவுக் காட்சி

ஏதாவது ஒரு திரையரங்கில் இரவு காட்சியை முன்பதிவு செய்து உங்கள் காதலியுடன் செல்லுங்கள்.

டன் கணக்கில் பாப்கார்ன் நிறைய வாங்கி, கை நிறைய நொறுக்குத் தீனிகளுடன் சீட்டில் அமர்ந்து ஜாலியாக படம் பாருங்கள். இதை விட ரொமாண்டிக் தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நீங்களே உணர்வீர்கள்.

இதைவிட சிறப்பாக யோசித்து உங்கள் காதலியை வாவ் சொல்ல வைக்க உங்களால் மட்டும்தான் முடியும். காதலில் நிரம்பித் ததும்பும் தினமாக அந்த நாளினை மாற்ற வல்ல சக்தி உங்கள் காதலுக்கு உண்டு என்பது உண்மைதானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com