மனைவி / கணவரிடம் ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்

ஒரு கூரையின் கீழ் வாழும் தம்பதியரிடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவதும் பின்னர் சமாதானம் அடைவதும் சகஜம்தான். ஆனால் பிரச்னைகள் தொடர்கதையாகும்
மனைவி / கணவரிடம் ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்

ஒரு கூரையின் கீழ் வாழும் தம்பதியரிடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவதும் பின்னர் சமாதானம் அடைவதும் சகஜம்தான். ஆனால் பிரச்னைகள் தொடர்கதையாகும் போதும், எப்போதும் மன நிம்மதியற்ற நிலையும் இருந்தால் அது சம்மந்தப்பட்ட இருவருக்கும் மன உளைச்சலைத் தான் ஏற்படுத்தும். இனி ஒரு போதும் சண்டை போடக் கூடாது உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன் என்று தலையில் அடித்து சத்தியம் செய்து கொண்ட மறுநாளே கூட மனக் கசப்பு ஏற்படுவதுண்டு.

நீ தான் இதுக்கு காரணம் என்பார் ஒருவர்....இல்லவே இல்லை எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று ஒரே போடாக போடுவார் மற்றவர். இதில் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். மூன்றாம் மனிதரிடம் செல்லாமல், கோர்ட் படிக்கட்டுகளில் ஏறாமல் நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிணக்குகளை நாமே சரி செய்து கொள்ள முடியும். அதுதான் ஆரோக்கியமான உறவுக்கான நிரந்தர தீர்வும் கூட. 

எல்லா நாளும் இனிக்க என்ன செய்யலாம்?

ஒரு காலைக் காட்சி. அன்று எல்லாமே தாமதமாகிவிடுகிறது. திங்கள்கிழமை காலைகள் எப்போதுமே அசுர பரபரப்பானவை. ஞாயிற்றுக் கிழமை சாவகாசத்துக்குப் பிறகு திங்களன்று குழந்தைகளை எழுப்புவதும் கிளப்புவதும் தாய்மார்களுக்கு பெரும்பாடு. இதில் பெரும்பாலும் அப்பாக்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது அந்தக் கலவரத்திலும் கூச்சமே படாமல் காபி கேட்பதுடன் அந்தக் காபியில் சர்க்கரை அதிகம் அல்லது குறைவு என்று குற்றம் சுமத்துவார்கள்.

குழந்தைகள் லேட்டாக கிளம்பி, ஸ்கூல் வேனை விட்டுவிட்டால் அப்பா பைக்கில் பள்ளி வரை கொண்டுவிட நேரும் சமயங்களில் இன்ஜினை விட சூடாகிவிடுவார்கள். டைமுக்கு எதையாவது செய்யத் தெரியுதா உனக்கு என்று ஆரம்பிக்கும் சண்டை மூதாதையர் வரை நீண்டு, அதன் பின் காலை டிபன் சாப்பிடாமல் அவரவர் அலுவலம் போய், இரவு உணவு சாப்பிடும் போதும் முகம் கொடுத்து பேசாமல் சின்ன விஷயம் அப்படியே வாய் வார்த்தையில் நீண்டு மனக் குறையில் கொண்டு போய்விட்டுவிடும். 

இது பல குடும்பங்களில் நடப்பது தான். எங்கோ ஆரம்பித்து எதிலோ கொண்டு போய்விட்டுவிடும். நம் நாட்டைப் பொருத்தவரை மனைவி என்பவள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவள் என்ற பொதுப்புத்தி ஆண்களின் தலைக்குள், உடலுக்குள், ஜீனுக்குள் உறைந்து போன ஒன்று. சமத்துவமற்ற நிலையில் ஒருவரின் தலையில் மட்டும் சுமத்தப்படும் வேலைச் சுமை, பொறுப்பு, கடமைகள் பல சமயம் அவர்கள் எனர்ஜி முழுவதையும் உறிஞ்சியெடுத்து, சோர்வுறச் செய்துவிடும்.

இதை சரி செய்ய பொறுமையும் அன்பும், விடாப்பிடியான முயற்சியும் தேவை. காலை வேளைகளில் கணவரை சிற்சில வேலைகள் செய்யப் பழக்கி வைக்க வேண்டும். பிள்ளைகளையும் அவரவர் தட்டுக்களை, சின்ன சின்ன கைக் காரியங்களை செய்ய ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து வேலைகளைச் செய்யும் போது அது ஒரு வேலையாகவே தோன்றாது. எளிதாக செய்து முடிப்பதுடன் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இதெல்லாம் ஆகற விஷயமா இதுங்க கிட்ட சொல்றதுக்கு நானே செய்து முடிச்சிடுவேன் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களை ஆண்டவன் ஆண்ட்ராய்ட் மூலம் வந்தால் கூட காப்பாற்ற முடியாது. முக்கியமாக ஸ்ட்ரெஸ் குறையும். அதன் பின் திங்கட்கிழமைகளைக் கூட எளிதாக கடந்துவிடலாம்.

தினமும் ஒரு முறை ஐ லவ் யூ சொல்லுங்கள்

இது கேட்பதற்கு மிகவும் அபத்தமாகவும் நாடகத்தனமாகவும் தோன்றலாம். ஆனால் அந்த வார்த்தையின் மந்திரம் உங்களை நிச்சயம் காப்பாற்றிக் கொண்டே இருக்கும். உங்கள் உறவை உங்களுக்கே தெரியாமல் காபந்து பண்ணிக் கொண்டிருக்கும். ஒரு அரணாக உங்களைச் சுற்றி பூவேலி அமைத்திருக்கும் வார்த்தைகள் அவை. வார்த்தையில் சொல்லாவிட்டாலும் குறுஞ்செய்தியில், ஒரு சிறு தொடுகையில், ஏன் ஒரு ஈரப்பார்வையில் கூட தினந்தோறும் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். உடல்களைப் பகிர்ந்து கொள்ளும் கணவன் மனைவி பலர் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில்லை. அதனால்தான் பாதிக்கும் மேற்பட்ட பிரச்னைகள் உருவாகிறது.

உங்களுடைய கணவருக்கு அன்று மூட் சரியில்லை என்றால் அவரை சரிப் படுத்த முயலுங்கள். உங்கள் மனைவிக்கு தனிமை தேவைப்பட்டால் அவரை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தானாக சரியாகிவிடுவார். இதை விட்டுவிட்டு என்னை அப்படி பேசினே இல்லையா உன்னை எப்படி அழ வைக்கறேன் பாரு என்றோ, நீங்க சொன்னதை நான் மறக்கவே மாட்டேன், டைம் வரட்டும் வைச்சிக்கிறேன் என்று மனத்தில் கறுவிக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது. அந்தந்த பிரச்னைகளுக்கான தீர்வுகள் உடனடியாக இருக்க வேண்டும்.

தேவையற்ற நெகட்டிவ் விஷயங்கள் வேண்டாம்

திருமண உறவுகளில் ஈகோ, பயம், வெறுப்பு போன்ற நெகட்டிவ் விஷயங்களை வளர்த்தெடுக்காதீர்கள். ஒருவர் மீது மற்றவருக்கு ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் இருக்கலாம். சில சமயம் ஒருவரின் பழக்க வழக்கங்கள் மற்றவருக்குப் பிடிக்காமல் போகலாம். பொறுமையாக கணவரின் குண நலன்களில் எது சரியில்லை எதை சரி செய்ய முடியும், எதை தலைகீழாக நின்றாலும் மாற்ற முடியாது என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி உங்களை சிறிது பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். போலவே மனைவியின் பயங்கள் தயக்கங்கள், அவளுடைய வாழ்நிலை சூழல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது எதையும் திடீரென்று திணிக்காதீர்கள்.

ஓரிரவில் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் கால அவகாசம் தேவை. நீங்கள் கற்பனையில் உருவாக்கியிருக்கும் ஒருவராக உங்கள் கணவன் அல்லது மனைவி ஒருபோதும் இருக்க முடியாது. அவர்கள் ரத்தமும் சதையும் தனித்துவமும் மிக்க ஒரு உயிர். அவர்களுக்கு முதலில் மதிப்பு கொடுங்கள். இருவரில் ஒருவர் செலவாளியாக இருக்கலாம், அல்லது கஞ்சத்தனம் மிக்கவராக இருக்கலாம். அவரின் நியாயமான கோரிக்கைகளையும் கொள்கைகளையும் ஒத்துக் கொண்டு ஒத்துப் போவதுதான் சரி. மேலும் ஆரோக்கியமான திருமண உறவில் பரஸ்பரம் மரியாதை மிகவும் முக்கியம்.

ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பும், பயமும் இருந்தால் அது பிரச்னைகளை தீர்க்காது. எல்லா விஷயங்களிலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுத்தால் தாம்பத்திய ரயில் சீராக ஓடிக் கொண்டிருக்கும். பண விஷயங்கள், குடும்ப நிர்வாகம் என எல்லா விஷயங்களிலும் ஒருவரே முடிவெடுப்பவராக இருந்தால் அது சந்தோஷமான இல்லறமாக மலராது. நான் உசத்தி நீ தாழ்த்தி என்று தன்னை நிறுவ இருவரில் ஒருவர் நினைத்தாலும் அது போராட்டத்தில்தான் முடியும். நம்பிக்கையும் பரஸ்பர ஒற்றுமையும் சமத்துவமும் தான் மகிழ்ச்சியான குடும்பத்தின் அடிப்படை.

மன்னிப்பாயா...அன்பே  

திருமண உறவில் இருப்பவர்களுக்கிடையே சில அந்தரங்கங்கள் இருக்கலாம் ஆனால் ரகசியங்கள் தேவையற்றது. ஒருவருடைய பிரத்யேகம் என்பதை மற்றவர் மதிக்க வேண்டும், அதே சமயத்தில் அதிலேயே அவர்கள் மூழ்கிவிடக் கூடாது. மற்றவரின் இருப்பை அவர்கள் உணர்ந்து மதித்து நடக்க வேண்டும். ஏற்கனவே சண்டையில் பிரச்னையிலிருந்து விடுபட்டு மீண்டும் இணையும் போது முன்பு ஏற்பட்ட பிரச்னைகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க இருவருமே முயற்சி எடுக்க வேண்டும். திருமண உறவில் நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பது கடினம் தான். ஆனால் முயற்சியும் நீங்கா அன்பும் இருந்தால் நிச்சயம் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வார்கள்.

என்னதான் பிரச்னைகள் தீர்ந்து தற்போது சுமுக நிலைக்கு இருவரும் வந்திருந்தாலும், மனத்துக்குள் ஒரு மூலையில் இவர் இன்னும் அப்படித்தான் செய்கிறாரோ, என்றும் இவள் எல்லாம் எங்க திருந்த போறா என்றும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். தவறு செய்த அவர் / அவளின் ஒவ்வொரு செயல்பாடும் சிறிது நாட்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே இதற்குத் தீர்வு. 

செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்பதும் மனதார மன்னிப்பு வழங்குவதும் தான் மனிதத் தன்மை. குத்திக் காட்டுவதும், நீங்க அப்படித்தான்னு எனக்குத் தெரியும், நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்றெல்லாம் பேசாதீர்கள். மன்னிப்பது மட்டுமல்ல மறப்பதும் உங்கள் இல்லற வாழ்க்கையை சுகப்படுத்தும். உங்கள் மனதின் ஆழத்திலிருந்து அன்பை வெளிப்படுத்துங்கள். அதன் சக்தி மகத்தானது. 

புகைப்படங்கள் நன்றி - கூகுள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com