திட்டமிடு, வெற்றி பெறு!

பொதுவாக உலகியல் வாழ்வில் வளர, முன்னேற, சமய உணர்வு, இந்திய சமயக் கோட்பாடுகள் பெருந்தடை
திட்டமிடு, வெற்றி பெறு!

நீ... நான்... நிஜம்! -20

பொதுவாக உலகியல் வாழ்வில் வளர, முன்னேற, சமய உணர்வு, இந்திய சமயக் கோட்பாடுகள் பெருந்தடை என்று நாத்திகர்களும் பொதுவுடைமைவாதிகளும் குற்றம் சொல்வதுண்டு. இந்தியா போதுமான முன்னேற்றம் பெறாமைக்கே நமது சமயம் சார்ந்த வாழ்வியல் தான் காரணம் என்று நாத்திகர்கள் உறுதிபட நம்புகிறார்கள். நிலையாமை, மரணம் மீதானபயம், சாமியார்த்தனமான துறவுச் சிந்தனைகள், பொருட்பற்றைக் கண்டிக்கும் போக்கு இவை சமயத்தின் ஒரு பகுதி. ஆனால் மறுபகுதி வெகு மதிப்புக்குரியது. உலகியல் வெற்றிக்கும் உறுதுணையாவது.

திட்டமிடுதல், வெற்றி பெறுதல் என்பதை இந்தப் பிறவியுடன் நிறுத்தும் பொருள் முதல் வாதிகளைத் தூக்கிச் சாப்பிட்டது மெய்ஞானம். அடுத்த பிறவி, தொடர்பிறவிகள் வரை இன்றைய திட்டம், எண்ணம், செயல், எப்படி பாதிக்கிறது என்று ஆன்மிக உலகம் பேசத் தொடங்கியது. வினை - எதிர்வினை என்று பேசியது. அடுத்த ஊர் போக முன்னதாகவே திட்டமிடு என்ற உலகியலை விழுங்கி அடுத்த உலகம் (மோட்சம்?) மறுபிறவி என்றெல்லாம் யோசிக்க வைத்தது மெய்ஞானம். மரணம் வரை சுய முன்னேற்றவாதிகள் பேசியதை மரணம் தாண்டியும் கொண்டுபோகிறது ஆன்மிகம். "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' என்ற ஆழ்வார்வாக்கை சுயமுன்னேற்றப் பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாதா என்ன? ஐந்து பொறிபுலன்களும் தளர்ந்து அறிவு கலங்கி மரணம் நிகழும் போது, இறைவா உன்னை நினைக்க அழைக்க முடியாமல் போகும் எனவே நன்றாக இருக்கும்போதே Advance Booking பாணியில் ஆண்டவன் அருளை Reserve செய்து கொண்ட மகான்களை திட்டமிடாதவர் என்றா சொல்லமுடியும்? இவர்களைவிட முன்கூட்டி யார் திட்டமிட முடியும்? யோசியுங்கள்.

மனிதவள ஆலோசகர் அமரர் திருப்பத்தூர் சந்திரசேகர், மதம் வளர்க்கும் மங்கை மாதா அமிர்தானந்தமயி இருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களை விளக்க ஒரே கதையைக் கையாண்டிருப்பதை நான் சொல்லட்டுமா? நல்ல கதை...
ஒரு வித்தியாசமான நாடு. வருடம் ஒரு முறை புதிய அரசர் தேர்ந்தெடுக்கப்படுவார். ராஜ வாழ்வு... ஏகக் கொண்டாட்டம். யானை மாலை போடுவதன் மூலம் எந்தப் பிரஜையும் அரசராகி விடமுடியும். (பொதுத் தேர்தலில் மட்டும் வேறுகதையா என்ன?) ஆனால் ஒருவருடம் முடிந்ததும் அரசரைப் படகில் ஏற்றி நதியில் கொண்டுபோய் தொலைதூரவனத்தில் கொடுங்காட்டில் விட்டு விடுவார்கள். புலி, சிங்கம், பாம்பு என்று கொடிய விலங்குகளுக்கு ராஜ போஜனம் மகா ராஜா... அப்படி வழக்கம் போல தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பதவிக்காலம் முடிந்து படகில் ஏற்றப்பட்டார். பலரும் வருந்தினர்... படகோட்டி உட்பட "மகாராஜாவை மரணவாசலுக்கு அனுப்புகிறோமே' என்று மனம் வருந்தினார். அரசர் மட்டும் ஏக மகிழ்ச்சியுடன் வந்தார். ""ஓர் அரசர் போகிற படகா இது.. படகுக்கு அலங்காரம் போதாது.. இன்னும் அலங்கரியுங்கள்'' என்று ஆணையிட்டார். வெற்றிப் புன்னகையுடன் கையசைத்து படகில் புறப்பட்டார். மவுனம் கலைத்த படகோட்டி, ""நான் பல மகாராஜாக்களை வழி அனுப்பி இருக்கிறேன். தாங்கள் மரணத்தீவுக்குப் பயணிக்க அஞ்சவில்லையா?'' என்றான். மகாராஜா சிரித்தபடி, ""இந்த ஒருவருடம் நான் என்ன செய்திருக்கிறேன் என்று தெரியாமல் பேசுகிறாய். நமது படை வீரர்களை எப்போதோ அங்கு அனுப்பி காட்டை அழித்து நாடாக்கி விட்டேன். வளமான நாடு என் தலைமைக்காக அங்கே தயாராக உள்ளது... நீ வருவதானால் என்னுடன் வா!'' என்றார். இந்தக் கதையைக் கூறி, ""இந்த ஜன்மத்திலேயே அடுத்த ஜன்மத்திற்குப் புண்ணியம் செய்... தயாராகு'' என்கிறார் மாதா அமிர்தானந்தமயி. "நிகழ்காலத்தில் எதிர்கால வாழ்வுக்குத் திட்டமிடு பாடுபடு' என்ற செய்திக்கு மேற்கோள் காட்டுகிறார் மனிதவள ஆலோசகர். எனவே சமயம் வளர்ச்சிக்குத் தடையானது என்கிற ஓலத்தை நான் நிராகரிக்கிறேன். சமயம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் இக பர செüபாக்யமே இறை உணர்வின் தகுதி என்பது புரியும். இப்போது "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து' என்ற குறளைப் படித்தால் விண்கலப் பயணம் விண்ணுலக மோட்சம் இரண்டுக்கும் அந்தக் குறள் பொருந்துவதை உறுதி செய்வீர்கள்.

இப்போது மீண்டும் ஐன்ஸ்டீனைப் பற்றி நான் சொல்ல வேண்டி உள்ளது. பிரபஞ்சம் பெருவெளி குறித்து அவர் துல்லியமாக ஆராய்ந்து சொன்னபோது அவரது சார்பியல் கொள்கை (Theory of Relativity) எள்ளலாகப் பேசப்பட்டது. இந்த கோட்பாடு உலகில் இரண்டே பேருக்குத்தான் புரியும். ஒன்று ஐன்ஸ்டீன். மற்றொன்று கடவுள் என்று கேலி செய்தார்கள். எளிய முறையில் இதை விளங்கிக் கொள்ள எங்கள் குடியிருப்பில் உள்ள பேராசிரியர் நவநீதத்துடன் பேசிக் கொண்டிருந்தேன். Space என்கிற வெளி, சூரியன் போன்ற கோள்களால் வளைகிறது என்பதை உதாரணம் மூலம் விளக்கினார். மெல்லிய துணியின் நான்கு மூலைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு ஒரு ரப்பர் பந்தை அதன்மீது போட்டால் துணி லேசாகத் தொய்வு கொடுக்குமல்லவா அப்படி வெளி, கோள்களால், அவற்றின் புலங்களின ஈர்ப்பால், வளைகிறது. அதனால் எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் ஒளி கூட, வெளியிள் வளைவுகளில் வளைந்து பயணிக்கிறது என்பது ஐன்ஸ்டீன் கோட்பாட்டை பாமரனும் புரிந்து கொள்ளும் படி விளக்கினார். ஐன்ஸ்டீன் சொன்னபோது, ஏற்கவும் முடியாது நிராகரிக்கவும் முடியாது தவித்த அறிவுலகம், முப்பதாண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின்போது சரி என்று ஒப்புக் கொண்டது. சூரியன் பின்னிருக்கும் ஒரு நட்சத்திர ஒளி கிரகணத்தின் (நல்ஹஸ்ரீங்) கண்ணுக்குப் போது புலப்பட்டது. புகைப்படத்தில் அகப்பட்டது. சூரியப்புலம், வெளியில் ஏற்படுத்தும் அழுத்தத்தால் வெளிவளைவதால், வெளி வழி பயணிக்கும் ஒளி (Space) வளைந்து கிரகணத்தின் போது புலப்பட்டது என்று உலகம் கரவொலி எழுப்பி ஐன்ஸ்டீனைப் பாராட்டியது. ஒரு நிருபர் ஐன்ஸ்டீனிடம், "ஒருவேளை இப்படி நடக்காதிருந்தால் நீங்கள் உங்கள் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார். "கடவுளுக்கு இயற்கையைச் சரியாகப் படைக்கத் தெரியவில்லை என்று நினைப்பேன்'' என்று சிரித்தபடி பதில் சொன்னார் ஐன்ஸ்டீன். பாருங்கள் தான் கண்டறிந்த கோட்பாடு மீது எத்தனை உறுதி அவருக்கு. காரணம்... ஐயத்தின் நீங்கித் தெளிந்த காரணத்தால் வானம் அவருக்கு நணியதாகிவிட்டது. இப்படி "எதிலும் திட்டமிடு வெற்றிபெறு' என்பதே இளைஞருக்கு என் அறைகூவல். மிகவும் கனமான விஷயங்களால் வாசகரைச் சங்கடப்படுத்தி விட்டேன் என்று தோன்றுகிறது. அதனால் எளிய ஆனால் நுட்பமான திட்டமிடல் பற்றிப் பேச நினைக்கிறேன். AVM அவர்களைப் பற்றி "அப்பச்சி' என்றொரு புத்தகம் வந்துள்ளது. திட்டமிடுதலில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அப்படியே தருகிறேன்.

கல்யாணச் சாப்பாட்டை அவர் திட்டமிட்ட முறை பிரமிப்பூட்டும். தன் வீட்டுத் திருமணங்களில் உணவின் தரத்திற்கு அவர் தந்த முக்கியத்துவம் வியப்பில்லை. இருந்தாலும் அதை அவர் அணு அணுவாகத் திட்டமிட்ட முறைதான் வியப்புக்குரியது. 

தலைசிறந்த சமையற்கலைஞர்கள்தான் திருமண விருந்து சமையலுக்குப் பொறுப்பேற்பார்கள். காய்கறிகள் தவிர, விருந்தின் மற்ற அனைத்து அயிட்டங்களும் - கல்யாணத்தன்று எப்படிச் சமைக்கப்படுமோ அப்படியே சமைக்கப்பட்டு ஒரு மாதம் முன்பிருந்தே தினமும் ஏவி.எம் அவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் பரிமாறப்படும். குறைகள் இருந்தால் சமையல் கலைஞருக்குத் தெரிவிக்கப்படும். அந்தக் குறையை நிவர்த்தி செய்து மறுநாள் சமையல் நடக்கும். இப்படியே சகல உணவு அயிட்டங்களும் ஒரு முழுமையான தரத்தை அடைந்து விடும்.

இலை எந்த அளவில் இருக்க வேண்டும், என்னென்ன பதார்த்தங்களை இலையில் எங்கெங்கு வைக்க வேண்டும் என்ற லே}அவுட் அவருக்கு முக்கியம். ஒரு பேப்பரை வாழை இலை சைஸுக்கு வெட்டியெடுத்து அதில் என்னென்ன உணவு வகை எங்கெங்கே வைக்கப்பட வேண்டும் என்பதை வரைந்து அதை சமையல் கலைஞரிடம் தந்து விடுவார். எந்தெந்தக் கரண்டிகளில் எவற்றை எடுத்து பரிமாற வேண்டும் என்பதையும் கரண்டிகளைக் கண்ணால் பார்த்து ஒப்புதல் தருவார். அவ்வளவு துல்லியமான திட்டமிடுதலில் அவருடைய குணம். 

பெரிய இடத்துத் திருமணங்களில் வி.வி.ஐ. பிகள் காரின் டிரைவர் சாப்பிட்டாரா என்று கவனிக்க ஆளிருக்காது. பார்க்கிங் பகுதிக்கு அருகிலேயே வசதியாகப் பந்தல் போட்டு கார் டிரைவர்களுக்காகப் பிரத்யேக விருந்து பரிமாறப்படும். டிரைவர்களின் பசி பற்றியும் அவர் யோசித்திருந்தார்.

காலண்டரில் தேதி கிழிக்காமல் இருந்தால் கோபம் வரும். இந்த சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியவில்லையா என்று சப்தம் போடுவார். இன்று வந்ததும் இதையிதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதை தான் மட்டும் கடைப்பிடிக்காமல், தன்னைச் சார்ந்த ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். 

AVM இன் வெற்றி எப்படி என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்குமே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com