எங்கள் குலதெய்வம் ‘கிச்சம்மாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 1

கிச்சம்மளுக்குப் பூஜை முடிந்ததும் பெரியாண்டவரையும் மறக்காமல் நன்றியோடு நினைத்து பூஜை புனஸ்காரங்களுடன் வணங்கி விட்டே பக்தர் கூட்டம் கலைகிறது. வருடா வருடம் மாசி சிவராத்திரியில் பூஜை நடக்கிறது.
எங்கள் குலதெய்வம் ‘கிச்சம்மாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 1

எல்லாக் குல தெய்வக் கோயில்களைப் போலவே எங்களது கோயிலும் பேருந்து அடிக்கடி வராத... விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பேருந்துகளே வராத ஒரு புராதன கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் தான் இருக்கிறது.

கிச்சம்மா!

இது தான் எங்கள் குல தெய்வத்தின் பெயர். 

கிச்சம்மாளின் கதையைக் கேட்பதற்கு முன்பு அருள்பாலிக்கும் திறனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் எங்கள் குலம் காக்கும் ஆதியன்னை. உள்ளூரில் இருந்தாலும் சரி... பிழைப்புக்காக வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி எங்கள் குலத்தைச் சார்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடனடி நிவாரணம் தரக்கூடிய மாமருந்து அவள்! தன்னந்தனித்திருக்கையிலும், தாங்கவொண்ணா துயரிலிருக்கையிலும் ஒரு நொடி தன்னை எண்ணி விழிநீர் சிந்துவோருக்கு பெற்ற தாயாய், உற்ற தோழியாய் அருள்பாலித்து எப்போதும் எங்களுடனே உரைந்திருக்கும் உணர்வைத் தரக்கூடிய எல்லாம் வல்ல அன்னையவள்! எங்கள் குலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் அனைவரையும் நாங்கள் எங்கள் அன்னையின் ரூபமாகவே கருதி அவளது பெயரை முதலில் வைத்துப் பிறகே வேறு பெயர்களிட்டு அழைக்கிறோம்! அவளது கதையைக் கேட்டீர்களென்றால் அனிச்சைச் செயலாக உங்கள் கண்கள் கசியக்கூடும். 

ஓரு ஊரில் ஐந்து அண்ணன் தம்பிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தனர், அவர்களுக்கு ஒரே ஓரு தங்கை அவள் தான் கிச்சம்மா. அண்ணன்களின் செல்லத் தங்கையாக வளர்ந்து அந்த ஊரில் செல்வாக்கான குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக இருந்த கிச்சம்மாளுக்கும் வழக்கம் போல அண்ணிகள், நமது மெகா சீரியல் அண்ணிகள் போலக் கெடுமதி கொண்டவர்களாகவே அமைந்து அவளது வீட்டிற்கு வாழ வருகின்றனர்.

முதலில் சின்ன சின்ன உரசல்கள் மட்டும் தான். வந்த அண்ணிகளில் ஒருத்திக்காவது நாத்தனாரின் மேல் துளி பிரியம் கிடையாது. எப்போதடா இவளை எவன் தலையிலாவது கட்டி வீட்டை விட்டுத் துரத்துவோம் என்று இருந்திருப்பார்கள் போல?!

அண்ணன்கள் மட்டும் தான் ஆதரவு... மற்றபடி பெற்றவர்களும் கிச்சம்மாள் பிறந்த சில வருடங்களில் கடமை முடிந்ததென இறந்து விட, இப்போதைக்கு அண்ணன்கள் வேலை, வெட்டி என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டால் கிச்சம்மாவைச் சாப்பிடச் சொல்லவோ... நலம் பேணவோ... சிரித்துப் பேசி கொண்டாடவோ வீட்டில் ஓரு நாதியுமில்லை.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் தனிமையும்... தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கமும் அவளை வாட்டத் தொடங்கியது. அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு நாடார் குடி இருந்தார்... அவருக்கும் குடும்பம் உண்டு. கை ராட்டையில் நூல் நூற்று அதை விற்று அன்றாடம் பாடு பார்த்துக் கொண்டு அந்த ஊரில் அவர்களும் கொஞ்ச காலமாக வாழ்ந்து வந்தனர்.

அவரது வீட்டுப் பெண்கள் கிச்சம்மாவுடன் சிறிது அன்பாகப் பழகுவார்கள். இவளும் எப்போதாவது அங்கே போய் கை ராட்டையில் நூற்பதுண்டு. முன்பு எப்போதாவது என்றிருந்த பழக்கம் பிற்பாடு அண்ணிகள் வந்ததும் அவர்களது உதாசீனத்தைத் தாங்க முடியாமல்... அதை அண்ணன்களிடமும் சொல்ல முடியாமல்... மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் இருந்த அந்த அறியாப் பெண் கிச்சம்மா அன்பு கண்ட இடம் இதம் என்று எண்ணி அந்த நாடார் வீட்டுப் பெண்களுடனேயே பகல் பொழுது பெரும்பான்மையும் கழிக்கத் தொடங்கினாள்.

ராட்டையில் பேசிக் கொண்டே நூல் நூற்பது...

ஒருவருக்கொருவர் விடுகதை போட்டு அதை அழிப்பது....

தாயம் ஆடுவது...

பல்லாங்குழி அடுவது...

ஆற்றுக்குத் தண்ணீர் எடுத்து வர ஒன்றாகப் போவது.. வருவது

என்று ஓரு தாய் மக்களாகப் பழக ஆரம்பித்து விட்டார்கள். இவளோ தெலுங்கு நாயக்கர் குடும்பத்துப் பெண். அவர்களோ நாடார் குடும்பத்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அண்ணிகளுக்கு அவளது நிம்மதியைக் காணச் சகிக்கவில்லை. நாம் அவளை நோகடித்து விரட்டலாம் என்று பார்த்தால் அவள் இப்படி சந்தோசமாக இனியும் இருப்பதா?! என்று நினைத்தார்களோ என்னவோ?

அண்ணன்கள் வீடு திரும்பியதும் தங்கையைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம்... சாடை மாடையாக அவளது நடத்தையைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்ல ஆரம்பித்தனர். முதலில் தங்கள் தங்கை அப்படிப்பட்டவள் இல்லை என்று மனைவிகளிடம் சண்டையிட்ட அண்ணன்மார்கள் நாளாக... நாளாகத் தங்களது சண்டையில் வலுவிழந்தனர்.

காரணம் இந்த அறியாப் பெண் சில நாட்கள் அண்ணன்கள் வீடு திரும்பிய பிறகும் கூட வெகு நேரம் கழித்து வீடு திரும்பியது தான். தூங்கவும்... குளிக்கவும் மட்டுமே அவள் வீட்டில் இருப்பது என்று நிலைமை மாறி விட்டது. பாவம் அந்த அபலைப் பெண் தன்னை ஓரு மனுஷியாக மதித்து நடத்தும் இடத்தை நாடி அவள் ஓடிக் கொண்டிருப்பது வயல் வேலைகளில் அலுத்து சலித்து வீடு திரும்பும் அண்ணன்களுக்குப் புரிந்து விடும் என்று நம்பினாளோ என்னவோ? அவளும் அண்ணிகளின் உதாசீனம் பற்றி அவர்களிடம் எதுவும் இதுநாள் வரை சொன்னாளில்லை.

எங்கே குடும்ப ஒற்றுமை கெட்டு விடுமோ என்று கூட அவள் எண்ணியிருக்கலாம், சில நாட்கள் இப்படிக் கழிந்தன. பிறகு ஒருநாள் மூத்த அண்ணன் வந்து கிச்சம்மாவிடம்;

நீ இனிமேல் அந்த நாடார் வீட்டுக்குப் போகதே... என்று மட்டும் சொல்லி விட்டுப் போய்விட்டார். காரணம் புரியாமல் மருகினாலும் அறியாத சின்னப் பெண் தானே, அண்ணன்கள் வெளியேறியதும் அவள் பாட்டுக்கு நாடார் வீட்டுக்கு எப்போதும் போல் போய்வர இருந்திருக்கிறாள்.

அப்புறம் இளைய அண்ணன் வந்து ஒருநாள் தங்கையிடம், ஏனம்மா பெரிய அண்ணன் தடுத்தும் கூட நீ அங்கே போய் வந்து கொண்டிருக்கிறாய்? போதும் இனி போகாதே! என்றிருக்கிறான். கிச்சம்மாவுக்கு இப்போதும் காரணம் தெரியாவிட்டாலும் எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழக்கமில்லாத காரணத்தால்... ஏதோ ஜாதிக்காகச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அமைதியாகி விட்டாள்.

அதோடு அன்றைக்கு பெரிய அண்ணன் தங்கைக்கு நல்ல வரன் அமைந்திருப்பதாகவும் கூடிய சீக்கிரம் கல்யாணம் வைத்து விட வேண்டியது தான் என்றெல்லாம் கூறவே; கிச்சம்மா சந்தோசமானாள் ... கூடவே கல்யாணமான பிறகு தான் எந்த ஊரில் வாழப் போகிறோமோ?

கடைசி கடைசியாக இன்று ஓரு நாள் மட்டும் அந்த நாடர் வீட்டுக்கு போய் கல்யாண சேதியைச் சொல்லி விட்டு வந்து விடலாம் என்று அண்ணாக்கள் வெளியேறியதும் இவள் அங்கே ஓடி இருக்கிறாள்.

சும்மாவே வாயை மென்று கொண்டிருந்த அண்ணிகளுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா என்ன? அவளைப் பற்றி வாயில் வராத வார்த்தைகள் பல சொல்லி தங்களுக்குள் புறம் பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்நேரம் எதையோ மறந்து போய் வயலுக்குப் போன அண்ணன்களில் ஒருவர் மறந்த பொருளை எடுக்க வீடு வரவும், அவரது காதுகளில் மனைவிகளின் நாராசப் பேச்சு விழுகிறது. 

‘இப்படியா கல்யாணம் பேசி முடித்த ஓரு வயசு வந்த கௌரவமான குடும்பத்துப் பெண் வெட்கம் கேட்டுப் போய் அந்த வீட்டுக்கு இப்படி ஓடுவாள்?’

‘இத்தனைக்கும் அவளது அண்ணாக்கள் இத்தனை தூரம் கண்டித்தும் அவள் இப்படி செய்தாளானால் அண்ணன்களின் கௌரவம் என்ன ஆவது? ஊர் என்ன பேசும்?’

‘நாளை பெண் பார்த்து நிச்சயிக்க வருபவர்கள் இந்த விஷயமெல்லாம் தெரிந்தால் எப்படிக் குத்திக்காட்டிப் பேசி மட்டம் தட்டுவார்கள்?’

‘இத்தனை திமிரும் ஆணவமும் இன்னொரு குடும்பத்தில் வாழப் போகும் பெண்ணுக்கு தேவையா?’

‘அவளுக்கென்ன ஊரெல்லாம் அவளை வளர்த்த அண்ணன்களைத் தானே குறை சொல்லி நாக்கை பிடுங்கிக் கொள்ளும் படி கேள்வி கேட்கும்? இவளை எல்லாம் நகை நட்டு செலவு செய்து இன்னொரு இடத்துக்கு வாழ அனுப்பினால் அங்கே போயும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள் என்று என்ன நிச்சயம்?’

‘இவளால் அவளது அண்ணன்களுக்கு மட்டுமா கெட்ட பெயர்... மொத்தக் குடும்பமும் அல்லவா ஊரார் முன்பு மானம் கெட்டு நிற்க வேண்டும்!’

இப்படியெல்லாம் ஏதேதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், இதை கேட்ட அண்ணன் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

அண்ணிகளுக்குள் நடந்து கொண்டிருந்த சம்பாசனை எதுவும் தெரியாத கிச்சம்மாள் எப்போதும் போல வீடு திரும்புகிறாள் கொஞ்சம் சீக்கிரமாகவே;

ஒட்டுக் கேட்ட அண்ணன் போய் மற்ற அண்ணன்களிடம் என்ன சொன்னானோ?

அத்தனை பெரும் அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டனர். 

மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை .

பொழுது விடிந்தது ;

என்றும் இல்லாத அதிசயமாக அன்றைக்குப் போய் பெரிய அண்ணன் கோழி அடித்துக் குழம்பு வைக்கச் சொன்னார். சரி என்று வீட்டில் தடா புடலாக கோழி அடித்துக் குழம்பு வைத்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தங்கையுடன் சாப்பிட்டனர் .

அண்ணன்கள் ஒவ்வொருவரும் பாசம் மிகுந்து தங்கைக்கு மாறி மாறிப் பரிமாறினர். கிச்சம்மவுக்கு நெஞ்சடைக்க அழுகை வந்தது அவர்களது பாசத்தைக் கண்டு; இப்படிப் பட்ட பாசக்கார அண்ணன்களை விட்டு விட்டு யாரோ ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறோமே!

யாரோ ...எந்த ஊரோ ?

அந்த ஊர் இந்த ஊரிலிருந்து இன்னும் எத்தனை தூரமோ?

நினைத்தால் உடனே புறப்பட்டு வரக்கூடிய தொலைவோ இல்லையோ?

என்ன தான் முகம் கொட்த்துப் பேசா விட்டாலும் அண்ணிகளைப் பிரிவதும் கூட இந்த நேரத்தில் இவ்வளவு துக்கமாக இருக்கிறதே ?

என்று அந்த பேதைப்பெண் எதையெதையோ நினைத்து நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள் .

ஆயிற்று ...எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள் .

கிச்சம்மா ரொம்ப நாட்கள் கழித்து அண்ணிகள் வருவதற்கு முன்பு தன் வீட்டில் எப்படி சுதந்திரமாகப் புழங்கினாலோ அதே போல இருப்பதற்கு தைரியம் உள்ளவளாய் ;பின்வாசலில் தலையணை போட்டு கொஞ்சம் கண்ணயரலாம் என்று ஆசை ஆசையாக பின்வாசலுக்கு நேரே வெறும் பாயில் தலையணை இட்டுக் கொண்டு கோழிக் குழம்பு தந்த தூக்கம் மெதுவாக கண்ணைச் சுழற்ற ஒருக்களித்து படுத்து கண் அயர்ந்தாள்.

ஏதேதோ கனவுகள் சூழ மெல்ல மெல்ல உறங்கிப் போனாள்;ரொம்ப நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் .

தன்னைக் காப்பாற்ற அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியோ என்னவோ?

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே அறிந்துகொள்ள தேவையில்லை எனும்படி ஆழ்ந்த உறக்கம் .

ஆனாலும் மிகப் பயங்கரமான நேரத்தை நாம் உணரா விட்டாலும் நமது புலன்கள் அறிந்து கொள்ளுமாமே?! அப்படித்தான் தலைமாட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டு; வீட்டுப் பூனையோ... ஆட்டுக் குட்டியோ? என்று அரைக்கண் தூக்கமாய் விழிகளை மலர்த்தியவள் அதற்குப் பிறகு அதிர்ச்சியில் பிரமை பிடித்துப் போய் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, தொண்டை வறண்டு போய் மலங்க மலங்க விழித்தாள்.

எதிரே... அம்மா சீதனமாகக் கொண்டு வந்த பழைய அம்மிக் குழவியை ஏந்தியவாறு பெரிய அண்ணன் நின்றார். வெகு உறுதியாக அதை தன் தங்கையின் தலையில் போட்டே தீருவது என்ற முடிவோடு.
கிச்சம்மா அச்சத்திலும், சொல்லவொண்ணாத் துன்பத்திலுமாகப் பேச்சிழந்து ஊமையானாள்!

திக்கித் திணறி... அண்ணா என்பதற்குள் அந்த பாசமிக்க அண்ணன்; தன் அழகான சின்னத் தங்கை... கடைசியாய் பிறந்தாலும் பாதுகாக்க அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்த தங்கை,

தூங்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட தன் அண்ணன்களின் பாசத்தில் உருகிப் போய் திணறிய அந்த அன்பான வெள்ளந்தி தங்கையின் இளம் தலையில் அந்தப் பழைய பெரிய அம்மிக் குழவியை போட்டே விட்டான் .

தங்கையின் தலை சிதறிய அடுத்த நொடி உயிர்ப்பறவை கதறிக் கொண்டு பறந்தது. அண்ணா நீயா இப்படி? என்று கேட்டுக் கொண்டே அந்த உயிர் தெருவில் கதறிக் கொண்டு பறக்க அந்நேரம் மாலை மயங்கும் அந்தி நேரம்!

"அந்த ஊர் வழக்கப் படி ஊர்க் காவல் தெய்வம் பெரியாண்டவர் வேட்டைக்குப் புறப்படும் நேரம்.

"ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க வேட்டைக்குத் தன் பைரவ மூர்த்தியுடன் எதிரே வந்த பெரியாண்டவர் தன் காலடியில் கதறிக் கொண்டு வந்து மோதிய உயிரின் அலறல் கேட்டு ஒரு வினாடி திகைத்து நின்றாராம்.

மறுநிமிடம் நடந்ததை உணர்ந்து "அண்ணா என்று அபயக் குரலோடு என் காலடியில் விழுந்த கன்னியே இன்று முதல் நானே உனக்கு அண்ணன்... உனக்கு காவல்... என்று  அபயமளித்து தன் கோயிலில் தனி சன்னதி கொடுத்து ஆட்கொண்டாராம்.

தன் சொந்த அண்ணன்களால் மிக மோசமாக நம்பிக்கைத் துரோகம் இழைத்து கொடூரமாக கொல்லப் பட்ட கிச்சம்மா அன்று முதல் "பெரியாண்டவரால்" குலம் காக்கும் குல தெய்வமானாள் .

இதோடு கதை முடிகிறது .

இந்தக் கோவில் சாத்தூருக்கு அருகே இருக்கிறது .

உண்மையில் நடந்த கதை என்று பேசிக் கொள்கிறார்கள் .

கிச்சம்மளுக்குப் பூஜை முடிந்ததும் பெரியாண்டவரையும் மறக்காமல் நன்றியோடு நினைத்து பூஜை புனஸ்காரங்களுடன் வணங்கி விட்டே பக்தர் கூட்டம் கலைகிறது. 

வருடா வருடம் மாசி மாதம் பூஜை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com