அம்மியில் அரைத்து சாப்பிட்ட வரை ஆரோக்கியமாக இருந்தோம்!

அம்பத்தூர் ஓ.டி ரயில்வே பாலம் அருகில் போக்குவரத்து பேரிரைச்சல் நிறைந்த அந்தப் பகுதியில் தன்னந்தன்னியாக
அம்மியில் அரைத்து சாப்பிட்ட வரை ஆரோக்கியமாக இருந்தோம்!

அம்பத்தூர் ஓ.டி ரயில்வே பாலம் அருகில் போக்குவரத்து பேரிரைச்சல் நிறைந்த அந்தப் பகுதியில் தன்னந்தனியாக சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய குடிசையில் அம்மி கல், உரல் செய்து விற்பனை செய்வதையும், அதனுள்ளே இருந்து எழும் உளிக்கல் இடும் ஓசையையும் அந்தப் பகுதியைக் கடந்து செல்பவர்கள் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. நமது கவனத்தை ஈர்த்த அந்த கல் உரல் செய்பவரான லட்சுமி குடும்பத்தாரை சந்தித்தோம்:

'கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து கடை போட்டோம். நல்ல வியாபாரம் ஆனது. அதனால இங்கேயே குடிசைப் போட்டு தங்கிவிட்டோம். எங்களுக்கு பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் அருகில் உள்ள திருபனம்பூர். எங்களுடைய பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே அம்மி, உரல் செய்வதுதான் தொழில். பரம்பரை தொழிலானதால், எங்களது அப்பாவிற்கு பிறகு நாங்களும் இந்த தொழிலையே கற்றுக் கொண்டு செய்து வருகிறோம். இந்த தொழிலைத் தவிர எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆம்பள, பொம்பள என எல்லாருமே அம்மி, உரல்ன்னு எல்லாமே செய்வோம்.

அந்தக் காலத்தில் எங்க ஆளுங்க, வீட்டில உள்ள ஆம்பள புள்ளைக்கு 5 வயசு ஆனதும் அம்மியும், உரலும் செய்ய கற்றுக் கொள்ள ஸ்கூல் மாதிரி கொண்டாந்து விட்டுடுவாங்க. முதல் படிப்பு பொத்தல் போடுறதல தொடங்கி படிப்படியா போய் கடைசியா அறுவ போடச் சொல்லித் தருவாங்க. ஒரு புள்ள முழுசா இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள குறைஞ்சது 16 வருஷம் ஆகும்.

அம்மியும் - உரலும் சக்தியும், சிவனும் மாதிரி வீட்டோட சாமி. அதனாலதான் அந்தக் காலத்தில் அம்மியும், உரலும் இல்லாத வீடே இருக்காது. புருஷனும், பொண்டாட்டியும் அம்மி கல்லும், ஆட்டு உரலும் மாதிரி நீண்ட காலத்துக்கு நல்ல ஆயுளோட உறுதியா சேர்ந்து வாழணும்தான் கல்யாணத்துல அம்மியும், உரலையும் வைப்பாங்க.

எங்கள் பாட்டன் காலத்தில் 25 முதல் 35 ரூபாய்க்கு விற்ற அம்மி, உரல். என் அப்பா காலத்தில் 100-150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போதெல்லாம் எங்களுக்கு ஓய்வில்லாமல் வேலை இருந்து கொண்டே இருக்கும். காஞ்சிபுரத்தை ஒட்டிய சுற்று கிராமங்களான வாலாஜா, சங்கராபுரம் போன்ற கிராமங்களில் உள்ள மலைகளுக்குச் சென்று இளவட்ட ஆம்பளைங்க கல் அறுத்து வந்து போடுவாங்க, மீதி உள்ள ஆம்பள, பொம்பள எல்லாம் சேர்ந்து அம்மி, உரல் எல்லாம் செய்வோம். முதல் போட வேண்டிய அவசியமில்லாததால் நல்ல லாபம் கிடைத்தது.

இப்போது நாங்க நேரடியாக கல் அறுக்க முடியாது, அரசாங்கம் தடை விதிச்சாட்டாங்க. கான்ட்ராக்ட்காரங்கதான் அறுத்து தரணும். அதனால கல்லுக்கு பணம் கட்டி வாங்கி வர வேண்டியதா இருக்குது. மேலும், பெட்ரோல் விலை உயர்வு, வண்டி கூலி அது இதுன்னு இப்போ முதலே கணிசமாக ஒரு தொகை வந்துடுது. இதற்கு மேலே செய்கூலியை சேர்த்து இப்போ அம்மி 600 ரூபாய்க்கும், உரல் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம். நியாயமா நாங்க அம்மியை 2000த்துக்கும், உரலை 3,000க்கும் விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனா, அந்த விலைக்கு மிக்ஸி, கிரைண்டர்ன்னு கிடைக்கிறதால 2000, 3000 கொடுத்து அம்மியும், உரலும் வாங்க யாரு இருக்கா? அந்த மவுசு எல்லாம் இப்போ மாறிப் போச்சு.

ஊர்லயும் எங்க ஜனங்க குறைஞ்சு போய்ட்டாங்க. இந்தத் தொழில விட்டுட்டு வெவ்வேறு தொழிலுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. எங்க பேரப்பிள்ளைங்க காலத்துல இந்தத் தொழில் இல்லாமயே போய்டும்ன்னுதான் நினைக்கிறேன். இப்போ, எங்க பையன் இந்த வேலையை எடுத்துச் செய்றான். நாங்க அவனுக்கு ஒத்தாசையா இருக்கிறோம். மருமக, பேர குழந்தைகள்ன்னு இந்த குடிசையிலதான் தங்கியிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, அம்மியில மசாலா அரைச்சு குழம்பு வெக்கறதுக்கும், ஆட்டு உரலில் மாவு அரைத்து இட்லி சுட்டு சாப்பிடுவதிலும் உள்ள ருசியே தனிதாங்க. அதெல்லாம் இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரியாமயே போய்டுச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

அம்மியிலும், உரலிலும் அரைத்து சமைத்து சாப்பிட்ட வரை ஜனங்களும் ஆரோக்கியமாதான் இருந்தாங்க. அதெல்லாம் இப்போ மறக்கடிக்கப்பட்டதால, சுகரு, பீபின்னு கண்ட நோயுங்க வந்து ஆட்டிப் படைக்குது. இப்பல்லாம், கல்யாணம்- காட்சி, தீபாவளி பண்டிகைன்னு வந்தா தான் அம்மி, உரலைத் தேடி வர்றாங்க. ஒருநாளைக்கு ஒரு அம்மி, உரல் விற்பதே பெரிய விஷயமா இருக்கு. அதனால, இப்போ தொங்கு ஊஞ்சல் செய்யவும் பழக்கிக் கொண்டு வர்றோம்.

பெரிய கடைகள், ரோட்டோர கடைகள்ன்னு நிறைய இடத்துல நாமக்கல், சேலம் பகுதியில மிஷ்ன்ல செய்ற சின்ன உரலை வாங்கிவந்து விக்கிறாங்க. சரி நாங்களும் வாங்கி வந்து விற்கலாம்ன்னு போய்பார்த்தோம். அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரிந்தது. அந்த கல்லு எல்லாம் உறுதியான மலைக்கல்லுல செய்யலங்க. பாதி கல்லு மாவுக் கல்லுப்போட்டு செய்றாங்க. அது வாங்கி வந்து உபயோகித்தோம்ன்னா, சீக்கிரத்தில் உடைஞ்சு போய்டும். அதுவுமில்லாம, அந்த கல்லுல மசாலா இடிக்கும்போது சிறு மண் நறநறன்னு வந்துக்கிட்டே இருக்கும். இதையெல்லாம் பார்த்துட்டு எங்களுக்கு வாங்க புடிக்காம திரும்பி வந்துட்டோம்.

இப்போது நாங்களே நல்ல மலைக்கல்லா பார்த்து வாங்கி வந்து சின்ன உரல் செய்து விற்க ஆரம்பிச்சுட்டோம். பெரிய வருமானம் இல்லனாலும், ஏதோ, எங்க குடும்பத்த நடத்துற அளவுக்கு வருமானம் கிடைக்குது அதுவே போதும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com