வெள்ளைக்காரனை விடுங்க, இந்த ஊர்க்காரனுக்கே புரியல எந்த காந்தி ரூல் பண்ணார்னு! (வி. கல்யாணம் நேர்காணல் பார்ட் - 1)

அப்போ தான் பென்சிலின் புதுசா வந்திருக்கு வெளிநாட்டுல. தேவதாஸ் காந்தி லண்டன்ல இருந்து அந்த மருந்தை தன் அம்மாவுக்காக வரவழைச்சார். ஆனா, காந்தி அதை கொடுக்கப்படாதுன்னுட்டார். காந்தி பிலீவ்டு இன் நேச்சர்
வி.கல்யாணம், மகாத்மாவின் முன்னாள் தனிச்செயலர்.
வி.கல்யாணம், மகாத்மாவின் முன்னாள் தனிச்செயலர்.

நம்முடைய தேசப்பிதா காந்தியின் தனிச்செயலராக 4 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் பெரியவர் வி.கல்யாணம். காந்தியுடன் தொடர்புடைய இந்தியாவின் மூத்த குடிமக்கள் சிலரது பட்டியலில் தமிழக அளவில் இன்று எஞ்சியுள்ளவர் இவர் மட்டுமே! அவருடன் உரையாடிய போது அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே வாசகர்களுக்காக;

கேள்வி 1

ஐயா, உங்களைப் பற்றி இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, தேசப்பிதாவுடன் நீங்கள் இணைந்த கதையை ஆரம்பத்தில் இருந்து எங்களுக்குச் சொல்லுங்களேன்...

நான் பிறந்தது சிம்லாவில், சிம்லாவிலும், டெல்லியிலுமாக அப்போது மாற்றி, மாற்றி கவர்ன்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. என் படிப்பெல்லாம் சிம்லாவில் தான் நடந்தது. நான் கிராஜுவேட் ஆகும் போது டெல்லியில் இருந்தேன். அப்போ தான் காந்திங்கறவர் ஒருத்தர் இண்டிபெண்டன்ஸ் வேணும்னு சொல்றார்னு கேள்விப்பட்டேன். அப்போ தான் காந்தி எதுக்கு இண்டிபெண்டன்ஸ் வேணும்னு கேட்கறார்? நம்ம நல்லாத்தானே இருக்கோம். வெள்ளைக்காரன் நம்மள நல்லாத்தான் பார்த்துக்கறான். அவன் ரொம்ப நல்லவன் அப்படினெல்லாம் சொல்லி பேசாம உட்கார்ந்திருந்தேன். அப்புறம், அங்க பிரிட்டிஷ் கவர்மெண்ட்லயே வேலைக்கு இருந்தேன். அப்போ எனக்கு 250 ரூபாய் சம்பளம். அந்த 250 ரூபாய் சம்பளத்துல எனக்கு செலவு ஒன்னும் இல்லை. என் அப்பாவோடயே நான் இருந்ததுனால எனக்கு அந்த 250 ரூபாயில மிச்சம் இருந்தது. ரெண்டு வருஷம் வேலையில இருந்தேன். கிட்டத்தட்ட 6000 ரூபாய் கைல வந்தது. அந்தச் சமயம் பார்த்து எனக்கு காந்தி கிட்டப் போய் சேரனும்னு ஆசை வந்தது. டெல்லிக்குப் போனேன். அப்போ 6 மாசம் டெல்லியில தான் இருக்கனும், அதனால டெல்லிக்குப் போனேன். அங்க தேவதாஸ் காந்தி எனக்குப் பழக்கம். அவர் காந்தியோட பையன்கறது அப்போ எனக்குத் தெரியாது. அவர் காந்தியோட நாலாவது பையன். அவர் அப்போ இந்துஸ்தான் டைம்ஸோட எடிட்டரா இருந்தார். அவர் கிட்டப்போய் சொன்னேன். எனக்கு ஆஃபீஸ் வேலை பிடிக்கல.. மேனுவல் வொர்க் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஏன்னா, ஆஃபீஸ்ல எனக்கு ஆஃபீஸரா இருந்த பிரிட்டிஷ்காரன் எனக்குப் பக்கத்து வீடு. அவன் சாயந்திரமான என்கூடவே வீட்டுக்கு வந்து ஹாஃப் பேண்ட் போட்டுக்கிட்டு கார்டன்ல இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான். அந்த கார்டன் வேலை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நானும் அதையே பிடிச்சுண்டு இன்னி வரைக்கும் பண்ணிண்டு இருந்தேன். என் வீட்ல மெட்ராஸ் சிட்டியிலேயே பெஸ்ட் கார்டன் இருந்தது. இப்போ நான் எம்பொண்ணு வீட்டுக்கு வந்துட்டேன். எல்லாம் நாசமா போயிடுத்து.

வெள்ளைக்காரன் கிட்ட இருந்து கார்டன் வொர்க் மட்டுமா நான் கத்துண்டேன்?! அவன் கார்டன் வொர்க் முடிஞ்சதும் வீட்டுக்குள்ள போய் அதைத் துடைப்பான், இதைத் துடைப்பான், அப்புறமா எலெக்ட்ரிசிட்டி செக் பண்ணுவான். நமக்கெல்லாம் எலெக்ட்ரிசிட்டி போய்டுச்சுன்னா அதை சரி பண்ணத் தெரியாது. எலெட்ரீசியனைக் கூப்பிடறோம். ஆனா, நான் அதை வெள்ளைக்காரங்கிட்ட இருந்து கத்துண்டேன். அந்த மாதிரி மேனுவல் வொர்க் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதைத்தான் நான் தேவதாஸ் காந்தி கிட்ட சொன்னேன். 

பெரியவர் வி.கல்யாணத்துடனான உரையாடலை விடியோ வடிவில் பார்க்க விரும்புகிறவர்களுக்கு...

அவர் சொன்னார்; மேனுவல் வொர்க் உனக்குப் பிடிச்சிருந்தா ஏதாவது ஒரு ஆசிரமத்துல போய்ச் சேரு. அங்க தான் எல்லாரும் மேனுவல் வொர்க் பண்ணுவா. பெருக்குவா, துடைப்பா, அங்க போன்னார். அவர் பேச்சைக் கேட்டுண்டு நான் சேவாக்கிராம் ஆசிரமத்துக்குப் போனேன். அது காந்தியோடது. அங்க இருக்கற மேனேஜருக்கு தேவதாஸ் காந்தி ஒரு லெட்டர் கொடுத்தனுப்பிச்சார். 

‘கல்யாணம்னு ஒரு பையன், அவன் தமிழ்நாட்டுப் பையன். பிறந்த வளர்ந்ததெல்லாம் டெல்லி சிம்லால. அவன் ஆசிரமத்துல சேரனும்னு இருக்கான். அவன அனுப்பறேன். சேர்த்துக்குங்கன்னார்.’

அங்க போய் சேர்ந்துட்டேன். அங்க சேவாகிராம் ஆசிரமம் போனபோது கூட அது காந்தியோட ஆசிரமம்னு எனக்குத் தெரியாது. அனுப்பிச்சவரும் காந்தியோட பிள்ளைன்னு எனக்குத் தெரியாது. அங்க இருந்த போது என்ன வேலை பண்ணேன். எல்லாமே மேனுவல் வொர்க். எனக்கு ஆஃபீஸ் வொர்க் பிடிக்காதுன்னு தான அங்க போனேன். சரி, ஆஃபீஸ் வேலை பிடிக்காதுன்னா ஃபீல்டு வொர்க் பண்னுன்னு சொல்லிட்டாங்க. அங்க ஆசிரமத்துக்கு சொந்தமா பெரிய வயல் இருந்தது. சேவாகிராம ஆசிரமத்தை காந்திக்கு ஜம்னாலால் பஜாஜ் கொடுத்தார். பெரிய வாஸ்ட் லேண்ட் அதுல ஆசிரமத்தைக் கட்டி பின்னால பெரிய வயலோட கொடுத்தார். அங்க நான் காலைல எழுந்து வயலுக்குப் போயிடுவேன். 10 மணி வரைக்கும் வயல்ல வேலை பார்ப்பேன். அப்புறமா ஆசிரமத்துக்குத் திரும்ப வந்துடுவேன். அப்புறம் என்ன பண்றது? ஆஃபீஸ் வேலை பிடிக்காததுனால அங்க சும்மா உட்கார்ந்திருப்பேன். அப்போ, அங்க காந்திக்கு நிறைய கடிதங்கள் வரும். ஆனா, காந்தி தான் அப்போ இங்க இல்லையே, அவர் ஆஹாகான் பேலஸ்ல சிறை வைக்கப்பட்டிருந்தார்.  1943 ஆம் வருஷத்தைப் பத்தி நான் சொல்லிண்டிருக்கேன். அப்போ தான் நான் சேவாகிராம் போனேன். காந்திய அப்போ வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. அப்போ காந்திக்கு வர்ற லெட்டர் எல்லாம் அவரைப் போய்ச் சேரக்கூடாதுன்னு வெள்ளைக்காரன் ஒரு ரூல் போட்டிருந்தான். அதனால அவருக்கு வர்ற லெட்டரெல்லாம் ஆசிரமத்துக்கு வந்துண்டிருந்தது. ஒருநாளைக்கு 30 லெட்டர் வரும். காந்தி ரெண்டு வருஷம் ஆஹாகான் பேலஸ்ல இருந்தார். அப்போ யோசிச்சுப் பாருங்கோ எத்தனை லெட்டர் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்திருக்கும்னு. அப்போ, என் வேலை என்ன தெரியுமா? வயல்ல இருந்து வந்ததுக்கப்புறம் ஆஃபீஸ்ல உட்காரனும். ஆஃபீஸ் வேலை எனக்குப் பிடிக்காது. அதனால அவங்களும் எனக்கு ஆஃபீஸ் வேலை கொடுக்கலை. அதுக்குப் பதிலா இந்த லெட்டரெல்லாம் வாங்கி பிரிச்சுப் பார்க்கனும். பார்த்துட்டு ஒவ்வொண்ணையும் மொழிவாரியா பிரிச்சி அடுக்கிடனும். தமிழ் தனியா, இந்தி தனியா, உருது தனியா, இங்லீஷ் தனியா. வெள்ளைக்காரன் கிட்ட இருந்து வந்தது தனியா, நிறைய லெட்டர்ஸ் வெளிநாட்டுல இருந்தும் வரும். காந்தியோட ஆட்டோகிராப் வேனும், ஃபோட்டோகிராப் வேணும்னு வரும். நாட்டுல இருக்கறவா எல்லாம் நாட்டைப்பத்தி பேசறதுக்கு நிறைய எழுதி இருப்பா. அதுக்கெல்லாம் காந்தி பதில் போடனும். ஆனா, அந்த லெட்டரெல்லாம் அவருக்குப் போய் சேரலை. ஆசிரமத்துலயே தான் இருக்கும். இதையே பார்த்துண்டு இருந்தேன். அந்த லெட்டர்ஸ் எல்லாம் பார்த்தோடனே தான் எனக்குத் தெரிய வந்தது இது காந்தியோட ஆசிரமம்னு. காந்தியோட செக்ரட்டரி ரொம்பப் பெரிய ஆள். மஹா தேவ் தேசாய்... அவரோட கம்பேர் பண்ணும் போது நானெல்லாம் ஆர்டினரி கிளெர்க். அவர் முன்னால் நான் தூசி.  அவர் 1942 ஆம் வருஷம் ஆகஸ்டு 15 ஆம் தேதி இறந்துட்டார். நான் பிறந்தது 1922 ஆகஸ்டு 15. மஹாதேவ் தேசாய் ஆஹாகான் பேலஸ்லயே இறந்துட்டார். அவரை அரெஸ்ட் பண்ணி காந்தியோட அங்க கொண்டு போனது 1942 ஆகஸ்டு 9 ஆம் தேதி அன்னைக்குத்தான் வெள்ளையனே வெளியேறு போராட்டம். அதுக்காகத்தான் காந்தி, கஸ்தூர்பா காந்தி, மஹாதேவ் தேசாய் எல்லாரையும் கைது பண்ணி பிரிட்டிஷ்காரன் ஆஹாகான் பேலஸ்ல சிறை வைச்சான். அங்க போன ஒரே வாரத்துல தேசாய் இறந்துட்டார். அவர் போனது காந்திக்கு ரொம்ப மன வருத்தமாயிடுத்து. தேசாயை நினைச்சு காந்தி ரொம்ப கஷ்டப்பட்டார். ஏன்னா, அவரைப் போல ஒரு செக்ரட்டரி காந்திக்கு கிடைக்காது. இன்னும் 100 வருஷம் ஆனாலும் கிடைக்காது. அவ்வளவு நல்ல ஆளு அவர். இதனால அப்போலாம் பொழுதுவிடிஞ்சா காந்தி சோகமா இருப்பார். அதுக்கு ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அதே ஆஹாகான் பேலஸ்ல காந்தியோட வைஃப் கஸ்தூர்பா காந்தி செத்துப் போயிட்டாங்க. கஸ்தூர்பா காந்திக்கு ஒரு வியாதி வந்தது. அதுக்கு பென்சிலின் கொடுத்தா சரியா போயிடும்னு சொன்னா. அப்போ தான் பென்சிலின் புதுசா வந்திருக்கு வெளிநாட்டுல. தேவதாஸ் காந்தி லண்டன்ல இருந்து அந்த மருந்தை தன் அம்மாவுக்காக வரவழைச்சார். ஆனா, காந்தி அதை கொடுக்கப்படாதுன்னுட்டார். காந்தி பிலீவ்டு இன் நேச்சர் கியூர். அதைக் கொடுத்திருந்தா இன்னைக்கு பொழைச்சிருப்பா அவ. அதைக் கொடுக்காம விட்டுட்டா. எனக்கு வெளிநாட்டு மருந்தெல்லாம் பிடிக்காது. உள்நாட்டு மருந்து தான் வேணும் ஆயூர் வேதா வேணும், ஹோமியோபதி வேணும்னு சொல்லிட்டார். அதனால அவளும் செத்துப்போயிட்டா. இப்ப காந்தி ஒருத்தர் தான் இருக்கார். 

ஐயா, இப்ப எனக்கு ஒரு சின்ன கேள்வி.. காந்தி வெளிநாட்டு மருந்து வேணாம்னு சொல்லும் போது கஸ்தூர்பா காந்தி அதை எதிர்க்கலையா? என்னை குணப்படுத்தக்கூடிய இஞ்சக்‌ஷனை நீங்க எப்படி மறுக்கலாம்னு காந்தி கிட்ட கேட்கலையா?

அவ என்ன பண்ண முடியும்? ஹஸ்பண்ட் வேணாம்னு சொல்லும் போது வைஃப் என்ன பண்ண முடியும்? 

அப்போ அந்தக் காலத்துல பெண்களுக்கு சமத்துவம் இல்லைங்கறீங்களா?

அப்படின்னு இல்லை. அவர் கொடுக்கலை. அவளோ உடம்பு சரியில்லாம படுத்துண்டு இருக்கா. என்ன வந்திருக்கு, என்ன போயிருக்குன்னு அவளுக்கு என்ன தெரியும்? காந்தி கொடுக்கப்படாதுன்னுட்டார். கொடுக்கல. அவ இறந்து போயிட்டா.

கஸ்தூர்பா காந்தி இறந்ததுக்கப்புறம் காந்தி வருத்தப்படலையா? ஒருவேளை மருந்து கொடுத்திருந்தா மனைவியை காப்பாத்தி இருக்க முடியுமேன்னு?!

வருத்தப்பட்டார். ரெண்டு பேரையும் ஆஹாகான் பேலஸ்ல சமாதி பண்ணியிருக்கு. வருஷா வருஷம் எல்லாரும் அங்க போறா, அங்க போய் வழிபாடு பண்ணி மரியாதை செலுத்திட்டு வர்றாங்க.

அதே வருஷம் சில மாசங்களுக்குப் பிறகு காந்திக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுது. காந்தி வெள்ளைக்காரங்க கூட நிறைய ஃபைட் பண்ணியிருக்கார். அப்படி இருந்தும் காந்தியை அவங்க நல்லா பார்த்துகிட்டாங்க. ஏன்னா, காந்தி அவங்க கிட்ட கெட்ட வார்த்தை ஒண்ணும் பேச மாட்டார். இங்க விட்டுப் போயிடுங்கன்னு சொல்லி வைய மாட்டார். அவர் நல்ல வார்த்தை சொல்லி அவங்களை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னார். நீங்க இங்க இருக்கறது சரியில்லை. நீங்க போங்கோன்னு சொல்வார். இவர் ஃபைட் பண்ணல அவங்களோட.நல்ல வார்த்தை சொல்லிப் போகச் சொன்னார். அதைக் கேட்டுண்டு தான் அவன் ‘குயிட் இந்தியா’ போனான். நல்ல வார்த்தை சொல்லாம அவன அடிச்சு விரட்டனும்னு சொன்னது சுபாஷ் சந்திர போஸ் ஒருத்தன் தான். காந்தி, நல்ல வார்த்தை சொல்லி அவாள நம்ம சைட்ல கன்வெர்ட் பண்ணனும்னு நினைச்சார். அதனால தான் அவன் போனான். நேதாஜி சொன்னதுனால போகல. அதனால வெள்ளைக்காரனுக்கு காந்தின்னா ப்ரியம். அவரை ரொம்ப நன்னா பார்த்துண்டான். எப்பவுமே, காந்திக்கு எதானா துன்பம் வந்துதோ உடனே பெரிய, பெரிய டாக்டர்ஸை அனுப்பிடுவான் வெள்ளைக்காரன். விடமாட்டான். அவ்ளோ அவாளுக்குப் ப்ரியம். இன்னைக்கும் 75 வருஷம் ஆயிடுத்து. வெளிநாட்டுல போய் காந்தின்னு சொன்னா, என் கால்ல விழுவா. அவங்களுக்கு என்னமோ காந்தி மேல அப்படியொரு ப்ரியம். 

ஜார்ஜ் பெர்னாட்ஷா என்ன சொன்னார்? காந்தி இஸ் நாட் அ மேன், ஹி இஸ் அ ஃபினாமினன் (He is not a Man, He is a Phenomenon) அப்படின்னார். 

ஐன்ஸ்டீன் கூட சொல்லிருக்கார் காந்தி பத்தி;

“Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth. (said of Mahatma Gandhi)”
― Albert Einstein, On Peace

- அதுபோல எல்லா வெள்ளைக்காரனுக்கும் காந்தின்னா ரொம்ப ப்ரியம் இருந்தது. அவா நினைச்சிண்டிருக்கா, என்னமோ இந்தியால காந்தி ஃபேமிலி தான் ரூல் பண்ணிண்டு இருக்குன்னு. ஏன்னா, மொதல்ல இருந்தே இந்திரா காந்தி, ரஜீவ் காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தின்னு வந்துண்டிருக்கு. இந்த ஊர்க்காரனுக்கே புரியல எந்த காந்தி ரூல் பண்றார்னு. எல்லாரும் ரியல் காந்தி தான் ரூல் பண்றார்னு நினைச்சிண்டு இருக்கா. ஆனா, ரியல் காந்தி போயாச்சு.  அவருக்கே பிடிக்கல.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com