காதல் போய் கமர்ஷியல் வந்தது டும்... டும்... டும்...

தமிழ்த் திரையுலகில் காதல் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வந்தது போய் இப்போது கமர்ஷியல் திரைப்படங்கள் வந்து குவிகின்றன. இவை காலத்தைக் கடந்து வெல்லுமா?
காதல் போய் கமர்ஷியல் வந்தது டும்... டும்... டும்...

பொதுவாகவே திரைப்படங்கள் காலங்காலமாக ரசிகர்களின் உணர்வைத் தூண்டுபவையாகவும் அவர்களை ரசனையின்பால் உணர வைப்பவையாகவும் இருப்பதால் அதன் திரையின் பிரமாண்ட வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் திரைப்படங்கள் மொழிகளைக் கடந்து அது பேசும் திரை மொழியின் அனுபவத்தின் மூலம், உண்மை கூறும் ரசனையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

திரைப்படங்களின் திரை வடிவங்கள் மலிந்து தற்போது கையடக்க அலைபேசியில்கூட திரைப்படங்களை உட்கார்ந்த இடத்திலேயே பார்க்கக் கூடியவையாக அவை தடம் மாறியிருக்கின்றன. ஆனாலும் திரைப்படங்களுக்கான மவுசு சற்றும் குறைந்தபாடில்லை. திரையரங்குகள் தற்போது குளிரூட்டும் மல்டி பிளக்ஸ் அரங்குகளாகத் தரம் உயர்வு பெற்றுக் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ள  நிலையிலும் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் திரைப்படங்களை பார்த்து ரசிப்பதையே பெரும்பாலும் விரும்புவர்களாகவே உள்ளனர். தனியாகவோ, நண்பர்களுடனோ, அல்லது குடும்பத்தினருடனோ திரையரங்குகளில் திரைப்படங்களை ரசிப்பவர்கள் எண்ணிக்கை  இன்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

கண்ணடக்க அல்லது கையடக்க வடிவில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் அதற்குப் பிறகு நிறைவாக திரையரங்கில் பார்க்க வேண்டி அந்தத் திரையரங்க அனுபவத்திற்காகப் பார்த்து ரசிப்பதை கேள்விப்பட்டு வருகிறோம்.

இந்த வழியில் கடந்த பல ஆண்டு காலமாகவே திரையில் காதல் மொழி பேசும் திரைப்படங்களுக்குத் தமிழ் கூறும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பெரும்பான்மையான ஆதரவை நல்கி வந்ததையும் அறிவோம். காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் பலரும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்து காதல் கொண்டதாகவும், அந்தப் படங்களைப் பார்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் பெருமிதம் கொண்டதை செய்திகள் மூலமாக அறிந்திருக்கிறோம். அம்பிகாவதி,அமராவதி காலத்தைய காதல் திரைப்படங்கள் தொடங்கி நவீன வழிக் காதல் பேசிய படங்கள் வரை காதல்மொழி படங்கள் திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறத் தவறியதில்லை.

தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.பி.சுந்தராம்பாள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், சிவக்குமார், கமலஹாசன், ரஜினிகாந்த், தியாகராஜன், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன், ராம்கி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரசாந்த், ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என அனைத்து நடிகர்களும் காதல் பேசும் திரைப்படங்களில் நடித்துத் தங்களது மேன்மையை, திறமையை வெளிப்படுத்திப் பெண் ரசிகர்களின் ஆதரவினை பெற்றதற்குப் பிறகே அடுத்தகட்ட நகர்வுக்குச் சென்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, சந்தானம், யோகிபாபு உள்ளிட்டவர்களும் காதல் மொழி பேசும் திரைப்படங்களில் நடித்துத் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்தவர்களே.

இவர்களில் நடிகர்கள் பலரும் தன்னுடன் காதல் மொழி பேசும் படங்களில் இணையாக நடித்த நடிகைகளைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட வரலாறும் திரையுலகில் உண்டு.

கே.பி.சுந்தராம்பாள்-கிட்டப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம், ஜெமினிகணேசன் – சாவித்திரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்– விஜயகுமாரி, ஏ.வி.எம்.ராஜன் – புஷ்பலதா, பார்த்திபன்– சீதா, ராம்கி – நிரோஷா, ராமராஜன் – நளினி, ராஜசேகர் – ஜீவிதா, கார்த்தி – ராகினி,  அஜித்– சாலினி, பிரசன்னா– சினேகா, சூர்யா – ஜோதிகா எனப் பலரும் காதலித்து திரைப்பட நேரங்களைத் தவிர்த்து காதலர்களாகக் காத்திருந்து திருமணம் செய்து தங்களது காதலை வெற்றிகரமாக்கியவர்கள். இதில் சில திரைப்பட இயக்குநர்களும் காதலுக்குள் அகப்பட்டவர்களே. பாலுமகேந்திரா- ஷோபா காதல் உள்பட சொல்லப்படாத காதல் ஏராளமாக வதந்திகளாகவும் கிசுகிசுக்களாகவும் உலா வந்தவை, வந்து கொண்டிருப்பவை.

காதல் மொழித் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்த போதிலும் திரைப்படம் பேசிய காதல் மொழி பிடித்துப் போய் அதனை வெற்றியாக்கியவர்கள் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், அம்பிகாவதி, அமராவதி போன்ற திரைப்படங்கள் பேசிய காதல் மொழிக்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டது தமிழ்த் திரைப்படவுலகம்.

இயக்குநர் ஸ்ரீதர், நெஞ்சம் மறப்பதில்லை என அடுத்த ஜென்மக் காதல் பேசும் காதல் திரைப்படத்தைத் தந்து காதல் இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது திரைப்படங்கள் காதலுக்கு வக்காலத்து வாங்கும் திரைப்பட வரிசைகளாகவே தொடர்ந்தது.

நெஞ்சம் மறப்பதில்லை தொடங்கி கல்யாணப்பரிசு, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, இளமை ஊஞ்சலாடுகிறது. அழகே உன்னை ஆராதிக்கிறேன், செளந்தர்யமே வருக வருக, என வெள்ளைத் திரையிலிருந்து வண்ணத்திரை வரை தனது காதல் மாயாஜாலத்தை திரையில் ஜொலிக்க வைத்தவர் இயக்குநர் ஸ்ரீதர். இந்த வரிசையைக் கெளரவப்படுத்திய கே. பாலச்சந்தர்,  பொருத்தமில்லாத உறவுகள் மீது ஏற்படும் காதலை மையமாக வைத்துப் புதுவகைத் திரைப்படங்களை எடுத்து வெற்றி பெற்ற இயக்குநர்.

நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

குறிப்பாக அழகில்லாத ஒருவர் அழகானவரைக் காதலிக்கும் சர்வர் சுந்தரம், தங்களுக்கு அடைக்கலம் கொடுத்துத் தாய், தந்தை போலிருப்பவர்களை அவர்கள் காட்டும் அன்பு, அக்கறையினால் காதல் வயப்படும்  இளைஞர், இளம்பெண் ஆகியோரைக் கொண்ட அபூர்வ ராகங்கள், காதலைத் தான் விரும்புவரிடம் வெளிப்படையாகக் கூற முடியாமல் தனது வாழ்க்கையை தான் விரும்புவரிடம் இழந்து தன்னை  அவர் ஒதுக்கிய நிலையில் தன்னை ஒருதலைப்பட்சமாக தீவிரமாகக் காதலித்துத் தனக்கு ஆதரவு வழங்கி வரும் தகுதியில்லாதவரைத் திருமணம் செய்துகொள்ளும் நிழல் நிஜமாகிறது, தகுதியில்லாதவரைத் திருமணம் செய்துகொண்டு சந்தேகத்தின் பலனை அனுபவித்துக் காதலையும், கணவரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவர்கள் திரைப்படம், மாற்று மொழிக்காரர்கள் காதலித்து காதலுக்காக மரணிக்கும் தெலுங்கு மொழியில் மரோசரித்ராவாக காதல் பேசிய கமல்ஹாசனை ஹிந்திக்கு அழைத்துச் சென்ற ஏக் துஜே கேலியே திரைப்படம், சங்கீதம் பேசி தன்னைக் காதலாகக் கவர்ந்தவர் காணாமல் போனதால் தனது இசை ராஜாங்கத்தை அழித்துக்  கொண்டு மீண்டு வரும் இசைக்கலைஞர் படம் சிந்துபைரவி, நிறைவேறாத காதலுக்காகத் தற்கொலை செய்து தனது காதலியை இழந்து உயிர் மீண்ட நாட்டியக் கலைஞர் மீண்டும் காதல் வயப்பட்டு அவர்கள் காதலை ஏற்காமல் அவர்களை கொலைக்கு உள்ளாக்க வைக்கும் படமான  புன்னகை மன்னன் என பாலச்சந்தர் திரையில் பேசிய காதல் திரைப்படங்கள் தமிழுலகுக்கு புதிது. இதே வரிசையில் தெலுங்கு பட இயக்குநர் கே. விஸ்வநாத் அறிமுகப்படுத்திய தெலுங்கு மொழி திரைப்படங்களும் அரிதான காதல் மொழி பேசிய திரைப்படங்கள்தான். குறிப்பாக வயதான பாடகரும், நாட்டியக் கலைஞரும் காதல் வயப்படும் சங்கராபரணம், ஆதரவற்ற விதவையைக் காதலித்து அவருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் தெலுங்கில் சுவாதிமுத்யம் தமிழில் சிப்பிக்குள் முத்து, நாட்டியக் கலைஞருக்கும் பணக்கார நாட்டிய விமர்சருக்கும் ஏற்படும் காதல் தோல்வியில் முடிவடைந்து குடிகாரனாக மாறி தனது காதலியின் மகளை நாட்டியக் கலைஞராக்க்கி விட்டு மரணமடையும் காதலர் திரைப்படம் சலங்கை ஒலி போன்ற திரைப்படங்களும் காதலைச் சாகாவரமாக்கிய திரைப்படங்கள். மகேந்திரனும் தனது பங்குக்கு தமிழ் ரசிர்களுக்கு வழங்கிய முக்கியத் திரைப்படமாக நெஞ்சத்தைக் கிள்ளாதே அமைந்தது. புதிய இயக்குநர்கள் பாரதிவாசு வழங்கிய பன்னீர்புஷ்பங்களும் புதிய வகை காதல் மொழிப் பட வரிசையில் இடம்பெற்று வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இயக்குநர் பாரதிராஜா 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நிறம் மாறாத பூக்கள், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் போன்ற காதல் பேசும் திரைப்படங்களை வழங்கிய அவர் காதல் மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதாக பூநூலையும், சிலுவையையும் அறுத்து எறிந்து காதலர்கள் காதலை அடைவதாக அலைகள் ஓய்வதில்லையில் காட்டி புதிய சகாப்தத்தை படைத்தார். இவருக்குப் பின் வரிசையில் இடம் பிடித்த மணிரத்னம் தமிழின் ஆகச் சிறந்த காதல் திரைப்படங்களான மெளனராகம், அலைபாயுதே, ஓகே ஒகே கண்மணி, காற்று வெளியிடை போன்ற திரைப்படங்களை மிகவும் தைரியமாக வழங்கியவர்.

அதேகாலத்தில்தான் மலையாளப் பட இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த வருஷம் 16, காதலுக்கு மரியாதை திரைப்படங்களும் சிறந்த படங்கள் வரிசையில் இடம்பிடிக்கத் தக்க படங்களாக வெற்றி பெற்றன.

அதேபோல் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்தவை அனைத்தும் உண்மையான காதல் படங்களாக இருந்தபோதிலும் முடிவில் ஒருவித மென்சோகத்தை வெளிப்படுத்திடும் வகையிலான படங்களாகவே வந்து வெற்றி பெற்றன. குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் படங்களைக் குறிப்பிடலாம்.

இதே காலத்தில்தான் டி.ராஜேந்தர் மிகவும் எளிமையான, ஆடம்பரமற்ற, அழகற்ற நாயக நாயகியர்களைக் கொண்ட புதுவகைக் காதல் மொழித் திரைப்படங்களைத் தரத் தொடங்கினார். ஒருதலை ராகம், ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக் காதலி போன்ற திரைப்படங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

இவரது காலத்திலேயே பாரதிராஜாவின் சீடராக இருந்த இயக்குநர் பாக்கியராஜ் வழங்கிய தூறல் நின்னு போச்சு, சுவரில்லா சித்திரங்கள், இன்று போய் நாளை வா, நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அந்த 7 நாட்கள் போன்றவை நகைச்சுவை கலந்த படங்களாக வெளிவந்து பிற்காலத்தைய படங்களுக்கு உதாரணங்களாக விளங்கியது.

இவர்களின் காலத்தில்தான் புது இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரன், பாலைவனச் சோலை என்கிற நான்கு இளைஞர்கள் - ஒரு பெண் என்கிற புதுவகைத் திரைப்பட மொழியைத் தொடங்கி வைத்தவர் என்று கூறலாம்.

அதற்குப் பிறகு அதே வரிசையில் இயக்குநர் விக்ரமன் தந்த புது வசந்தம் திரைப்படத்தையும் முக்கியமான காதல் படமாகக் கூறலாம். அதன் பின்னர் காதம் மட்டுமே பேசிய காதல் போன்ற திரைப்படங்களும் தமிழ்த்  திரைமொழிக்கு பலம் சேர்க்கும் படங்களாக அமைந்தன.

இயக்குநர்கள் வரிசைக்குப் பிறகு நடிகர்கள் வரிசை என்று ஆராயத் தொடங்கினால் தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட இடைவெளிவிட்டு ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் காலத்தில்தான் அடுத்தகட்ட காதல் திரைப்படங்கள் அதிகம் வரத் தொடங்கின.

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் காதலும் இருக்குமே தவிர காதல் மட்டுமே இருக்கும் வகையிலான திரைப்படங்கள் இல்லையென்றே கூறலாம். அவரது காலங்களில் வாழ்க்கை வழியான திரைப்படங்கள் ஊடாகக் காதல் திரைப்படங்களும் வரத் தொடங்கி சற்றே குறைவான வரவேற்புடன் படங்கள் வெற்றி பெற்றன. சிவாஜி கணேசன் நடித்த எங்கிருந்தோ வந்தாள், வசந்த மாளிகை, தியாகம், அந்தமான் காதலி, முதல் மரியாதை போன்றவை காலங்கடந்தும் இன்றும் ரசிக்கத் தகுந்த காதல் திரைப்படங்களாக சிவாஜி கணேசனுக்கு மரியாதை கொடுக்க கூடிய திரைப்படங்களாக உள்ளன.

இந்த வரிசையில் காதல் ஜோடிகள் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஜோடியாக நடித்த பல காதல் திரைப்படங்கள் நிஜக் காதலர்களுக்காகவே வெற்றி பெற்றன. குறிப்பாகக் களத்தூர் கண்ணம்மா, மனம் போல் மாங்கல்யம், மிஸ்ஸியம்மா உள்பட பல திரைப்படங்களை உதாரணமாகக் கூறலாம்.

இதனையடுத்து நடிகர் ரவிச்சந்திரன் நடித்த காதல் திரைப்படங்களான காதலிக்க நேரமில்லை, கொஞ்சும் குமரி உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்று அவரை ரசிகர்கள் காதல் நாயகனாக வரித்துக்கொண்டனர்.

அவருக்குப் பின்னதாக அவரது இடத்தை ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார் ஆகியோர் மாறிமாறித் தக்கவைத்துக் கொண்டனர்.

இதே வரிசையில் காதல் மன்னன் பட்டத்தைத் தாமாக சுவீகரித்துக் கொண்டு காதல் இளவரசனாக வலம் வந்த கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் அவருக்கான அடைமொழியைத் தக்க வைத்தது. குறிப்பாக மரோ சரித்ரா, ஏக் துஜே கேலியே, சலங்கை ஒலி, புன்னகை மன்னன், சாகர், மூன்றாம் பிறை, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, உயந்தவர்கள், கோகிலா, நினைத்தாலே இனிக்கும், ராஜபார்வை, வாழ்வே மாயம், சனம் தேரி கசம், பேசும்படம் போன்றவை அவருக்கான காதல் இளவரசன் பட்டத்திற்கான திரைப்படங்களாக அமைந்தன.

இந்தக் காலக்கட்டத்தில் கமலஹாசனுக்கு ஈடாக வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு காதல் பேசும் படங்கள் பெரிதாக அமையவில்லை. காதலுடன் கமர்சியல் அதிகம் கலந்தவையாக அவரது திரைப்படங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக பைரவி, நினைத்தாலே இனிக்கும், தம்பிக்கு எந்த ஊரு, நல்லவனுக்கு நல்லவன், கை கொடுத்த கை, கொடி பறக்குது போன்றவை காதலுடன் சேர்ந்த கதாநாயக அம்சம் நிறைந்த படங்களாகவே அமைந்து. அவரது படங்களில் காதலுக்கான இடமும் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இவர்கள் காலத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த நடிகர் விஜய்காந்த் நடித்த தண்ணீருக்குப் பலி கொடுத்த காதலிக்குப் பதிலாக காதலின் வெற்றிக்காக உயிரைக் கொடுக்கும் வைதேகி காத்திருந்தாள் முக்கிய படமாகவே அமைந்தது.

இதேபோல் நடிகர் சத்யராஜ் நடித்த கடலோரக் கவிதைகளும் காதல் திரைப்பட வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

இந்த வரிசையில் மோகன் நடித்த கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, மெளனராகம், இதயக் கோவில், உதயகீதம் போன்ற திரைப்படங்கள் காதல் பேசும் திரைப்படங்களாக திரையில் மின்னின. இவர்களுக்குப் பின்னர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, அஜித் நடித்த கடிதம் மூலம் மட்டுமே பேசி காதலை வெற்றியாக்கிய காதல் கோட்டை, சூர்யா நடித்த மெளனம் பேசியதே, கார்த்தி நடித்த பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களும் காதலுக்கான முக்கிய திரைப்படங்களாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இப்படித்தான் தமிழ்த் திரைப்படவுலகம் காதலுக்கு பெரிய மரியாதையைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. என்றபோதிலும் கடந்த கால காதல் பெருமை பேசும் திரைப்ப்டங்கள் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டன. இப்போது கமர்ஷியல் திரைப்படங்களை நோக்கியும், புதிய வகை மாற்று வகைப் படங்களையும் தந்து கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். கடந்த காலங்களில் காதல் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம் ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் இருந்ததா அல்லது தற்போது தொடரும் கமர்ஷியல் காலத் திரைப்படவுலகம் ஆரோக்கியமானதா என்பது தெரியாமல் தமிழ்த் திரைப்படவுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com