நடைப்பயிற்சியின்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. உடற்பயிற்சி என்பது உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்றுதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

'உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உடம்பு' என்று சொன்ன காலம் கடந்து ஒரே இடத்தில் அமர்ந்து கணினியின் முன்னதாக வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. இதனால் உடல் பருமன் மற்றும் பல்வேறு உடலியல் பிரச்னைகள் ஏற்படுகிறது. 

இம்மாதிரியான சூழலில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. உடற்பயிற்சி என்பது உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்றுதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. இதற்கு சாதாரணமாக நடை பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது.

நடைப்பயிற்சி அனைவரும் மேற்கொள்ளக்கூடிய ஒரு எளிதான பயிற்சி. மிகவும் எளிய முறையில் உடல் எடையைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் எனில் நடைப்பயிற்சியை தேர்வு செய்வது சிறந்தது. 

அவ்வாறு நடைப்பயிற்சி செய்யும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

► சாதாரணமாக நடைப்பயிற்சி காலை, மாலை என இருவேளைகளிலும் மேற்கொள்ளலாம். எனினும் அதிகாலையில் மேற்கொள்வது மிகவும் சிறந்தது.

► ஆனால், பெண்கள் பெரும்பாலானோர் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் மாலையில் மேற்கொள்ளலாம். 

► நடைப்பயிற்சி செய்யும்போது இலகுவான காட்டன் துணிகளை அணியுங்கள், ஆடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. காலணிகள் அல்லது ஷூக்களும் இறுக்கமாக இருக்கக் கூடாது. 

► ஏதேனும் பொருட்களை தூக்கிக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு ஒருவிதமான உடல் அழுத்தத்தைக் கொடுக்கும். 

► பாட்டு கேட்டுக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எடை குறைந்த மொபைல் போன் அல்லது ஒரு சிறிய ஐபேடை வைத்துக் கொள்ளலாம். குறைந்த ஒலியில் பாட்டு கேளுங்கள். 

► அதைப்போன்று சாலையில் வாகனங்கள் செல்லும் இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் வீட்டின் மொட்டை மாடியிலேயே நடக்கலாம். 

► உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா உள்ளிட்ட பசுமையான சற்று அமைதியான சூழ்நிலையைத் தேர்வு செய்யுங்கள். சூழ்நிலை மனநிலைக்கும் நல்லது. 

► சாதாரணமாக நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். நடைப் பயிற்சியுடன் வேறு சில எளிய உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

► நடக்கும் போது உங்களுடைய உடல் பருமனுக்கு ஏற்றவாறு வேகத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ வேண்டும்.

► முதலில் சாதாரணமாக நடத்தலில் தொடங்கி சிறிது சிறிதாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கால்களை முடிந்தவரை அகலமாக விரித்து வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கு நல்லது என்று கூறுகின்றனர் உடலியல் நிபுணர்கள். 

► இளைஞர்களாக இருந்தால் நடைப்பயிற்சியின்போது முடிந்தவரை ஜாக்கிங்(ஓடுதல்) பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். 

► நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது முதுகுத்தண்டுவடம் நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குனிந்து நடக்கக்கூடாது.

► கால்களின் வேகத்திற்கு ஏற்றவாறு கைகளை வீசி நடக்க வேண்டும். வயிற்றுத் தசைகளை இறுக்கி நடப்பது வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். 

► உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் காலை எழுந்தவுடம் வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் வெந்நீர் அருந்திவிட்டு இல்லையெனில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்

► நடைப்பயிற்சியை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் என அனைவரும் மேற்கொள்ளும் ஒரு பயிற்சியாக இருப்பதால் மிகவும் எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com