
தலைமுடி உதிர்தல் என்பது தற்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. உணவு முறை, சுற்றுச்சூழல் என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
சாதாரணமாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைப் போல தலைமுடியும் வறண்டு போகும்.
உடலில் நீர்ச்சத்து குறைவதால் தலைமுடியின் வேர்க்கால்களும் வறண்டு முடி உதிர்தலுக்கு காரணமாகிறது.
எனவே, முக்கியமாக குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது அவசியம்.
முடி உதிர்தலுக்கு பொடுகு முக்கிய காரணம். இந்த பொடுகினைப் போக்கவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில எளிய முறைகளைக் காணலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைக்கும். வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கரு திரவத்தை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள சத்துகள் முடியின் வேரை பலமடையச் செய்யும்.
வெந்தயத்தை ஊற வைத்து அதனை அரைத்து பின்னர் அதில் சிறிது தயிர் சேர்க்க வேண்டும். இதனை நன்றாகக் கலந்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும், பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும்.
வெந்தயம் முடி உதிர்தலை வெகுவாகக் குறைக்கும்.
கற்றாழைச் சாறையும் தொடர்ந்து தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்படும். முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வாரமாக நல்லெண்ணெய், ஒரு வாரம் பாதாம் எண்ணெய், ஒரு வாரம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
முடி கருமையாக இருக்கவும் முடி உதிராமல் இருக்கும் விளக்கெண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வைத்து தினமும் பயன்படுத்தலாம்.
பொடுகினைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி தெளிக்கவும் அல்லது பஞ்சு கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவலாம்.
இதேபோல ஆப்பிள் சீடர் வினிகருக்குப் பதிலாக டீ ட்ரீ ஆயிலையும் பயன்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை
குளிர்காலத்தில் குளிப்பதற்கு சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரிலே தலைமுடியை அலச வேண்டும்.
தலைமுடி வறண்டு போக விடக்கூடாது. முடிந்தவரை லேசாக எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் சீப்பினை பயன்படுத்தக்கூடாது.
அதிக ரசாயனம் உள்ள ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இருந்தாலும் முடி உதிரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.