
தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள பகுதி ராமேஸ்வரம். அந்த நகரம் ஒரு அழகிய குட்டித் தீவு. பறவையின் பார்வையில் பார்த்தால் அத்தீவு சங்கு வடிவில் இருக்குமாம்.
விரைவில், ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை தொடங்கவிருப்பதால், சங்கு வடிவில் இருக்கும் ராமேஸ்வரம் தீவுக்கு செல்ல சுற்றுலாவை திட்டமிடலாம்.
இலங்கையில் சீதை சிறை பட்டிருந்தபோது அவரை மீட்பதற்காக ராமர் வானர சேனைகளுடன் கருங்கற்களைக் கொண்டு பாலம் அமைத்தது இங்குதான் என்பது நம்பிக்கை. தற்போதைய செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம், அந்த பாலம் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ஸ்படிக லிங்க தரிசனமும் இந்தக் கோயிலில்தான் கிடைக்கிறது. ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் செல்லலாம். ரயில் பயணம் என்றால், நீங்காத அனுபவமாக இருக்கும்.
ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஆட்டோவைப் பிடித்து வாடகை அறையைப் பிடித்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு கோபுர வாசலில் அறை எடுத்துக்கொண்டால் 4 மணிக்கெல்லாம் கோயிலை அடைய எளிதாக இருக்கும். இதற்கு ஒரு வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்து, காலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரைதான் ஸ்படிக லிங்க தரிசனம் என்பதால், விறுவிறுவென கோயிலுக்கு கிளம்ப வசதியாக இருக்கும்.
கோயில் பிரகாரமும் மிகப் பெரியது (இந்தியாவில் உள்ள ஹிந்து கோயில்களிலேயே மிகப் பெரிய பிரகாரத்தைக் கொண்டது ராமநாத சுவாமி கோயில்). எனவே, நடப்பதை விட ஓடுவதுதான் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்றதாக இருக்கும். வயதானவர்கள், விரைவாக கோயிலுக்குச் சென்றுவிடுவது பொருமையாக நடக்க உதவும்.
அதுபோல, வயதானவர்கள், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு, மேற்கு கோபுர வாசலில் இருந்து அக்னி தீர்த்தம் இருக்கும் பகுதி சற்று தூரம். எனவே, கிழக்கு கோபுர வாசலில் அறை எடுத்துக் கொண்டால் சற்று வசதியாக இருக்கும்.
தென் மாநிலங்களில் இருந்து காசிக்கு ஹிந்துகள் புனிதப் பயணம் மேற்கொள்வது போல், அவர்களும் இங்கே வருகின்றனர். முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த கடலில் மண் எடுத்துக் கொண்டு அதை காசியில் பாய்ந்தோடும் புனித நீரான கங்கையில் கரைத்துவிட்டு அங்குள்ள விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும். அலாகாபாதில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து (கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் இடம்) தீர்த்தம் கொண்டு வந்து ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
இதனால், எப்போதும் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எந்தவொரு சுற்றுலா பகுதிக்கும் நாம் முடிந்த வரை வேலை நாள்களை தேர்வு செய்து செல்வது நல்லது. வார இறுதியில் சென்றால் கூட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும். வேலை நாள்களில் சென்றால் விரைந்து சென்று ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய முடியும். விரைவாக செல்லாவிட்டால் டிக்கெட் விநியோகம் முடிந்துவிடலாம்.
ஸ்படிக லிங்கத்துக்கு பின்னால்தான் மூலவர் சன்னதி இருக்கிறது. ஆனால், திரையிட்டு மூலவரை மறைத்து விடுகிறார்கள். 6 மணிக்கு பிறகுதான் மூலவரை தரிசிக்க முடியும்.
பின்னர், அங்கிருந்து அக்னி தீர்த்தத்துக்குச் செல்லலாம். அக்னித் தீர்த்தம்தானே என நினைக்கக் கூடாது. அதிகாலை நேரம் என்றால், குளிர் அதிகம் தெரியும்தான். காலை சூரிய உதயம் காணவும் மிகச் சிறந்த இடமாக அமைந்திருப்பது அக்னி தீர்த்தம்.
அப்படியே ஈரத் துணியுடன் கோயிலில் இருக்கும் சிறப்புப் பெற்ற 22 தீர்த்தங்களில் நீராட செல்லலாம். கிழக்கு கோபுர வாசலுக்கு அருகில் ரூ.25 கட்டணம் செலுத்தினால் நமக்கு ஒரு பட்டையை கையில் ஒட்டி விடுகிறார்கள். தனிவரிசையில் முன்னேறிச் சென்றால் ஒவ்வொரு கிணறில் இருந்தும் நம் தலையில் தீர்த்தம் தெளித்து விடுகிறார்கள். சிலர், தனியாக ஏஜென்டுகளை நியமித்துக் கொண்டும் வருகிறார்கள். ஆனால், அதற்கு சற்று கட்டணம் அதிகம். அதே நேரம் கவனிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பக்கெட் தண்ணீர் ஊற்றப்படுகிறது.
ஒவ்வொரு கிணறில் இருக்கும் தீர்த்தமும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அத்துடன், நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகவும் அந்தத் தீர்த்தங்கள் இருக்கின்றன.
அனைத்து தீர்த்தங்களும் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில தீர்த்தங்கள் அருகே அருகே உள்ளன. சில தீர்த்தங்களுக்குச் செல்வதற்கு நாம் கோயிலை பாதி வலம் வர வேண்டியிருக்கும். இருப்பினும், களைப்பு பெரிதாக தெரியாது. ஒவ்வொரு தீர்த்தத்தையும் பார்க்க வேண்டும் நீராட வேண்டும் என்ற ஆவல் நம்மை உந்திச்சென்றுவிடும்.
பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பி உடைகளை மாற்றிக் கொண்டு 3-ஆவது முறையாக திரும்பவும் கோயிலுக்குள் நுழைய வேண்டும். இப்போது தான் சுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசிக்கலாம். இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமர் வணங்கியதால் மூலவருக்கு ராமநாத சுவாமி என்று பெயர். சிறப்பான தரிசனத்தை முடித்துக்கொண்டு, முறைப்படி கோயிலை சுற்று வலம் வரலாம்.
பிறகு, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பல்வேறு தலங்களையும் காணச் செல்லலாம். ஆட்டோக்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. சிலர் நேராக தனுஷ் கோடி வரை செல்கிறார்கள். காற்றின் வேகம் அதிகம் இருக்கும்போது மட்டும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் செல்லலாம். அங்கிருந்து வரும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயில், ஐந்து முக ஆஞ்சநேயர், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ராமர் பாதம் ஆகிய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்.
கோதண்டராமர் கோயிலும் ஒரு கடல் சூழ்ந்த பகுதிக்கு இடையே அமைக்கப்பட்ட சாலையில் சென்று காண வேண்டிய தலம். நிச்சயம் இப்படி ஒரு அதிசய இடம் இருக்குமா என்ற ஆச்சரியம் ஏற்படும்.
அலை அடிக்கும் கடல்களை மட்டுமே பார்த்திருந்தால், நிச்சயம் ராமேஸ்வரம் எனும் சங்குத் தீவு, நமக்குத் திகட்ட திகட்ட வித்தியாசமான கடற்கரைகளைக் கொண்டு, வியப்பில் ஆழ்த்துகிறது.
அலைகள் அற்ற, கடலில் சற்று தூரம் நடந்து சென்று கோயில் கட்டி விளையாட என பல அனுபவங்களைக் கொடுக்கிறது ராமேஸ்வரம்.
முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழகத்தின் பெருமையுமான அப்துல் கலாம் ஐயாவின் இல்லம்தான், பயணிகளின் முக்கிய பார்வையிடும் இடமாக உள்ளது. சிலர் அருகில் உள்ள கடைகளுக்குக் கூட்டிச் செல்வார்கள் ஆர்வமுள்ளவர்கள் செல்லலாம். மற்றபடி ஐயாவின் இல்லத்தைப் பார்த்துவிட்டு திரும்புதல் நலம்.அவரது இலத்தில் 2-ஆவது மற்றும் 3-ஆவது மாடி சென்று வர பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 2-ஆவது மாடியில் அவரது புகைப்படங்களும், அவர் புரிந்த சாதனைகளும் புகைப்படங்களாக இருக்கின்றன.
மேலும், நவக்கிரக கோயில் அமைந்துள்ள தேவிப்பட்டினம், அப்துல் கலாம் நினைவகம் என்ற பல இடங்கள் உள்ளன. பலரும் இரவில் அல்லது அதிகாலையில் ஊருக்குள் வந்தால், பாம்பன் பாலத்தை பார்க்க முடியாது. எனவே, பாம்பன் பாலத்தையும் கண்டு ரசிக்கலாம். ஆனால், அதனை மேம்பாலத்தின் ஓரத்தில் நின்றுதான் ரசிக்க முடியும். சற்று ஆபத்தான இடமாக உள்ளது. எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
கோயிலுடன் வித்தியாசமான கடற்கரைகளைக் கொண்டு மக்களை நாள்தோறும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்துகிறது ராமேஸ்வரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.