wasting weekends? Make your weekend with these 5 strategies
கோப்புப்படம்ENS

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

வார இறுதி நாள்களை பயனுள்ளதாக கழிப்பது பற்றி...
Published on

அலுவலக வேலைக்குச் செல்வோர் பலருக்கும் தோன்றும் ஒரு விஷயம், வார இறுதி நாள்கள் எப்போது வரும்? என்பதுதான். வார இறுதி நாள்களுக்கு என்று வார நாள்களிலேயே பல திட்டங்கள் வைத்திருப்போம். ஆனால் விடுமுறை நாள்களில் பலரும் ஓய்வெடுப்பதிலேயே நேரத்தைக் கழித்துவிடுகிறார்கள். தவிர்க்கமுடியாத சில திட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. வாரம் முழுவதும் ஓயாமல் வேலைசெய்துவிட்டு ஓய்வெடுப்பதற்குதானே வார இறுதி நாள்கள்? என்றுதான் பலரும் கேட்பார்கள்.

ஆனால் ஓய்வு நாள்களை மகிழ்ச்சியாக பயனுள்ளதாக கழிக்க சில உத்திகளை அல்லது வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

திட்டமிடல்

விடுமுறை நாள்களை பயனுள்ள வகையில் கழிப்பதற்கு முதலில் தேவை திட்டமிடுவதுதான். வெள்ளிக்கிழமை மாலையே சிறிது நேரம் ஒதுக்கி இரண்டு நாள்கள் என்ன செய்யப் போகிறோம்? என்பதை வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

வெளியில் செல்வது, நண்பர் அல்லது உறவினர் வீடுகளுக்குச் செல்வது, சாதாரணமாக காலையில் நடைப்பயணம் மேற்கொள்வது என எதுவாக இருந்தாலும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். என்ன செய்வது என்றே நாம் யோசித்து பல மணி நேரம் வீணாகிவிடும். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் திருப்தி அலாதியானது. அதனை அனுபவித்து மகிழுங்கள். அதுபோல இந்த திட்டமிடல் உங்களுக்கு மற்ற விஷயங்களுக்கும் திட்டமிட உதவும்.

நேரம் அவசியம்

வேலைக்குச் செல்வோர் மட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களுக்கும் ஓய்வு நேரம் என்பது அவசியம். அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றால் மற்ற வேலைகளைச் சரியாக திட்டமிட்டபடி செய்து முடிக்க வேண்டும். உதாரணமாக விடுமுறை நாள்களுக்கு என்று இருக்கும் வேலைகளை வேகமாக செய்துவிடுங்கள். சமைக்க வேண்டும் என்றால் காலையிலேயே மதிய உணவையும் சேர்த்து சமைத்துவிடுங்கள். இல்லையெனில் ஓய்வு கருதி ஒரு நேரம் ஹோட்டலில் சாப்பிடுங்கள். வெள்ளிக்கிழமை மாலையே துணிகளை துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை முடித்துவிடலாம். வீட்டில் உள்ள அனைவரையும் வேலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள். இதனால் வார இறுதி நாள்களில் அவரவர்க்கு என்று நேரம் கிடைக்கும். வீட்டு வேலை, தனிப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டுமே என்ற அழுத்தமும் இருக்காது.

உங்களுக்கான நேரம்

குடும்பத்திற்காக வேலைக்குச் செல்வோர் குறிப்பாக பெண்கள் உங்களுக்கென நேரத்தை ஒதுக்கி உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யுங்கள். ஓடிடியில் ஒரு 3 மணி நேரம் ஒரு திரைப்படம் பார்ப்பதாகக்கூட அது இருக்கலாம். இல்லையெனில் ஓரிடத்தில் தனியாக அமர்ந்து பாட்டு கேட்பது, தனியாக நடப்பது, நண்பர்களுடன் வெளியில் செல்வது, கடைக்கு ஷாப்பிங் செல்வது என சின்ன சின்ன விஷயங்களாகக்கூட இருக்கலாம். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவரவர்களுக்கான தனிப்பட்ட நேரம் அவசியம்.

உடற்பயிற்சி தேவை

உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்க உடற்பயிற்சி தேவை. இப்போது பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருப்பது ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்வதுதான். எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களாவது உடலுக்கு பயிற்சி தேவை. எனவே, வார இறுதி நாள்களில் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, தியானம், யோகா செய்ய ஒதுக்கலாம். இது உங்கள் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும். மனநிலையை மேம்படுத்த உதவும் எண்டோஃபின்களை வெளியிடுவதால் திங்கள்கிழமை உற்சாகமாக உங்கள் பணியைத் தொடர முடியும்.

சிந்திக்க வேண்டும்

வார நாள்களில் நாம் என்ன செய்கிறோம்? வாழ்க்கை சரியான பாதையில்தான் செல்கிறதா? சரியான வேலைகளைத்தான் செய்கிறோமா? இதில் திருப்தி இருக்கிறதா? ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என கண்டிப்பாக சிந்தியுங்கள். நீங்கள் செய்தவை, செய்ய வேண்டியவை ஆகியவற்றை பட்டியலிட்டு வைத்துக்கொண்டு அதனை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். சுய மதிப்பீடு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும்.

Summary

wasting weekends? Make your weekend with these 5 strategies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com