ஐவிஎஃப் சிகிச்சை பெண்களுக்கு பாதுகாப்பானதா? - நம்பிக்கையும் உண்மையும்!

ஐவிஎஃப் கருத்தரித்தல் சிகிச்சை பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்...
myths and facts on IVF
கோப்புப்படம்IANS
Published on
Updated on
2 min read

ஐவிஎஃப் சிகிச்சை பெண்களுக்கு பாதுகாப்பானதா? வயதான பெண்களுக்கு மட்டும்தானா? ஐவிஎஃப் முறையில் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

ஐவிஎஃப் சிகிச்சை முறைகளில் உள்ள தவறான நம்பிக்கைகள் பற்றி பதிலளிக்கிறார் தில்லியைச் சேர்ந்த டாக்டர் சுனிதா அரோரா.

மாறிவரும் வாழ்க்கைச் சூழலால் இன்று கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்துள்ளது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், உடல் செயல்பாடு இல்லாததால் ஏற்படும் உடல் பிரச்னைகளாலும் தாமதமாகத் திருமணம் செய்வது, குழந்தை பெறுதலைத் தள்ளிப்போடுவது ஆகியவற்றாலும் இன்று பெண்கள் கருவுறும் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் கருத்தரித்தல் மையங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதேநேரத்தில் சில உடல்ரீதியான பிரச்னைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் பெண்களுக்கு ஐவிஎஃப் உள்ளிட்ட கருத்தரித்தல் சிகிச்சை முறைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

தவறான நம்பிக்கைகளும் மருத்துவரின் பதில்களும்

ஐவிஎஃப், குழந்தைக்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது.

ஐவிஎஃப் எப்போதும் ஒரு குழந்தைக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. அதனால் 100% வெற்றி என்பது கிடையாது. அதன் விளைவுகள் பெரும்பாலும் பெண்களின் வயதைப் பொருத்தது. இளம் பெண்கள், குறிப்பாக 35 வயதுக்குள்பட்டவர்கள் 60 -65% இதன் மூலமாக கருவுறுகின்றனர். விந்தணுக்களின் தரம், கருப்பை ஆரோக்கியம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் போன்ற பிற காரணிகளும் இருக்கின்றன. ஐவிஎஃப் சிகிச்சை மீண்டும் மீண்டும் செய்யப்படும்பட்சத்தில் 35 வயதுக்குள்பட்ட பெண்களில் கருவுறுதல் விகிதம் 80-85% ஆக உள்ளது. இருப்பினும் வயது அதிகரிக்கும்போது குறிப்பாக 40 வயதுக்கு மேல், கருவுறுதல் விகிதங்கள் 5–10% வரை கணிசமாகக் குறையும்.

ஐவிஎஃப் சிகிச்சை, வயதான பெண்கள் மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமேயானது.

இது முற்றிலும் தவறானது. லேப்ராஸ்கோபி மூலம் சிகிச்சையளிக்க முடியாத கருப்பை குழாய்கள் (ஃபெலோபியன் குழாய்கள்) அடைப்பு, குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது குறைந்த விந்தணு இயக்கம், கடுமையான ஆண் மலட்டுத்தன்மை, கருப்பையில் திசுக்கள் வளரும் எண்டோமெட்ரியோசிஸ் நிலை போன்ற சில சூழ்நிலைகளில் இளம்வயது பெண்களும் ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஐவிஎஃப் சிகிச்சைக்கு வயது ஒரு பொருட்டல்ல. கருவுறுதலுக்கு எதிரான சவால்களுக்கு இது அறிவியல் தீர்வாகவே பார்க்கப்படுகிறது.

ஐவிஎஃப் என்பது பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சிகிச்சையாகும்.

இது முற்றிலும் தவறான கருத்து. ஐவிஎஃப், கணவன் - மனைவி இருவருக்கும் அளிக்கப்படும் சிகிச்சை முறை. கருவுறாமையில் ஆண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உதாரணமாக, ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை எதுவும் இல்லாதபோது அறுவைச் சிகிச்சை மூலமாக அவர்களிடமிருந்து விந்தணுக்கள் எடுக்கப்பட்டு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டு கருவுறுதல் நடைபெற முயற்சிக்கப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் இயற்கையாக கருவுறுவது சாத்தியமில்லை. விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது ஐவிஎஃப் முறையே சாத்தியமாகிறது.

ஐவிஎஃப், பெண்களுக்கு பாதுகாப்பற்றது

அனுபவம் வாய்ந்த ஐவிஎஃப் நிபுணர்கள் செய்யும் சிகிச்சை கண்டிப்பாக பாதுகாப்பானதாகவே இருக்கும். மற்ற மருத்துவ சிகிச்சைகளைப் போலவே இத்தனையும் கவனமுடன் பொறுப்புடன் கையாள வேண்டும்.

ஐவிஎஃப் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் அந்த பெண்ணுக்கு ஹார்மோன் பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்கிறோம். உதாரணமாக மார்பகப் புற்றுநோய் இருந்த பெண்களிடையே அதிகப்படியாக ஹார்மோன் வெளிப்பாட்டை நாங்கள் தவிர்க்கிறோம். பெண்களின் உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறோம். சரியான திட்டமிடல் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ளும்போது ஐவிஎஃப் தீங்கு விளைவிப்பதில்லை.

இயற்கையாக கருத்தரிக்கும் குழந்தைகளை ஒப்பிடுகையில், ஐவிஎஃப் குழந்தைகளின் ஆரோக்கியம் குறைவாக இருக்கும்.

மருத்துவ அறிக்கைகளின்படி ஐவிஎஃப் மூலமாக கருத்தரித்து பிறந்த குழந்தைகளில் குரோமோசோம்களின் பாதிப்பு 1- 2% இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கருவுறுதல் முதலே நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். தொடர் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் 12, 16 மற்றும் 20 வாரங்களில் செய்யப்படும் சிறப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் போன்ற முதற்கட்ட பரிசோதனைகள் மூலம் பெரும்பாலான பிரச்னைகளை 99% துல்லியமாகக் கண்டறிய முடியும். எனவே இதில் சிறிதளவு ஆபத்து இருந்தாலும் அவற்றைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். ஐவிஎஃப் கருத்தரித்தல் தற்போது பாதுகாப்பானவையாகவும் திறம்பட நிர்வகிப்பதாகவும் இருக்கின்றன.

இயற்கையாக கருவுற இயலாத தம்பதிக்கு ஐவிஎஃப் கடைசி வாய்ப்பாகும்.

அனைத்து வகை பிரச்னைகளுக்கும் தீர்வாக ஐவிஎஃப் சிகிச்சை முறை உள்ளது. ஒருவேளை ஐவிஎஃப் சிகிச்சை தோல்வியுற்றால்கூட ஐசிஎஸ்ஐ(ICSI) எனும் இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன்) போன்ற அடுத்த நிலைகள் உள்ளன. ஆண்களுக்கு கடுமையான பிரச்னைகள் இருக்கும்போது இது உதவும். செய்யறிவு(ஏஐ) உதவியுடன் கரு தேர்வு போன்ற புதிய தொழில்நுட்பங்களும் உருவாகி வருகின்றன. வரும் காலங்களில் இது மேலும் வளர்ச்சியடையலாம். பிளேட்லெட் அதிகமுள்ள பிளாஸ்மா (PRP), ஸ்டெம் செல்கள் போன்ற சில சிகிச்சைகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அவை கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Summary

Is IVF treatment safe for women? Is it only for older women? Dr Sunita Arora clears myths on IVF

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com