

தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான ஒன்று. உணவில்லாமல்கூட சில நாள்கள் இருந்துவிடலாம், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒருபோதும் முடியாது.
நம் உடலே சுமார் 50- 75% நீரால் நிரம்பியிருக்கிறது என்று அறிவியல் கூறுகிறது. ஒருவருடைய வயது, பாலினம், உடல் அமைப்பைப் பொருத்து இந்த அளவு மாறுபடும்.
உடல் வெப்பநிலையை சரிசெய்ய, உடல் கழிவுகளை வெளியேற்ற, செரிமானத்திற்கு, பல்வேறு உறுப்புகள் செயல்பட என நீரின் வேலைகள் ஏராளம்.
இந்நிலையில் உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பது அவசியம். நீர்ச்சத்து குறைபாட்டால் உடலுக்கு பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அதிகப்படியான நீர்ச்சத்தும் ஆபத்து என்று கூறப்படுகிறது.
அதிக நீர் ஆபத்தா?
உடலில் அதிகமாக நீர் இருந்தால் உடலுக்கு ஆபத்து என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிகப்படியான நீர், ரத்த ஓட்டத்தில் சேரும்போது வடிகட்டுதல் வேலையைச் செய்யும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகிறது.
சிறுநீரகங்கள் உடலில் உள்ள நீர், உப்புகள், தாதுக்களின் சமநிலையைப் பராமரிக்கின்றன. நீரில் உள்ள கனிமங்களை வடிகட்டிய பின்னர் எஞ்சியவற்றை கழிவுகளாக வெளியேற்றுகிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பது, ரத்தத்தில் சோடியம் அளவை நீர்த்துப்போகச் செய்கிறது, இது ஹைபோநெட்ரீமியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த சோடியம் அளவு மிகக் குறைவாக இருக்கும்போது சிறுநீரகங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் உடலின் நீர்ச்சத்து சமநிலையில் பிரச்னை ஏற்படுகிறது.
எவ்வளவு போதுமானது?
நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் நீர் என்ற விதி அனைவருக்கும் பொருந்தும். கால நிலை, வயது, பாலினம், உடலின் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து ஒருவருக்குத் தேவையான தண்ணீர் அளவு மாறுபடும்.
நடுத்தர வயதுடைய ஒருவரின் சிறுநீரகங்கள், ஒரு மணி நேரத்திற்கு 0.8 முதல் 1 லிட்டர் தண்ணீரை வடிகட்ட முடியும். அதற்கு மேல் தண்ணீர் இருக்கும்பட்சத்தில் அது சிறுநீரகங்களுக்கு சிரமமாக இருக்கலாம்.
ஒரு நாளைக்கு தண்ணீர், பழங்கள், உணவில் உள்ள நீர் அனைத்தும் சேர்த்து 2.5 முதல் 3.5 லிட்டர் என்ற அளவில் இருந்தால் அது பாதுகாப்பானது என்று ஆய்வு கூறுகிறது.
இறுதியாக உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலரின் உடல்வாகுக்கு ஏற்ப, தண்ணீர் அதிகமாக தேவைப்படும், அவர்கள் கட்டாயம் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். தாகம் ஏற்பட்டால் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும்.
அதேநேரத்தில் உடலில் அதிகமாக நீர் இருப்பது மூளை வீக்கம், குமட்டல், குழப்பம், வலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஏற்கனவே சிறுநீரகம் அல்லது இதய பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வீக்கம், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
உடலுக்கு நீர்ச்சத்து தேவைதான். அதற்காக வெறும் நீரை மட்டும் குடிக்காமல் பழங்கள், மோர், இளநீர், மூலிகை தேநீர் போன்ற திரவங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
அதிக குளிர்ந்த நீரைவிட அறை வெப்பநிலை அல்லது லேசான குளிர்ந்த நீர் குடிப்பது அதில் உள்ள கனிமங்களை எளிதாக உறிஞ்ச உதவும் என்றும் கூறப்படுகிறது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.