
உடல் எடை அதிகரிப்பது தைராய்டு பிரச்னையின் அறிகுறியா?தைராய்டுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
தைராய்டு பிரச்னைகள் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் புவனேசுவரம் மணிபால் மருத்துவமனை உட்சுரப்பியல் மருத்துவர் டாக்டர் ஜதின் குமார் மஜ்ஹி.
உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்தால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பிரசவத்திற்குப் பிந்தைய தைராய்டிசம் அல்லது லேசான சப்க்ளினிக்கல் ஹைப்போ தைராய்டிசம் போன்ற சில தைராய்டு கோளாறுகள் குணமடையக் கூடியதுதான். இதற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவையில்லை.
ஆனால், ஹஷிமோட்டோ தைராய்டிடிஸ் போன்ற தீவிர தைராய்டு கோளாறுகளுக்கு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவை.
உடல் எடை அதிகரிப்பு / உடல் எடை குறைவதற்கு தைராய்டு பிரச்னைதான் காரணம்
தைராய்டு ஹார்மோனில் மாற்றம் ஏற்படுவது உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் உணவு முறைகள், வாழ்க்கை முறை அல்லது பிற ஹார்மோன் பிரச்சனைகளாலும் உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவது நிகழலாம். பரிசோதனை செய்வதுகொள்வதன் மூலமாக தைராய்டு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளலாம்.
அயோடின் உப்பு, தைராய்டு பிரச்னையைத் தடுக்கும்
உடலுக்கு கண்டிப்பாக அயோடின் உப்பு அவசியம். இது காய்ட்டர் எனும் முன்கழுத்து கழலை நோயைத் தடுக்கலாம். ஆனால் பெரும்பாலான தைராய்டு பிரச்னைகள், ஆட்டோ இம்யூன் வகையைச் சேர்ந்தவை. உடலில் உள்ள செல்களைத் தாக்கி அழிப்பவை. அதனால் தைராய்டு, அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுவதில்லை. அயோடின் உப்பு சாப்பிட்டால் தைராய்டு வராது என்று அர்த்தமல்ல.
தைராய்டு, முன்கழுத்து கழலை நோயை ஏற்படுத்தும்
உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு கோளாறுகள் இருக்கலாம். ஆனால் கழுத்தில் வீக்கம் இருக்காது. தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு முன்கழுத்து கழலை நோய் வர வாய்ப்பு இல்லை.
தைராய்டு பிரச்னைக்கான அறிகுறிகளை எளிதில் அடையாளம் காணலாம்
தைராய்டு கோளாறுகள் மறைமுகமானவை. தைராய்டு அறிகுறிகளான சோர்வு, மனநிலை மாற்றம், எடை மாற்றம் ஆகிய அறிகுறிகளை சிலர் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள். தைராய்டு பிரச்னைகளைக் கண்டறிய அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.