கார் வீடு!

காரே வீடு என்றால் மின்சாரத்துக்கு என்ன செய்வது? சூரிய ஒளி பேனலைப் பொருத்தியிருக்கிறார்கள். 300 வாட்ஸ் கரண்ட் அதிலிருந்து கிடைக்கும். 
கார் வீடு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாண்டா பார்பரா நகரம். இங்கே வாழ்ந்தவர் டான் லின்ஸ். மனைவி மார்லின். ஒரு வயதுக் குழந்தை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாண்டா பார்பராவில் இருந்த அவர்களுடைய வீட்டை விற்றுவிட்டார்கள். ட்ரெய்லர் இணைக்கப்பட்ட ஒரு காரை வாங்குகிறார்கள். அந்த கார்தான் அப்போதிருந்து அவர்கள் வீடு. காரை எங்கே நிறுத்துகிறார்களோ, அதுதான் அவர்களுடைய ஊர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவர்களுடைய குடும்பம் பெரிதாகிவிட்டது. டான் லின்ஸ், மார்லின் லின்ஸ் தவிர, மூன்று குழந்தைகள். கூடவே ஒரு பூனைக்குட்டி. இந்த ஐவரும் வட அமெரிக்காவின் பல பகுதிகளை இந்த எட்டு ஆண்டுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால்... வேலை?

இப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கிக்கு சென்னை ஐடி கம்பெனியிலிருந்து வேலை செய்வதில்லையா? அதுபோலதான். லின்ஸ் ஒரு வெப் டிசைனர். மார்லின் ஒரு மருந்துக் கம்பெனி வேலையை ஆன்லைனில் செய்கிறார். வருமானம் வங்கிக் கணக்கில் விழுந்துவிட, போகிற இடங்களில் தேவைப்படும்போது ஏடிஎம்}இல் எடுத்துக் கொள்கிறார்கள்.

25 அடி நீளமுள்ள காரின் பின் இணைப்பாக 200 சதுர அடி உள்ள ட்ரெய்லர். ட்ரெய்லரில் துணிகள், கம்ப்யூட்டர், மெக்ஸிகோவில் வாங்கிய ஒரு கிதார், நாற்காலிகள், ஏணி ஒன்று என மொத்த வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிவிடும்.

பகலில் டைனிங் டேபிளாக பயன்படுத்துவதை இரவில் கட்டிலாக மாற்றி அதில் படுத்துக் கொள்கிறார்கள் டான் லின்ஸியும், மார்லினும். குழந்தைகள் படுக்க ஒரு பரண் படுக்கை. பூனை எங்காவது ஒரு மூலையில் சுருண்டு கொள்ளும்.

காரே வீடு என்றால் மின்சாரத்துக்கு என்ன செய்வது? சூரிய ஒளி பேனலைப் பொருத்தியிருக்கிறார்கள். 300 வாட்ஸ் கரண்ட் அதிலிருந்து கிடைக்கும். கரண்ட் பில் கட்ட, கால்கடுக்க வரிசையில் நிற்கத் தேவையில்லை.

எட்டு ஆண்டுகளாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், காடுகள், அறிவியல் காட்சிக் கூடங்கள், பூங்காக்கள் எனச் சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

"நாங்கள் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். ஒரு வீட்டில் தங்கி வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தால், குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்தானே செலவழிக்க முடியும்? இப்போது பாருங்கள், 24 மணி நேரமும் குழந்தைகளுடனேயே இருக்கிறோம்'' என்கிறார் டான் லின்ஸ் பெருமையுடன்.

குழந்தைகளின் படிப்பு?

படிப்பெல்லாம் காரில்தான்... இல்லையில்லை... கார் வீட்டில்தான். இப்போது எல்லாம் ஆன்லைனில் கிடைக்கிறதே? குழந்தைகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து, சொல்லிக் கொடுக்கிறார்கள்.

"பள்ளியில் படிப்பதைவிட குழந்தைகள் மிக நன்றாக, நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எப்படி என்கிறீர்களா? ஒரு வகுப்பில் இருபது மாணவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓர் ஆசிரியை ஒரு குழந்தைக்கு ஒரு மணி நேர வகுப்பில் அதிகபட்சம் 3 நிமிடங்கள்தாம் ஒதுக்க முடியும். ஆனால் நாங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் ஒதுக்குகிறோம். அதுமட்டுமல்ல, புத்தகங்களில் படிக்கக் கூடிய பலவற்றை நாங்கள் நேரிலேயே குழந்தைகளுக்குக் காட்டிவிடுகிறோம். உதாரணமாக வரலாற்றுப் புகழ்மிக்க ஓர் இடத்தைப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதைவிட நேரிலேயே பார்ப்பது அறிவை வளர்க்கும் அல்லவா?'' என்று கேட்கிறார்கள் டான் லின்ஸும், மார்லினும்.

எல்லாருக்கும் ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ தான் விடுமுறை வரும். அப்போதுதான் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்ப முடியும். ஆனால் இவர்களுக்கோ எப்போதுமே விடுமுறைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com