Enable Javscript for better performance
munnar the south indian kashmir!|தென்னிந்தியாவின் காஷ்மீர் மூணாறு!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  தென்னிந்தியாவின் காஷ்மீர் மூணாறில் இது பீக் சீஸன்... வெயிலுக்கு இதமாக சில்லுன்னு ஒரு ட்ரிப் போகலாமே!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published On : 22nd May 2017 04:41 PM  |   Last Updated : 23rd May 2017 08:22 AM  |  அ+அ அ-  |  

  munnar-1

   

  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்திய கடவுளின் தேசமான மூணாறில் மக்கள் தொகையைக் காட்டிலும் ரிஸார்ட்டுகள் எனப்படும் உல்லாச விடுதிகள் தான் அதிகமிருக்கும் என்று தோன்றுகிறது. ஊருக்கு வெளியே பத்துப் பதினைந்து கிலோமீட்டரில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றன ரிஸார்ட்டுகளுக்கு வழிகாட்டக் கூடிய குறியீட்டுக் கம்பங்கள். இந்த முறை கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்று அங்கே தங்கிய நாட்களை சொர்க்கம் என்றால் தவறில்லை. சென்னை திரும்பி மூன்று நாட்கள் கடந்த பின்னும், இன்னும் நுரையீரல் முதல்  கதகதப்பான உள்ளங்கால் வரையிலும் மிச்சமிருக்கிறது பசுந்தேயிலை வாசம் மணக்கும் மூணாறின் சில்லென்ற காற்றின் ஸ்பரிசம். 

  இந்த மலைச் சிறு நகரில் திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத் தக்க அம்சம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் இளவெயிலும் மென் மழைத் தூறலுமாக அந்த மலைநகர் மாயாஜாலம் காட்டாத குறை! சென்னையின் அக்னி நட்சத்திரக் கொடுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களின் மனக்கிலேசத்தை இதை விடப் பொருத்தமாக வேறு எப்படிக் கூறுவது?!

  சென்னை -  மூணாறு செல்லும் வழித்தடங்கள்:

  சென்னையிலிருந்து மூணாறு செல்ல இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று உடுமலைப்பேட்டை மார்க்கம் மற்றொன்று தேனி வழியாக போடி மார்க்கம். நாங்கள் சென்னையிலிருந்து கிளம்பும் போது கோயம்பத்தூர் மார்க்கமாகவும் மூணாறில் இருந்து திரும்பும் போது தேனி மார்க்கமாகவும் பயணித்தோம். ஏனெனில் அப்போது தான் மூணாறில் காண வேண்டிய இடங்களில் பெரும்பாலானவற்றை நம் பயண நேரத்தின் இடையிலும் கூட கவர் செய்து கொள்ள முடியும். மித வேகத்தில் விரையும் வாகனங்களில் செளகரியமாக அமர்ந்து கொண்டு திடீர், திடீரெனக் குறுக்கிடும் பசும் மலைச்சரிவுகள் வரும் போதெல்லாம் ஜன்னலோர இருக்கையில் உள்ளம் அதிர ஜிலீரென உணரும் திரில் இருக்கிறதே அது மலைப்பயணங்களைத் தவிர வேறெதிலும் வாய்ப்பதில்லை. ஆகவே மலைகளில் பயணிக்க கார், வேன்களை விடவும் பேருந்தும், திறந்தவெளி ஜூப்பும் தான் உகந்தது என்பேன் நான்.

  மூன்று நாட்களாவது தேவை மூணாறு முழுவதும் சுற்றிப் பார்க்க!

  மலை ஏறும் பொழுதை விட இறங்கும் போது தான் மலைக்காட்சிகளின் எழில் வெகு ரம்மியமாக இருந்தது.

  மூணாறு செல்ல நினைப்பவர்களுக்கு பொதுவாக முதலில் தோன்றும் ஒரு எண்ணம்; தேயிலை எஸ்டேட்டுகளைத் தாண்டி அங்கே அப்படி என்ன இருக்கிறது? என்பதாகவே இருக்கும்... எங்களுக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால் அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது. முழுதாக மூணாறைச் சுற்றிப் பார்த்து கண் கொள்ளாமல் அதன் அழகை நிரப்பிக் கொள்ள வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5 நாட்களாவது தேவை என்பது! நின்று நிதானித்து ரசித்து மகிழ அங்கே நிறைய இடங்கள் உண்டு. நாம் தேர்ந்தெடுக்கும் ரிஸார்ட்டுகளிலேயே மூணாறில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த டிராவல் கைடு தந்து விடுகிறார்கள். மொத்தத்தையும் கவர் செய்ய 5 நாட்களாகும். குறைந்த பட்சம் மூன்று நாட்களேனும் இருந்தால் தவற விடக் கூடாத முக்கியமான இடங்களையாவது கவர் செய்து விடலாம். அப்படி நாங்கள் கண்ட இடங்கள்;

  மூணாறில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்:

  1. இறவிக்குளம் நேஷனல் பார்க்: தமிழ்நாடு அரசின் தேசிய விலங்கான வரையாடுகளை இங்கு காணலாம், தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனைமுடி மலைச்சிகரம் இங்கு உள்ளது)

  2. மாட்டுப்பட்டி டேம்: ஹட்ஸன் தயிர் விளம்பரத்தில் மேயும் ஜெர்ஸி ரகப் பசுக்களைக் காண வேண்டுமெனில் நாம் மாட்டுப்பட்டி பண்ணைக்குச் செல்லலாம். பண்ணை தவிர இங்கே அணை ஒன்றும் உண்டு அதை மாட்டுப்பட்டி டேம் என்கிறார்கள். இந்த டேமில் படிகளைக் கொஞ்சம் செப்பனிடலாம். இப்போதிருக்கும் சிதிலமடைந்த படிகள் சற்று வயதானவர்கள் இறங்கிச் சென்று காண வசதியாக இல்லை. தடுமாறி விழுந்தால் நிச்சயம் பற்கள் மட்டுமல்ல எலும்புகளும் உடையும் வாய்ப்பு உண்டு. அந்த வசதிக் குறைவைத் தாண்டியும் ஏரியின் அழகு உளமயக்கம் தருகிறது. சித்திரத்தில் உறையும் ஏரி போல அத்தனை நிசப்தமான ஏரி இது. அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

  3. நியமக்கடா எஸ்டேட்: மூணாறு மலையைச் சுற்றிலும் பற்றிப் படர்ந்துள்ள பண்ணையார் எஸ்டேட், லொக்கார்ட் எஸ்டேட், பள்ளிவாசல் எஸ்டேட், பெருங்கனல் எஸ்டேட், கண்ணன் தேவன் எஸ்டேட் உள்ளிட்ட தேயிலை எஸ்டேட்களில் இதுவும் ஒன்று. நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் வாகான எழிலார்ந்த இடங்கள் பல இந்த எஸ்டேட் வளாகங்களில் உண்டு.

  4. எக்கோ பாயிண்ட்: ஆளொன்றுக்கு 5 ரூபாய் டிக்கெட் கேட்கிறார்கள் இதனுள் இறங்கி நின்று கத்தி விட்டு வர. கொடைக்கானல் எதிரொலிப் பாறை போலத்தான் இதுவும். வண்டல் மண் படிந்த திட்டில் நின்றவாறு எதிரிலிருக்கும் அழகான ஏரியை அடுத்திருக்கும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை நோக்கி மனம் போன போக்கில் ஜெய்ஹோ, என்றோ பாகுபலி என்றோ உரக்கக் கத்தினால் நமது குரல் காற்றில் மீண்டும் எதிரொலித்து நம்மைப் பரவசப் படுத்துகிறது. இது தவிர இங்கே சற்று ஷாப்பிங்கும் செய்யலாம். மரத்தாலான கைவினைப் பொருட்கள், பொம்மைகள், ஹோம் மேட் சாக்லேட்டுகள், உள்ளிட்டவை இங்கே சற்று சகாயமான விலையில் கிடைக்கின்றன. பேரம் பேசி வாங்கத் தெரிந்தால் நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்.

  5. யானைச் சவாரி: மூணாறு டிரிப்பில் எங்களை மட்டுமல்ல அனைவரையுமே அசத்திய ஒரு விசயம் என்றால் அது இந்த யானைச் சவாரியே! சமதளத்தில் இருந்து யானையில் ஏற்றிக் கொண்டு போய் மலை மேல் கால் கிலோமீட்டருக்கு குறைவின்றி ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று மலை இறக்கி அழைத்து வருகிறார்கள். மலை மேல் ஏறும் போது யானை கம்பீரமாக அசைந்தாடி நிதானமாக எட்டெடுத்து வைத்து நடக்க மத்தகக் கம்பியைப் பற்றிக் கொண்டு உல்லாசமாக அமர்ந்து செல்வது பிரமாதமாகத் தான் இருந்தது. எல்லாம் மலை ஏறும் போது மட்டும் தான். யானையில் அமர்ந்து கொண்டு மலை இறங்குவது என்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜபம் செய்வது போலத்தான். ஒரே திகிலாக இருந்தது. கைகள் மத்தகக் கம்பியை இறுக்கிப் பற்றிக் கொள்ள கை தவிர உடலின் அத்தனை உறுப்புகளும் திகிலில் நடுங்கத் தொடங்கி நாம் அந்த திரில்லான எக்ஸ்டஸியை முழுதாக அனுபவித்து முடிப்பதற்குள்  யானை சமர்த்தாகத் மலையிறங்கி சமதளத்துக்கு வந்து விடுகிறது. புதிதாக யானைச் சவாரி செய்பவர்களுக்கு ஒரு ஆலோசனை தயவு செய்து யானையில் அமரும் போது முன்புற இடத்தை யாருக்கும் விட்டுத் தராதீர்கள். யானை மலையிறங்கும் போது நம்மைக் குப்புறத் தள்ளி விடக் கூடுமோ என்று பதறும் உள்ளத்துடனும், தரை இறங்கினால் போதும் எனும் பயத்துடனும் கஜராஜனை உளமுருக தியானித்த படி கண்களை இறுக மூடிக் கொண்டு திரில்லாக யானை மேல் அமர்ந்து பயணிக்கும் அருமையான வாய்ப்பை இழந்தவர்கள் ஆகி விடுவீர்கள். இம்மாதிரியான சாகஷ வாய்ப்புகளை எல்லாம் கிட்டும் போது தவற விட்டு விடவே கூடாது. யானைச் சவாரி செய்ய ஒரு நபருக்கு டிக்கெட் விலை 400 ரூபாய்கள். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை டிக்கெட் என்கிறார்கள்.

  6. வொண்டர் வேலி அட்வெஞ்சர் தீம் பார்க்: சென்னையின் தீம் பார்க்குகள் போலத்தான் ஆனால் அது சமதளத்தில் இருப்பவை. இங்கே  மலை வாசஸ்தலம் என்பதால் அதற்கே உரிய வகையில் சில அட்வெஞ்சர் விளையாட்டுக்கள் பிரத்யேகமாக கவனம் ஈர்க்கின்றன. பெரியவர்களை அத்தனை ஈர்க்காவிட்டாலும் மூணாறில் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று.

  7. ரோஸ் கார்டன்:   சமவெளியாக அன்றி மலைச்சரிவுகளில் அடுக்கு முறையில் மலர்ச்செடிகளை வளர்த்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இங்கு இல்லாத வண்ண மலர்களே இல்லை எனலாம். அத்தனை ரக, ரகமான நிறங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வெண்மை நிற ரேடியோ பூக்கள் தொடங்கி மஞ்சள் நிற குறும்பூக்கள், வாடாமல்லி நிற திரள் பூக்கள், பல வண்ண ரோஜாக்கள், பன்னீர் மலர்கள், ஊதா நிற ஆர்க்கிட்டுகள் வரை எல்லாமும்... எல்லாமும் மனதையும் கண்களையும் ஒரு சேர குளிர்வித்து நிறைவிக்கின்றன. டூரிஸ்டுகள் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களிலும் கேமராக்களிலும் இவற்றின் அழகை வகை வகையாகப் புகைப்படங்களாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் அங்கிருந்து கிளம்பும் போது யாருக்குமேஅந்த மலர்களைப் பிரிய மனமே இருப்பதில்லை.

  8. பவர் ஹவுஸ்: நொடிக்கொரு தரம் மஞ்சுப் பொதிகள் பஞ்சு பஞ்சாய்க் கலைவதும், சேர்வதுமாக அபாரமான தேவலோக எஃபெக்ட் தரும் புகை மண்டலச் சிற்றூர் இது. பேருந்து நிறுத்தமெனக் கருதப்படும் இடத்தில் ஒரு டீஸ்டால் உண்டு. அங்கே வல்லிய கட்டன் சாயா கிடைக்கக் கூடுமென நினைக்கிறேன். நாங்கள் செல்கையில் அந்தக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த பவர் ஹவுஸ் ஏரியாவைச் சூழ்ந்து தான் மஹிந்திரா கிளப் ஹவுஸ் ரிஸார்ட் உள்ளிட்ட பிரபல ரிஸார்ட்டுகள் நிறைய அமைந்துள்ளன. ஓரிரு கிலோ மீட்டர்கள் தொலைவுக்குள் இன்னொரு ரிஸார்ட் அமைந்திருப்பது மேகப் பொதிகளுக்குள் மறைந்திருக்கும் சொர்க்க லோக அரண்மனைகள் போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகின்றன. வாக்கிங், ஜாகிங்கில் ஆர்வமுள்ள டூரிஸ்டுகள் தங்க இந்தப் பகுதியில் இருக்கும் ரிஸார்ட்டுகளே உகந்தவை. நடக்கத் தோதான அழகான மலைச்சரிவு இங்கே உள்ளது. 

  9. ஸ்பைஸ் கார்டன்: அருமையான ஆயூர்வேத ஷாப்பிங் செய்ய உகந்த இடம் இது. பொருட்களின் விலை சற்றுக் கூடுதலே! ஆனாலும் விளையும் இடத்திலேயே கிடைப்பதால் ஒரிஜினலாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் விலை தகும் என்றே தோன்றுகிறது. இங்கே 100 கிராம் நல்மிளகின் விலை 100 ரூபாய். மிளகு மட்டுமல்ல ஏலம், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, காப்பிக் கொட்டைகள், பிரியாணி இலை, பட்டைச் சுருள், அன்னாசிப் பூ, ஏக முகம் தொட்டு பல முகங்கள் கொண்ட 15 விதமான ருத்ராக்‌ஷ விதைகள்,  மரத்தக்காளி மரம், ஊறுகாய் போடப் பயன்படுத்தப் படும் குறு மிளகாய்கள், என அனைத்துமே இங்கே விளைவிக்கப் படுகிறது. சுத்தமானது மட்டுமல்ல தரமானதாகவும் கிடைக்கும் என்கிறார்கள். மூணாறில் வாசனைத் திரவியங்கள் வாங்க ஆசைப்படுபவர்கள் இங்கே வாங்கிக் கொள்ளலாம்.

  10. டாட்டா டீ மியூஸியம்: இங்கு பிரிட்டிஷார் காலத்திலிருந்து மூணாறில் எவ்விதம் தேயிலை வர்த்தகம் நடந்து வருகிறது என்பதைக் காட்ட அருமையான புகைப்படக் கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதோடு அந்தக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட தேயிலை எடைக் கருவிகள், மலையில் ஏற வியாபாரிகள் பயன்படுத்திய காலணிகள் உள்ளிட்டவற்றைக் கூட அங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். டீ எஸ்டேட்டின் உள்ளே ஃப்ரெஷ் ஆக தேயிலை பறிக்கப் பட்டு அதிலிருந்து விதம் விதமான டீத் தூள்கள் எவ்விதமாகத் தயாராகின்றன என்பதை டாக்குமெண்டரி திரைப்படமாகவே முழுதுமாகக் காட்டும் வசதியும் உண்டு. ஒரு மணி நேரக் காட்சிக்கு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

  11. லொக்கார்ட் டீ எஸ்டேட்

  12. ராக் கேவ்: இந்த இடத்தைப் பற்றி ஒரு சுவாரஸியமான கதை உலவுகிறது. 1850 களின் இறுதியில் இந்தப் பிரதேசத்தில் ஒரு திருடன் இருந்ததாகவும். அவன் இந்த மலையைக் கடந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் மக்களிடமிருந்து பொருட்களையும், பணத்தையும் கொல்ளையடித்துக் கொண்டு சென்று மலையைச் சுற்றி வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அளிப்பது வழக்கம். ஆக மொத்தத்தில் அவனொரு நல்ல திருடன் என்றொரு கதை அங்கிருந்த தட்டியில் எழுதப் பட்டிருக்கிறது. மலையாளத்தில் இந்த குகையின் பெயர் மலையில் கள்ளன் குகா! உள்ளே டார்ச் இருந்தால் ஒழிய நம்மால் எட்டிப் பார்க்க முடியாது. மூணாறு ட்ரிப் செல்பவர்கள் அனைவரும் கும்பலாக டார்ச் துணையுடன் உள்ளே ஒரு நடை எட்டிப் பார்த்து விட்டு வரலாம். குகைக்கு எதிரே ஒரு சிறு கடை இருக்கிறது. அங்கிருக்கும் கடைக்காரர் பிரமாதமான சுவையில் பிரெட் ஆம்லெட் போட்டுத் தருகிறார். மலையில் கள்ளன் குகைக்கு எதிரில் இருக்கும் புகைப்பட பாயிண்ட்டில் அமர்ந்து கொண்டு மேகப் பொதிகள் நம் மூக்கை உரசிச் செல்ல இதமாகக் கைகளை உரசிச் சூடேற்றியவாறு குட்டி குட்டியாக பச்சை மிளகாய நறுக்கிப் போட்டு பதமாக வார்க்கப் பட்ட சூடான ப்ரெட் ஆம்லெட்டை சுடச் சுட பிய்த்து உண்பது என்பது சுருங்கச் சொல்லிடின் அந்த நிலைக்குப் பெயர் டிவைன்!

  13. காட்டுத் தேன் கூடு: மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி டேம் செல்லும் மார்க்கத்தில் ஒரே ஒரு இடத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்து தேவதாரு மரங்களுக்குச் சவால் விடக்கூடிய உயரத்தில் ஓங்கி உலகளக்கும் உத்தம மரம் ஒன்றுள்ளது. வேறு எந்த மரத்திலுமே கூட மருந்துக்கும் இல்லாத மலைத் தேன் கூடுகள் இந்த ஒரு மரத்தில் மட்டுமே அடை அடையாக இடவெளியின்றி நிறைந்திருக்கின்றன. சீசனைப் பொறுத்து அடைகளில் தேன் நிரம்பியதும் மலை உச்சியில் வசிக்கும் மூணாறு மலைவாசிகளில் திறமையுள்ளவர்கள் வந்து இந்த அபாயகரமான மரத்தில் ஏறி இந்த மலைத்தேனை இறக்கிச் செல்வார்களாம். பார்க்கும் போதே அந்த மலைத் தேனின் ஒரு துளி நாவின் நுனியில் பட்டதாக ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. 

  இதற்குப் பின் கீழ் வரும் சில இடங்களை நேரப் பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வாகனப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் எங்களால் கண்டு களிக்க இயலாமல் போனது. அவை முறையே;

  14. சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட் 
  15. சந்தன மரக்காடு
  16. பொத்தமேடு வியூ பாயிண்ட்
  17. செங்குளம் போட்டிங்
  18. டாப் ஸ்டேஷன்
  19. குந்தளா ஏரி
  20. ஆனையிரங்கல் டேம் வியூ
  21. புனர்ஜனி மார்சியல் ஆர்ட்ஸ் கிராமம்
  (கதகளியும்/ களறிப் பயட்டும் கண்டு களிக்க நபர் ஒருவருக்கு 1000 ரூபாய்கள் கட்டணம்)

  எனவே மூணாறுக்குச் செல்பவர்கள் முன்கூட்டிய திட்டமிடலுடன் செல்வது நலம்.

  மூன்று வேளை போஜனம்!

  ஒரு மலை நகரில் இத்தனை இடங்களையும் நிதானமாகக் கண்டு ரசிக்க வேண்டுமெனில் நமக்கு மூன்று வேளை போஜனத்தைப் பற்றிய கவலையில்லாமல் தங்கிக் கொள்ள ஒரு அருமையான ரிஸார்ட் நிச்சயம் தேவை. மூணாறைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 3000 லிருந்து துவங்குகின்றன ரிஸார்ட் கட்டணங்கள். மிக உல்லாசமான அறைகளில் தங்க வேண்டுமெனில் நாளொன்றுக்கு ரூ.25,000 கொடுத்து மலை உச்சியில் வெந்நீர் நிரப்பிய நீச்சல் குளமும், மூன்று வேலைக்கும் ராஜ போஜனமுமாய் சேவைகளை விரிவாகத் தரும் 5 நட்சத்திர விடுதிகள் சில இங்கு உண்டு.

  ரிஸார்ட்டுகள் அளிக்கும் காம்ப்லிமெண்ட்டரி காஃபீ, டீ சாம்பிள் பாக்கெட்ஸ் போதாது பாஸ்!

  விடுதித் தேர்வுகள் நமது பர்ஸின் கனத்தைப் பொறுத்தவை என்பதால் அவரவர் மனக்கணக்கால் முன்பே அளந்து கொண்டு தங்கினால் சரியாக இருக்கும். 4 நட்சத்திர விடுதிகள் சிலவற்றில் காலை உணவு நமது கட்டணத்துக்குள் அடங்கி விடும். மதிய உணவையும், இரவு உணவையும் வெளியில் எங்காவது பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இங்கே நீங்கள் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டிய விசயம் ஒன்றுண்டு. காலையில் காப்பியோ, டீயோ உள்ளே தள்ளினால் தான் இயற்கை கடன்களை முறையாகக் கழிக்க முடியும் என்று நோன்பெடுத்தவர்கள் எவரேனும் இருந்தால் தயவு செய்து காலாற நடந்து விடுதியை விட்டு வெளியேறி ஒரு கப் காப்பியோ, கட்டன் சாயாவோ விழுங்கி வரலாம். அதற்கும் சோம்பேறித்தனப் படுபவர்கள் எனில் வீட்டிலிருந்து புறப்படும் போதே ஒரு டப்பாவில் கொஞ்சம் பால் பவுடர் மற்றும் சர்க்கரையை மட்டுமேனும் கொண்டு சென்று விடுவது உத்தமம். விடுதிகளில் காம்ப்ளிமெண்ட்ரியாக அளிக்கப்படும் குட்டிக் குட்டி பால் பவுடர், சர்க்கரைப் பாக்கெட்டுகள் சத்தியமாகப் போதவே இல்லை.

  ஏ.சி தேவைப்படாத மலைசிறு நகரம்!

  ஊரே ஏர் கண்டீஷனிங் செய்யப்பட்ட நிலையில் இருப்பதால் பெரும்பாலான விடுதிகளில் ஏ.சி இருப்பதில்லை. ஆனால் எல்லா விடுதிகளிலும் ராயல் சூட்களில் மட்டும் நிச்சயம் ஏ.சி உண்டு. 

  மூணாறு மலையாள உணவுகளின் சுவை!

  உணவில் சுவை என்று பார்த்தால் தமிழர்களின் நாவின் சுவை மொட்டுகளைக் கட்டிப் போடும் திறன் மலையாள உணவு வகைகளுக்கு இல்லை என்றே கூற வேண்டும். பழப்பாயஸம், எரிசேரி, புளிச்சேரி, குண்டு அரிசிச் சோறு, சப்பாத்தி, பூரி, புல்கா, பரோட்டா, நூடுல்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி வகைகள் அனைத்திலுமே கொஞ்சம், கொஞ்சம் புகாரி வாசனை. இனித்துக் கொண்டு கிடக்கின்றன எல்லாமும். பிரியாணி என்றால் வாசம் மட்டும் மூக்கைத் துளைத்தால் போதுமா? நாவில் சுவை அறியப்பட வேண்டாமோ! அந்தக் குளிர் மலையின் ஜில்லிப்புக்கு கச்சிதமாக காரசாரமான சுவையில் பிரியாணி கிடைக்கவில்லையே என்பது கொஞ்சம் வருத்தமான விசயமே. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி கூட நம்மூரைப் போல இல்லை. ஓரிரு நாட்களுக்கு சமாளிக்கலாம் என்ற அளவில் தான் இருக்கிறது அவற்றின் சுவையும். கிரில்டு வகை உணவுகளின் சுவை கொஞ்சம் தேவலாம். பேசாமல் மூணாறுக்குச் செல்பவர்கள் அனைவரும் அந்த நாட்களில் மட்டுமேனும் பேலியோவுக்கு மாறலாம். அந்த அளவுக்கு சைவத்தைக் காட்டிலும் அசைவம் அங்கே கொஞ்சம் தேவலாம் என்றிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மகா உத்தமமான விசயம் ஒன்றுள்ளது. சிரமம் பார்க்காமல் கணிசமாக நல்லெண்ணெயில் ஊற வைத்த பொடி இட்லிகளையும், தாராளமாக வெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சுட்ட மிருதுவான சப்பாத்திகளையும் தயார் செய்து நபர்களுக்குத் தக்க தனித் தனி பொட்டலங்களாக கட்டி எடுத்துக் கொண்டு இப்படி உல்லாசச் சுற்றுலா செல்வதென்றால் அதிலும் ஒரு நிம்மதியும், பாதுகாப்புணர்வும் இருக்கவே செய்கிறது. அதோடு காசும் மிச்சம் பாருங்கள். அங்கே ஒரு காஃபிக்கு கூட 350 ரூபாய் தண்டம் அழ வேண்டியிருக்கிறது. ஆகவே சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் முதலில் என்னவெல்லாம் அவசியத் தேவைகள் என முன்னேற்பாடாக ஒரு லிஸ்ட் போட்டுத் தயார் செய்து  எடுத்துச் செல்வது பயணத்தை எளிமையாக்கி விடும்.

  டூர் பர்ச்சேஸ்:

  அப்புறம் இந்த பர்ச்சேஸ் விசயம்... மூணாறில் நீங்கள் உங்களுக்காகவும், அண்டை, அயலாருக்காகவும், நண்பர்களுக்காகவும் வாங்கிச் சென்று அன்பளிக்க கிரீன் டீ, வொயிட் டீ, பிரீமியம் டீ, பிளாக் டீ உள்ளிட்ட பல வகைத் தேயிலைகளைத்  தவிர வேறொன்று உண்டெனில் அது வாசனைப் பொருட்களே! மிளகும், ஏலமும், காப்பிக் கொட்டைகளுமாக விளையும் இடங்களிலேயே ஃப்ரெஷ் ஆக வாங்கலாம். சென்னையோடு ஒப்பிடும் போது விலை சற்றுக் குறைவு என்பதால் மட்டுமல்ல அவை அங்கேயே தயாராவதால் தரம் நம்பகமானதாகவே இருக்கிறது என்பதாலும் தான்.

  அசெளகரியங்கள்:

  மலைப்பாதையில் பிரயாணம் செய்வது எத்தனைகெத்தனை கண்களுக்கு விருந்தோ அத்தனைக்கத்தனை மேனிக்கு வருத்தமே! பேருந்தோ, காரோ எதுவானாலும் சரி மலை ஏறி இறங்கும் முன் உடலை மொத்தமாக சப்பாத்தி மாவைப் போல உருட்டிப் பிசைந்து ஒரு வழியாக்கி விடுகின்றன. பிரயாணம் முடிந்ததும் ஒரு முழுநாள் தூக்கம் இருந்தால் போதும், பிறகு அடுத்த வெகேஷன் ட்ரிப் செல்லும் வரை உற்சாகம் நீடிக்கும் எனும் அளவுக்கு மனதுக்கு இதமான தன்மையை நீடிக்கச் செய்து விடுகின்றன இம்மாதிரியான மலைப்பயணங்கள்! அதனால் அசெளகரியங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் ஒரு முறை மூணாறு சென்று திரும்பலாம்.

  மூணாறு ரிஸார்ட்டுகள் தர வரிசைப்படி:

  மூணாறு டவுனில் இருந்து 5 ஸ்டார், 4 ஸ்டார் தரத்திலான அனைத்து ரிஸார்ட்டுகளுமே கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது;

  பனோரமிக் கெட் அவே:
  இது 5 ஸ்டார் ரிஸார்ட், இங்கே குடும்பத்துடன் மூன்று நாட்கள் தங்கிச் செல்ல 50,000 க்கு குறைவில்லாமல் செலவாகும். மலைச்சரிவின் விளிம்பில் வெந்நீர் நிரப்பிய நீச்சல் குளத்துடன் கூடிய ரிஸார்ட் இது!

  டீ கண்ட்ரி: இது 4 ஸ்டார் கேட்டகிரி தான், ஆனால் இங்கே கிடைக்கும் உணவுகளின் சுவையால் ஒரு முறை இங்கே தங்கிச் செல்பவர்கள் மறுமுறை வேறு ரிஸார்ட்டுகளைத் தேடுவதில்லை என்கிறார்கள். இங்கே தங்கியவர்கள் யாரேனும் இந்தக் கட்டுரையை வாசித்தால் தங்களது அனுபவங்களை கருத்துப் பெட்டியில் பதிவு செய்யலாம்.

  பரக்காட் நேச்சர் ரிஸார்ட்: இது புனர்ஜனி டிரெடிஷனல் வில்லேஜின் அருகில் இருக்கிறது. மூணாறு டவுனில் இருந்து 8 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். நீச்சல் குளம் இல்லை என்பதால் இது 4 ஸ்டார் கேட்டகிரி. உணவில் சுவை அபாரம் என்று சொல்வதற்கில்லை. அதற்காக சுத்த மோசமென்றும் கூற முடியாது. ஒரு குடும்பம் 3 நாட்கள் இந்த ரிஸார்ட்டில் தங்கிச் செல்ல குறைந்த பட்சம் 30,000 ரூபாய்கள் செலவாகலாம். அதிகபட்சம் என்பது நீங்கள் அங்கே பயன்படுத்திக் கொள்ளும் வசதிகளைப் பொறுத்து மாறுபடும். இங்கே நீச்சல் குளம் இல்லையென்பதால் அதற்கு பதிலாக காலை உணவுடன் லஞ்ச் அல்லது டின்னர் காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். அதோடு ஒவ்வொரு நாளுக்கும் பழங்கள், ப்ரெட், குக்கீஸ், ஸ்பெஷல் மசாலா டீ என்று தருகிறார்கள். மலைச்சரிவை ஒட்டிய இதன் திறந்தவெளி ரெஸ்டாரெண்ட் மனடம் கவர்வதாக இருக்கிறது. இங்கே தங்கினால் இரு வேளை உணவு நமது பேக்கேஜுக்குள் அடங்கி விடும். மிச்சமிருக்கும் ஒரு வேளையையும் அவர்கள் அளிக்கும் ப்ரெட் அல்லது குக்கீஸ்கள் கொண்டு சமாளித்து விடலாம். 

  டூர் பிளான்:

  இவை தவிர மேலும் பல குட்டிக் குட்டி ரிஸார்ட்டுகள் இங்கே நிறைய உள்ளன. 5 ஸ்டாரோ, 4 ஸ்டாரோ, 3 ஸ்டாரோ அல்லது எந்த ஸ்டார் கேட்டகிரியும் இல்லாத சாதாரண விடுதி அறையோ எதுவானாலும் சரி பயணத்திற்கு திட்டமிடும் போதே அங்கே ஆகக் கூடிய செலவுக்கணக்குகளையும் கூட முன்கூட்டியே திட்டமிட்டு அவை குறித்த ஒரு சின்னக் கணக்கு வழக்கு குறிப்புடன் பயணங்களைத் தொடங்கினீர்கள் எனில் பயணம் முடிந்து திரும்புகையில் ஓரளவுக்கு பர்ஸ் இளைக்காமல் வீடு திரும்பலாம். 

  சென்று வந்த பிறகே உணர முடிந்தது மூணாறை ஏன் தென்னிந்தியாவின் காஷ்மீர் என்கிறார்கள் என்பது. ஆம்  தென்னிந்தியர்களுக்கு இது காஷ்மீரே தான்!


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp