Enable Javscript for better performance
ஆற்றங்கரைப் பிள்ளையார் - புதுமைப்பித்தன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆற்றங்கரைப் பிள்ளையார் - புதுமைப்பித்தன்

    By புதுமைப்பித்தன்  |   Published On : 28th May 2020 10:47 PM  |   Last Updated : 31st May 2020 08:36 PM  |  அ+அ அ-  |  

    pp_foto

     

         ஊழிக் காலத்திற்கு முன்...

         'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.

         அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

         கரையில் ஒரு பிள்ளையார்.

          வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மணற்குன்றுகளும்  அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.
     

    *

         ஒரு கிழவர் வந்தார்.

         பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று.     'சமூகம்' என்ற ஒரு மேடையைக் கட்டி, அதன் மேல் பிள்ளையாரைக் குடியேற்றினார். அவருக்கு நிழலுக்காகவும், அவரைப் பேய் பிடியாதிருக்கவும், 'சமய தர்மம்' என அரச மரத்தையும், 'ராஜ தர்மம்' என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார்.

         வெள்ளத்தின் அமோகமான வண்டல்களினால் இரண்டு மரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன.

         பிள்ளையாருக்கு இன்பம் என்பது என்னவென்று தெரிந்தது.

         தனக்கு உதவி செய்த பெரியாரின் ஞாபகார்த்தமாக 'மனிதன்' என்ற பெயரை தனக்குச் சூடிக்கொண்டார்.
     

    *

         இரண்டு மரங்களும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு மிகவும் செழிப்பாக நெருங்கி வளர்ந்து, பிள்ளையாருக்கு சூரிய வெளிச்சமே பட முடியாமல் கவிந்து கொண்டன. மழைக் காலத்தில் எப்பொழுதும் மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்ததினால் பிள்ளையாருக்கு நடுக்குவாதம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. மேலும் கிளைகளில் பக்ஷிகள் கூடு கட்டிக்கொண்டு, பிள்ளையாரின் மேல் எல்லாம் அசுத்தப்படுத்தின.

         பிள்ளையாரைப் பார்க்க வெகு பயங்கரமாக இருந்தது. அப்பொழுது இரு கிழவர்கள் வந்தனர்.

         கோர உருவத்துடன் விளங்கும் பிள்ளையாரைக் கண்டதும், இருவரும் ஆற்றுக்கு ஓடி ஜலம் எடுத்து வந்து முதலில் அவரைக் குளிப்பாட்டினார்கள்.

         ஒரு கிழவருக்கு ஒரு யோசனை தோன்ற, கையில் மண்வெட்டியுடன், வெகுவேகமாக ஒரு பக்கமாகச் சென்று மறைந்தார்.

         மேலிருந்த அசுத்தங்கள் போனதினால் உண்டான ஒரு சந்தோஷத்தினால், பிள்ளையார் எதிரிலிருந்த கிழவருடன் பேசலானார்: "என்னை முன்பின் அறியாத நீங்கள் செய்த உதவிக்கு, உங்கள் இருவருக்கும் எனதன்பினைத் தவிர வேறு நான் என்ன கொடுக்க முடியும்? உங்கள் பெயரென்ன, உங்கள் நண்பர் பெயர் என்ன?" என்றார்.

         அதற்கு அந்தக் கிழவர் பதில் சொல்லுகிறார், "பிள்ளையாரே! கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய்பவருக்கு பிரதியுபகாரம் வேண்டுமா? அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. எனது பெயர் 'புத்தன்'; என்னுடன் வந்தவர் என் நண்பரல்ல; அவரை வழியில்தான் சந்தித்தேன். அவர் பெயர் 'ஜீனன்'" என்றார்.

         கிழவருக்கு பளிச்சென்று ஒரு யோசனை யுதித்தது. ஒரே பாய்ச்சலில் மரத்தின் மேல் ஏறி, பக்ஷிகள் கூடு கட்டுவதற்கு வசதியாயிருந்த கிளைகளை எல்லாம் வெட்டவாரம்பித்தார்.

         இத்தனை நாட்களாக இருளிலும் நிழலிலும் இருந்து வந்த பிள்ளையாருக்கு, திடீரென்று பட்ட சூரிய கிரணங்களைத் தாங்க முடியவில்லை. மேலெல்லாம் சுட்டுக் கொப்புளிக்கவாரம்பித்தது. கண்களைத் திறக்க முடியாமல் கூசுகிறது. "நல்லவேலை செய்கிறீர்! போதும் உமது உதவி" என்று கோபித்து, "இந்தக் கிளைகளினால்தான் உமக்கு..." என்று கிழவர் பதில் சொல்லுமுன், தனது தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசினார். கிழவர், மேடைக்கு வடகிழக்கில், வெகுதூரத்தில் போய் விழுந்தார்.

         சற்றுநேரத்தில் மண்வெட்டியுடன் சென்ற கிழவர், பிள்ளையாரை அணுகி, "நான் புதிதாக மேடை ஒன்று கட்டியிருக்கிறேன். அதில் அந்தக் கஷ்டம் ஒன்றும் இல்லை; என்று சொல்லி அவரைத் தூக்கிக் கொண்டு போய், தான் தயாரித்த இடத்தில் உட்காரவைத்து, "இதோபாரும்! இதில் மரங்களே இல்லை; உமக்கு அங்கிருந்த கஷ்டம்..." என்று சொல்லி முடிக்குமுன் அவ்விடத்திலிருந்த உஷ்ணத்தைத் தாங்கமுடியாத பிள்ளையார், கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாகத் தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்துகொண்டு, "உங்கள் இருவருக்கும் உதவிசெய்வது என்றால் பிறரைத் துன்பப்படுத்துவது என்ற நினைப்பா? சற்று முன்புதான், உமது நண்பன், உம்முடன் வந்தவன், எனது அருமையான மரங்களை வெட்டி உடம்பெல்லாம் கொதிக்கும்படி செய்துவிட்டான். கண்ணை மூடிக் கொண்டு சிவனே என்றிருந்த என்னை, நீர் வெகு புத்திசாலித்தனமாக கட்டிவிட்ட உமது மொட்டை மேடையில் போட்டுப் பொசுக்கி விட்டீரே, போதும் உமது உதவி. நீர் சும்மா இருந்தால் போதும்" என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார்.

         பிள்ளையாரின் மனநிலையைக் கண்ட கிழவர், பெரிதும் ஏமாற்றமடைந்து, தானே அந்த மேடையில் உட்கார்ந்து தனது உயிரை விட்டார்.
     

    *

         வெட்டிவிட்டதனால் கிளைகள் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. தாழ்ந்தும் கவிந்தும் வளர்ந்த அரச மரத்தின் இரண்டு கிளைகளுக்கிடையில் பிள்ளையாரின் தலையகப்பட்டுக் கொண்டது. வேப்ப மரத்தின் வேர் ஒன்று பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றி வளர்ந்தது. பிள்ளையாரின் கால்களில் அரச மரத்தின் இரண்டு வேர்கள் இறுக்கி பின்னிக்கொண்டன.
     

         பிள்ளையார் இரண்டு மரங்களுக்குள் சிறைப்பட்டார்.

         காற்றடிக்கும் பொழுதெல்லாம் பிள்ளையாருக்குத் தலை போய்விடும் போல் இருந்தது. வயிற்றைச் சுற்றிய வேரோ - அதன் வேதனை சகிக்க முடியவில்லை. கால்களும் சிறைப்பட்டதினால் ஓடவோ முடியாது.

         பிள்ளையாருக்கு நரகம் எப்படியிருக்கும் என்று சற்றுத் தெரிந்தது.
     

    *

         பல காலம் சென்றது... வடமேற்குக் கணவாய்களில் பெய்த அமோகமான மழையினால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத் தோட்டம் போட்டு வசித்து வந்த கைலி கட்டிய ஒரு தாடிக் கிழவனையும் குடிசை - தோட்டத்துடன் அடித்துக்கொண்டு வந்தது.

         வெள்ளத்தின் வேகத்தினால் அரச மரம் சாய்ந்தது. வேப்ப மரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்ததினால் தண்ணீரில் மிதந்து ஆடிக்கொண்டிருந்தது. பிள்ளையாருக்கு ஓடவும் முடியவில்லை; ஓடவும் பயம்.

         பிள்ளையாரின் துன்பத்திற்கு ஓர் எல்லையில்லை; நீக்க ஓர் வழியுமில்லை.

         வெள்ளத்தில் உருண்டுவந்த தாடிக் கிழவன் வேப்ப மரத்தின் கிளைகளை எட்டிப் பிடித்து மேடையில் தொத்திக்கொண்டான். வெள்ளம் வற்றியது.

         தாடிக்கிழவன் வேப்ப மரத்து நிழலுக்கு ஆசைப்பட்டு அதைத் தூக்கி நிறுத்தினான். வெள்ளத்தில் ஒதுங்கிய ஒரு செத்த பசு மாட்டின் தோலையுரித்து, அதன் மாமிசத்தை வேப்ப மரத்திற்கு உரமாக இட்டான். தன்னுடன் வெள்ளத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு ரோஜாச் செடியை எடுத்து மீதியிருந்த மாமிச எருவையிட்டு, வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் இடையில் நட்டுவைத்தான். மாட்டின் தோலை வைத்து வேப்ப மரத்தடியில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு தன் இடையில் சொருகி இருந்த உடைவாளை வேப்ப மரத்தில் மாட்டிவிட்டு சந்தோஷமாக இருக்கவாரம்பித்தான்.

         ரோஜாச்செடி, உரத்தின் மகிமையால் நன்றாகச் செழித்து வளர்ந்தது. நல்ல வாசனையுள்ள புஷ்பங்களுடன் நீண்ட முட்களும் நிறைந்திருந்தன.

         பிள்ளையாரின் கஷ்டத்தைக் கவனிக்க யாருமில்லை.

         அப்பொழுது மூவர் ஒருவர் பின் ஒருவராய் வந்தனர். அவர்களுக்கு சங்கரன், ராமானுஜன், மத்வன் என்று பெயர்.

         முதலில் வந்தவர் பிள்ளையார் தலையை விடுவிக்க முயன்றார். வெகு கஷ்டப்பட்டு சிறிது விலக்க முடிந்தது. வயிற்றைச் சுற்றிய வேரை சிறிதும் அசைக்க முடியாது என்று கண்டு, தலையை விடுவித்த சந்தோஷத்தில் போய்விட்டார். அவர் பின் வந்த இரு கிழவர்களும் அரச மரத்தை முதலில் இருந்த மாதிரி தூக்கி நிறுத்த யத்தனித்தார்கள். முடியவில்லை. பெரிய மரத்தைத் தூக்க இருவரால் முடியுமா? அதிலும் கிழவர்கள். அரச மரம் கோணிக்கொண்டுதான் நின்றது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

         விலகியிருந்த அரச மரத்தின் கிளைகள் மறுபடியும் கவிந்து பிள்ளையாரின் கழுத்தை இறுக்கவாரம்பித்தன. அருமைத் தொந்தியைச் சுற்றிய, மாமிச உரம் பெற்ற வேப்ப மரத்தின் வேர்களோ பிள்ளையாரை அசையவிடாமல் நெருக்கின.

         ரோஜா புஷ்பங்களின் வாசனையை நன்றாக அனுபவித்தாலும், முட்களை எப்படி விலக்குவது? குத்திக்குத்தி அந்தப் பக்கம் பூராவாகவும் சீழ் வந்தது.

         போதாததற்கு கைலிக் கிழவன், தனக்கு பொழுதுபோகாத நேரங்களில் தனது உடைவாளை எடுத்து பிள்ளையாரின் ஒற்றைக் கொம்பில் தீட்டவாரம்பித்துவிடுவான்.

         மேடையின் மீது அரசங் கன்றுகளும் வேப்பங் கன்றுகளும், வேறு புல்பூண்டுகளும் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

         சில காலம் சென்றது.

         ஒரு நாள் இரவு, மேற்கு சமுத்திரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினால் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது. பிள்ளையார் இருந்த மேடையின் பக்கம் புயற்காற்றும் மழையும் சண்டமாருதமாக அடித்ததினால், ஆறும் பெருக்கெடுத்து கடல் ஜலத்தை எதிர்த்தது.

         பேய் போல் ஆடிக்கொண்டிருந்த மரங்களும் மறுபடி விழுந்து விட்டன. அரச மரம் பிள்ளையார் முதுகின்மேல் சாய்ந்துவிட்டது. வலுவற்ற வேப்ப மரம் முன்போல், பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றியிருந்த வேரின் உதவியால், மேடையிலிருந்து கொண்டு தண்ணீரில் ஆடிக்கொண்டு இருந்தது.

         கைலிக் கிழவனை குடிசையுடன் அடித்துக்கொண்டுபோய்விட்டதால், காற்றுக்கு வளைந்துகொடுத்து மறுபடியும் தலை நிமிர்ந்த ரோஜாச் செடியைத் தவிர அவனுடைய ஞாபகார்த்தமாக வேறு ஒன்றுமில்லை.

         பிள்ளையாருக்கு நரகவேதனை பொறுக்க முடியவில்லை.

         இந்த மூன்று பிணிகளும் பாசக்கயிறு போல் அவரைத் துன்புறுத்தின.

         சமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த ஒருவனைக் கடல் நீர் படகுடன் ஆற்றுக்குள் அடித்துக்கொண்டு வந்ததினால், அந்தப் படகும் இந்தப் பிள்ளையாரின் மேடையை அணுகிற்று. படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலைப் பிடித்துக் கொண்டு மேடையில் தொத்திக்கொண்டான். பிறகு படகையும் மேடையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்.

         வந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் தலைமயிர் உருக்கி வார்த்த தங்கக் கம்பிகள் மாதிரி பொன்னிறமாகப் பிரகாசித்தது. அவனது நீண்ட தாடி பொன்னிறமான ஆபரணம்போல் அவன் மார்பை அலங்கரித்தது. அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும் தோல் பாதரட்சையும் அணிந்திருந்தான். அவனது வலது கையில் கருப்புத்தோல் அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும் ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன.

         இவனுக்கு வேப்ப மரத்தின் மகிமை நன்றாகத் தெரியுமாகையால் உடனே அதைத் தூக்கி நிறுத்தி, அதன் அடியில் தனது படகை கவிழ்த்துப் போட்டு அதனடியில் படுத்து உறங்கினான்.

         அவன் தனக்கு உணவுக்காக வைத்திருந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளையார் முன் வைத்துவிட்டு உறங்கியதினால், பசியின் கொடுமை மிகுந்த அவர், அவைகளை எடுத்து காலி செய்யவாரம்பித்தார். கொழுக்கட்டை தின்று பழகிய பிள்ளையாருக்கு இது தேவாமிருதமாக இருந்தது. பசி நீங்கிய பிள்ளையார் வலியின் கொடுமையைத் தாங்க முடியாமல் அப்படியே உறங்கிவிட்டார்.

         மறுநாள் விடிந்தது.
     

         பிள்ளையார் இருந்த மேடைப்பக்கம் அதிக உஷ்ணமான பூமியாகையால், புதிதாக வந்தவன் தனது நீண்ட அங்கியில் தனது புத்தகத்தையும் சிலுவையையும் கட்டி, வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்கவிட்டுவிட்டு ஒரு சிறிய சல்லடத்தை மாத்திரம் அணிந்துகொண்டு கவிழ்ந்து கிடந்த படகின் மேல் உட்கார்ந்து வேப்பங்காற்றையனுபவித்துக் கொண்டு இருந்தான். பொழுதுபோக்குக்காக கையில் இருந்த உடைவாளைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.

         அப்பொழுது பல கிழவர்கள் வந்தார்கள்.

         மேடையையும் பிள்ளையாரையும் அரச மரத்தையும் கண்டவுடன் பீதியடித்துப் போய்விட்டார்கள்.

         சிலர் அரச மரத்தைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.

         சிலர் பிள்ளையாரின் கழுத்தை விடுவிக்க முயன்றார்கள்.

         சிலர் மேடையை சீர்படுத்தினார்கள்.

         ஒவ்வொருவர் செய்வதும் மற்றவர்களுக்கு தடையாக இருந்தது.

         பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிய வேப்ப மர வேரையறுக்கப் போனால் புதிதாக வந்தவன் வாளை ஓங்குகிறான்.

         அரச மரத்தின் கிளைகளை வெட்டப்போனால், பிள்ளையாரின் உதவியால் மரம் நிற்கிறது. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்து விடும், இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், சற்று பொறுத்துச் செய்யுங்கள் என்றார்கள்.

         சிலர் மரங்களையே எடுத்துவிட்டால் நல்லது என்று நெருங்கினார்கள்.

         இரைச்சல் அதிகமாகிறது.

         மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா என்ற பெரிய தர்க்கம்.

         ஆத்திரமுள்ளவர்கள் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் அழித்துவிட பதைத்து நெருங்கினார்கள்.

         உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது.

         விச்வரூபமா?

         பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா?

         அல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக்கொள்ளுவாரா?
     

    மணிக்கொடி, 22-04-1934, 29-04-1934

     

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp