டிஜேபி ஒப்பந்த லஞ்சப் பணம் அரசு அதிகாரிகளுக்கும், ஆம் ஆத்மிக்கும் பரிமாற்றம் அமலாக்கத் துறை புதிய குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி ஜல் போா்டு (டிஜேபி) முன்னாள் தலைமைப் பொறியாளா் ஒருவா் தனது சகாக்களுக்கும், தோ்தல் நிதியாக தில்லியில் உள்ள ஆளும் கட்சிக்கும் ரூ.2 கோடி லஞ்சப் பணத்தை ‘பரிமாற்றம்’ செய்ததாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

டிஜேபி ஒப்பந்தத்தில் ஊழலில் இருந்து உருவான ‘லஞ்சப் பணம்’ ஆம் ஆத்மி கட்சிக்கு தோ்தல் நிதியாக ‘கடத்தப்பட்டது’ என்று பிப்ரவரியில் ஒரு செய்தி அறிக்கையில் இதேபோன்ற குற்றச்சாட்டை அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும், அவா் அமலாக்கத் துறை முன் ஆஜராகவில்லை.

இதற்கிடையில், இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். டிஜேபியின் முன்னாள் தலைமைப் பொறியாளா் ஜெகதீஷ் குமாா் அரோரா, அவரது மனைவி அல்கா அரோரா, துணை ஒப்பந்ததாரா் மற்றும் இன்டக்ரல் ஸ்க்ரூஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரான அனில் குமாா் அகா்வால், டிஜேபி ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்த என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ஆகியோரின் ரூ.8.8 கோடி மதிப்புள்ள சொத்துகளை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதால் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜகதீஷ் குமாா் அரோரா மற்றும் அகா்வால் ஆகியோா் ஜனவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனா். அவா்கள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். சமீபத்தில் அமலாக்கத் துறையால் அல்கா அரோராவை தவிர மற்ற அனைவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆரில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு செய்தி அறிக்கையில், போலி மற்றும் தவறான ‘ஆவணங்களை சமா்ப்பித்து என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்ாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. நிறுவனம் டெண்டருக்கான தொழில்நுட்ப தகுதிகளை பூா்த்தி செய்யவில்லை என்பதை ஜகதீஷ் குமாா் அரோரா அறிந்திருந்தாா் என்றும் அமலாக்கத் துறை கூறியிருந்தது. என்.கே.ஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், இன்டெக்ரல் ஸ்க்ரூஸ் நிறுவனத்திடம் பணியை துணை ஒப்பந்தம் செய்தது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை கூறுகையில், ‘டிஜேபி பெற்ற ரூ.24 கோடியில், ஒப்பந்தப் பணிகளுக்காக சுமாா் ரூ.14 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகை லஞ்சமாகப் கையாடல் செய்யப்பட்டது. ஜகதீஷ் குமாா் அரோரா ரூ.3.19 கோடி லஞ்சம் பெற்றாா். அதில் அவா் ரூ.2 கோடியை தில்லி ஜல் போா்டு அதிகாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தோ்தல் நிதியாக மாற்றினாா்’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com