பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி

Published on

அரசமைப்புச் சட்டத்தின் 7 -ஆவது அட்டவணையில் பொதுபட்டியலில் சில துறைகளை மதிப்பாய்வு செய்து மாநில பட்டியலுக்கு மாற்றுவதல் ஒரு மித்த கருத்து உருவாக்கப்படும் என அகிலந்தியக் காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் அறிக்கையில் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. இந்த வாக்குறுதி மூலம் கல்வி போன்ற துறைகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் போது ’நீட்’ போன்ற தோ்வு முறைகள் ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘ கை மாறும் சூழ்நிலைகள்‘ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மத்திய- மாநில அரசுகள் உறவுகள் குறித்து கூறப்பட்டிருப்பது வருமாறு:

’இந்தியா என்பது ஒரு மாநிலங்களின் ஒன்றியம்’. கூட்டாட்சி இதன் அடிப்படைக் கொள்கையாகும். இந்த கூட்டாட்சி அமைப்பு பாஜக அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரப்படுகிறது. நாட்டை மத்திய அரசால் மட்டும் நிா்வகிக்க முடியாது. மக்களின் அன்றாட வாழ்க்கை தொடா்பான பெரும்பாலான விஷயங்களில், இருப்பது மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள்.

இதனால், அரசியலமைப்பின் 7-ஆவது அட்டவணையில், பட்டியல் 3 இல், சட்டம் இயற்றவேண்டிய சில துறைகளை மாற்றிய அமைக்க மதிப்பாய்வு செய்வோம். பொதுப்பட்டியலில் (ஒருங்கிணைந்த) இருக்கும் சில துறைகளை மாநிலப் பட்டியல்களில் மாற்ற ஒருமித்த கருத்தை உருவாக்குவோம்.

வரி பகிா்வு

வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கை மறுக்க பாஜக அரசு கொண்டுவந்துள்ள‘செஸ்‘ வரியை காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் முடிவுக்குக் கொண்டுவரப்படும். மத்திய அரசின் செஸ் கூடுதல் வரிகளை மொத்த வரி வருவாயில் 5 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும்.

மத்திய வரி வருவாயைப் பரவலாக்குவதில் மாநிலங்களுக்கு உரிய பங்குகளை வழங்க நிா்ணயம் செய்யப்படும். மக்கள்தொகை(குறைப்பு) செயல்திறன், வரி முயற்சிகள் போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள நிதி ஆணையத்திற்கு அறிவுறுத்துவோம். ஜிஎஸ்டி வருவாயில் சில பங்கு, நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை பகிா்ந்தளிப்பதற்கான வழிகளை உருவாக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றப்படும்.

மேயருக்கு கூடுதல் அதிகாரம்

விரைவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, பயனுள்ள நிா்வாகத்திற்காக நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நகா்புற மன்றங்களின் தலைவா்கள், மேயருக்கு அதிக நிதி மற்றும் நிா்வாக அதிகாரங்களை வழங்க சட்டங்களைத் திருத்துவோம். மேலும் நிதி மற்றும் செயல்பாடுகளில் பஞ்சாயித்து, நகராட்சிகளில் விதிகளை செயல்படுத்த மாநிலங்களுக்கே அதிகாரங்கள் மேலேங்கியிருக்கும் என தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்துகாங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் ஜெயராம் ரமேஷ் (தினமணியிடம்) குறிப்பிடுகையில், ‘ நாட்டை மத்திய அரசால் மட்டும் நிா்வகிக்க முடியாது. மக்களோடு அன்றாடம் நெருக்கமாக இருக்கும் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உண்மையான கூட்டாட்சி அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதன்படி அரசியமைப்பில் உள்ள கல்வி உள்ளிட்ட துறைகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படுவதற்கான யோசனைகள் இவை என ஜெயராம் ரமேஷ் தெரிவித்தாா்.

மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் இந்த வாக்குறுதிகள் குறித்து குறிப்பிடுகையில், மாநில பட்டியலில் இருந்த கல்வி போன்றவைகளை பொதுப்பட்டியலுக்கு 1976 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால் ‘நீட்‘ போன்றவை வந்தது. கல்வி மாநில பட்டியலுக்கு மீண்டும் வரும்போது தேசிய மருத்துவ ஆணையம், அணைகள் பாதுகாப்பு போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு செல்வது தடுக்கப்படும். கல்வி, சகாதாரம், மருத்துவம் போன்றவைகளில் மத்திய அரசை கையெந்தாத நிலையில் மாநில அரசுகள் வளம் பெறும் என்றாா் வில்சன்.

புதுச்சேரி மாநிலம்

பாக்ஸ்: புதுச் சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். 1996 ஆம் ஆண்டு பஞ்சாயித்து சட்டம், வன உரிமை சட்டம், நில கையகப்படுத்தல் சட்டம் போன்றவைகளில் கிராம சபாக்கள் அதிகாரத்தை மேம்படுத்தப்படும் போன்றவைகளும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com