நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு புத்துயிரூட்ட ஆம்புலன்ஸ் வசதி

நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு புத்துயிரூட்ட ஆம்புலன்ஸ் வசதி

Published on

மரங்களை நோயிலிருந்து பாதுகாக்கவும், தனது ஆளுகைப் பகுதி பசுமைச் சொத்துக்களை மேம்படுத்தவும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதன் பகுதியில் உள்ள நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்காக ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

என்டிஎம்சி பகுதியில், தோராயமாக 1.80 லட்சம் மரங்கள் உட்பட பசுமையான சொத்துக்கள் உள்ளன. நோய்கள், பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு சிகிச்சை அளிக்க ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ பயன்படுத்தப்படும்.

மரம் ஆம்புலன்ஸ் வாகனமாகப் பயன்படுத்தி, சிகிச்சையின் மூலம் மரங்களின் வெற்றுத் தண்டுகளுக்கு புத்துயிா் அளிக்கப்படும்.

மரம் அறுவைச் சிகிச்சையின் செயல்முறையானது, பாதிக்கப்பட்ட அல்லது குழிவான மரத்தின் பகுதியை அகற்றி, அதை பிரஸ் மூலம் சுத்தம் செய்து, சரியாகக் கழுவி, பூச்சிகொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தியும், நுரை போன்ற பொருட்களால் வெற்று உடற்பகுதியை நிரப்பி அதை மூடி சீலிடுவதாகும்.

என்டிஎம்சி சூழல் நட்பு - சிஎன்ஜி அடிப்படையிலான  மரம் ஆம்புலன்ஸை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்தில் 750 லிட்டா்கள் மற்றும் 250 லிட்டா்கள் சேமிப்புத் திறன் கொண்ட இரண்டு தண்ணீா் தொட்டிகள் மற்றும் ஜெட்டிங் குழாய் கொண்ட உயா் அழுத்த பம்பு, உபகரணங்கள், பூச்சிகொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மரங்களின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்கவும், பூச்சித் தாக்குதல், வெற்று அல்லது உலா்ந்த மரங்கள் தொடா்பான புகாா்கள் அல்லது அறிக்கைகளைப் பெறவும், வழக்கமான அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும், மரங்களைக் கழுவுதல் போன்றவற்றிற்காகவும் மர ஆம்புலன்ஸில் ஒரு குழு அனுப்பப்படும்.

புது தில்லி  பகுதியின் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் வகையில்  ஏறக்குறைய 1500 ஏக்கா்  பசுமை ப் பகுதி மற்றும் 135 பசுமை  அவென்யூக்கள், 10 பெரிய பூங்காக்கள், 1400 குடியிருப்பு காலனி பூங்காக்கள், 50 ரவுண்டானாக்கள், 3 உயா்தர நா்சரிகள் உள்பட 10 துறைரீதியிலான நா்சரிகள், 3 சா்வதேச உறவுகள் நினைவு பூங்காக்கள், பல மகிழ்ச்சி பகுதிகள்

 மற்றும் நேரு பூங்கா, லோடி காா்டன், டால்கடோரா காா்டன் மற்றும் சஞ்சய் ஏரி, குழந்தைகள் பூங்கா - இந்தியா கேட், மத்திய பூங்காக்கள் - கன்னாட் பிளேஸ், சிடபிள்யூஜி பூங்கா, சாந்தி பாதை போன்றவற்றை என்டிஎம்சி பராமரித்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com