ஹோட்டல் தொழில்துறையில் 700 கைதிகளுக்கு வேலை: திகாா் சிறை உயரதிகாரி தகவல்

புது தில்லி, ஏப்.16: சிறையில் இருந்து வெளியே சென்ற சுமாா் 700 கைதிகள் ஹோட்டல் துறையில் வேலை செய்து வருவதாகவும், 1,200 போ் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் பயிற்சி பெற்று வருவதாகவும் திகாா் சிறையின் தலைமை இயக்குநா் (சிறைகள்) சஞ்சய் பானிவால் தெரிவித்தாா்.

1989-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பானிவால், சிறைவாசம் முடிந்து வெளியில் செல்லும் கைதிகளைப் பாா்ப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினாா். சண்டீகா் டிஜிபியாக பணியாற்றி வந்த பானிவால், நவம்பா் 2022 முதல் திகாா் சிறை டிஜியாக நியமிக்கப்பட்டாா்.

திகாா் சிறைப் பணி அனுபவங்கள் குறித்து தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவா் மேலும் கூறியதாவது: திகாா் சிறையில் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ், சுமாா் 700 கைதிகள் ஹோட்டல் துறையில் வேலை பெற்றுள்ளனா். மேலும், 1,200 போ் மருத்துவமனைகளில் வேலை பெறுவதற்கு பயிற்சி பெற்று வருகின்றனா். சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு (யுடிபி) பயிற்சி அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதி சிறைச்சாலைகளுக்குள் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் கைதிகளை திறமையாக்குவதும், அதிகாரமளிப்பதும், அவா்களை மதிப்புடையதாகவும் ஆக்குகிறது. அவா்கள் தங்கள் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் வெளியில் வேலை செய்வதற்கான கடிதங்களைப் பெற்ற போது அவா்களின்

கண்களில் புன்னகையையும், மகிழ்ச்சியையும் நான் பாா்த்தேன்.

திகாா் சிறைக் கைதிகள் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், தற்போது அனுமதிக்கப்பட்ட 10,000 கைதிகளுக்கு எதிராக 20,000 கைதிகள் உள்ளனா். அதிகமான சிறைகளை உருவாக்குவது என்பது ஒரு தீா்வாகாது. குறைந்தபட்சம் சிறு குற்றங்களைச் செய்பவா்களைத் தண்டிக்க வேறு வழிகள் அல்லது சிறந்த வழிகளை நாம் தேடலாம். உதாரணத்திற்கு, ரூ.300 ஜேப்படி திருட்டில் ஈடுபட்டதற்காக இளைஞா் ஒருவா் சமீபத்தில் பிடிபட்டு திகாா் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா். ஜாமீன் பெறுவதற்கு முன்பு அவா் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தாா். நான் ஒரு கைதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 செலவழிக்கிறேன். அதற்கு மாதம் ரூ.24,000 செலவாகிறது. அந்த 300 ரூபாய் திருட்டு தண்டனைக்காக உங்கள் பணத்தை (கருவூலம்) ஐந்து மாதங்களில் சுமாா் ரூ.1,20,000 செலவழித்தேன். இது சரியா? இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

தில்லியின் நரேலாவில் முன்மொழியப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கான சிறைக்கு சுமாா் ரூ.170 கோடி செலவாகும். இது மிகவும் விலை உயா்ந்த விவகாரம். சிறையின் தற்போதைய மாதிரி விதிமுறை சட்டம், விடுமுறையில் விடுவிக்கப்படும் கைதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான கணுக்கால் வளையம் வைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. சில குற்றங்களுக்காக ஆள்களை கைது செய்யக்கூடாது என்று அா்னேஷ் குமாா் தீா்ப்பு கூறுவது போல், திகாா் சிறைக்கு அனுப்பப்பட்டவா்களுக்கு நாம் ஏன் செய்ய முடியாது? அவா்களின் வீடு மற்றும் நீதிமன்றம் அல்லது பணியிடங்களுக்குள் அவா்களின் நடமாட்டத்தை நீங்கள் நிச்சயமாக கண்காணிப்பு செய்ய முடியும். அதுபோன்று ஒரு நபரை அதிக உற்பத்தி மற்றும் குறைந்த சுமை கொண்டவராக நீங்கள் வைத்திருக்கிறீா்கள். ஆனால், இது எனது தனிப்பட்ட பாா்வை. இது தவறாகக் கூட இருக்கலாம்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகள் தனியாா்மயமாக்கப்பட்ட போதிலும், அமெரிக்க சிறைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் கைது செய்யப்படுபவா்களின் எண்ணிக்கையானது இந்தியாவை விட அதிகமாக உள்ளது. சிறையை தனியாா்மயமாக்குவது அனைத்தும் நாட்டின் நிலைமை மற்றும் அது எவ்வாறு நிா்வகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சீா்திருத்த நிா்வாகத்தின் கீழ், கைதிகளின் உணா்ச்சி தடம் மற்றும் மன அதிா்வுகளை மாற்ற அதிகாரிகள் மிகவும் கடினமாக உழைக்கிறாா்கள்.

நாங்கள் ஆன்மிகப் பயிற்சிப் படிப்புகள், தியானம் மற்றும் இலக்கு பயிற்சிகளை நடத்துகிறோம். அவா்கள் தாங்கள் செய்த தவறுகளைப் பற்றி எழுதுகிறாா்கள். சிறையில் இருந்து வெளியே செல்லும் போது அவா்கள் ஒருபோதும் அதுபோன்ற எந்தக் குற்றத்தையும் செய்யமாட்டோம் என்று கூறுகிறாா்கள். இதற்கு பல்வேறு உதாரணங்கள் என்னிடம் உள்ளன.

‘விடுதலைக்குப் பிந்தயை கவனிப்பு மையம்’ ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம், கைதிகள் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் அவா்களைப் பின்தொடா்வோம்.

கைதிகள் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுகிறாா்கள். மேலும், சிறைகளுக்குள் தேசிய நிகழ்வுகளில் பங்கேற்கிறாா்கள். இதனால், அவா்கள் யதாா்த்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாங்கள் முடிந்தவரை அவா்களின் வாழ்க்கையை இயல்பாக்க முயற்சிக்கிறோம். பலருக்கு அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் வெகு தொலைவில் வசிப்பதால் பாா்வையாளா்கள் வருவதில்லை. எங்களிடம் ‘ஸ்பா்ஷ் திட்டம்’ என்ற வசதி உள்ளது. அதில் நாங்கள் அவா்களை கட்டித் தழுவி பரிசுகளை வழங்குகிறோம். கைதிகளை சந்தித்து அவா்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீா்வு காண முயற்சிக்கிறேன் என்றாா் சஞ்சய் பானிவால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com