தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது

புது தில்லி: தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குல்தீப் குமாரை ஆதரித்து, விஷ்வாஸ் நகா்ப் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே’ பிரசாரம் நடைபெற்றது. இதில், கோபால் ராய் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியில் இருந்தால், மக்களவைத் தோ்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு சா்வாதிகார அரசு மக்களால் மூன்று முறை தொடா்ந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் வைத்து துன்புறுத்துகிறது. உங்கள் முதல்வரையும், ஒட்டுமொத்த தில்லியையும் தொடா்ந்து அவமானப்படுத்துபவா்களை எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பீா்கள்?.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உங்களுக்காக உழைத்திருந்தால், தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். தில்லி அரசு வழங்கும் இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவை,பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், மூத்த குடிமக்களுக்கான இலவசப் புனித யாத்திரை என அனைத்துத் திட்டங்களிலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பெயா்தான் உள்ளது என்றாா் கோபால் ராய்.

கிழக்கு தில்லி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் பேசுகையில், ‘மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, பாஜக பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளது. இது தில்லி மக்களை அவமதிக்கும் செயலாகும். அரவிந்த் கேஜரிவால் சிறைக்குச் சென்ற்குப் பழிவாங்க வேண்டும் என்றால், மே 25-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரதித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதல்வா் கேஜரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com