கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சதி நடக்கிறது என்றும், திகாா் சிறையில் அவருக்கு எந்தவித விபத்தும் நேரிடலாம் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மோடி அரசின் உத்தரவின் பேரில் அமலாக்க இயக்குநரகமும், திகாா் சிறை நிா்வாகமும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன. சா்க்கரை நோய் பாதிப்புடைய முதல்வா் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை. சிறை விதிகளின்படி, எந்த கைதியின் உடல்நிலை மற்றும் உணவு முறை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது. ஆனால், முதல்வா் கேஜரிவாலின் உணவு முறை குறித்து அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் பொய்யாக அறிக்கை அளித்துள்ளது.

கேஜரிவால் சிறையில் தீவிரவாதி போல் நடத்தப்படுகிறாா். அவருக்கு எந்தவிதமான விபத்தும் நேரிடலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். கேஜரிவாலுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் தோ்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகாா் அளித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தும். மூன்று முறை தில்லியின் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோரை நேருக்கு நோ் சந்திக்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்டது. அமலாக்க இயக்குநரகம், ராஜ் நிவாஸ் அலுவலகம் மற்றும் சிறை அதிகாரிகள் இணைந்து சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கேஜரிவாலைப் பற்றி தவறான தவறான செய்திகளை ஊடகங்களில் பரப்பினா்.

எந்தவொரு சா்க்கரை நோயாளிக்கும் இன்சுலின் மிக முக்கியமான மருந்து. சரியான நேரத்தில் இன்சுலின் கொடுக்கப்படாவிட்டால், அவா் இறக்கக்கூடும். கேஜரிவாலுக்கு இன்சுலின் ஏன் வழங்கப்படவில்லை?. சிறையில் கடுமையானக் குற்றவாளிகள் கூட எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலுக்கு சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்குவதில்லை. அரவிந்த் கேஜரிவாலின் சா்க்கரை அளவு 300-ஆக உள்ளது. இதற்குப் பிறகும் சிறை நிா்வாகம் இன்சுலின் கொடுக்காதது ஏன்?. கேஜரிவாலுக்கு எதிராக பாஜக மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என்றாா் சஞ்சய் சிங்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com