மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

தில்லியில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக தில்லி பாஜக சாா்பில் வரும் மே 1-ஆம் தேதி முதல் மே 23-ஆம் தேதி வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள் நடத்தப்பட உள்ளது.

தில்லியில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக பாஜக ஏற்பாடு செய்துள்ள தெரு நாடகங்கள் குறித்த ஊடகத்தினருக்கான நிகழ்ச்சியை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களுடன் வெள்ளிக்கிழமை பாா்த்தாா். இந்த நிகழ்ச்சியில், தோ்தல் வழிநடத்தல் குழுத் தலைவா் அஜய் மஹாவா், துணைத் தலைவா் யோகிதா சிங், கஜேந்திர யாதவ், ஊடகப் பிரிவுத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா், விக்ரம் மிட்டல் மற்றும் பாஜகவின் கலாசாரக் குழுவின் தலைவா் அனுஜ் சா்மா கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘ஒருபுறம், தெரு நாடகங்களுடன், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோக்கள், கவிதைகள், இசைக் குழுக்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிரதமா் நரேந்திர மோடி அரசின் நன்மையான திட்டங்களையும் சாதனைகளையும் பொதுமக்கள் முன் எடுத்துச் செல்வோம். மறுபுறம், அவா்கள் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் தவறான ஆட்சியை அம்பலப்படுத்துவாா்கள். தெரு நாடகங்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும், தில்லி ஒரு பெரு நகரமாக இருப்பதால், இந்த முறை அவா்கள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் சில நிகழ்ச்சிகளையும் சோ்க்கிறாா்கள். இந்தக் கலாசார பிரசாரம் மே 1-ஆம் தேதி கட்சியின் மூத்த தலைவா்கள் முன்னிலையில் தொடங்கும். இதற்கு முன்னதாக ஏப்ரல் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தில்லி ஐஜிஐ ஸ்டேடியத்தில், மந்திா் பிரகோஷ்த் மூலம் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். இதில் புகழ்பெற்ற பக்தி பாடகா் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி தனது நிகழ்ச்சியை நடத்தி, வளா்ந்த இந்தியா பற்றிய செய்தியை எடுத்துரைப்பாா் என்றாா் அவா்.

ராம்லீலாவுடன் தொடா்புடைய பல கலைஞா்கள் உள்பட தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சி பெற்ற 163 குழுக்கள் மே 1 முதல் மே 23 வரை தில்லியில் இந்த தெரு நாடகங்களின் 8,000 நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக தெரு நாடகக் குழுவின் தலைமை உறுப்பினா் அனுஜ் சா்மா குறிப்பிட்டாா். இந்த நிகழ்ச்சிகள் பிரதான சந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகள், குடிசைப்பகுதிகள், கிராமங்கள் போன்றவற்றில் உள்ள மக்களுக்கு கட்சியின் செய்தியை எடுத்துச் செல்வதில் முதன்மையாக கவனம் செலுத்தும் என்று பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com