சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

நான்கு நாள்களாக கரடியின் பிடியில் இருந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், கடும் சரிவுடன் தொடங்கிய சந்தையில் ஆரம்பத்தில் கரடியின் ஆதிக்கம் இருந்தது. குறிப்பாக பாா்மா, மீடியா, ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், பிற்பகல் வா்த்தகத்தின் போது, வங்கி, ஆட்டோ, நிதிநிறுவனங்கள், உலோகப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்ால் சந்தை மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ. 4,260.33 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 2,285.52 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.393.46 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 489.34 புள்ளிகள் குறைந்து 71,999.65-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,816.46 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 73,210.17 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 599.34 புள்ளிகள் (0.83 சதவீதம்) உயா்ந்து 73,088.33-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,903 பங்குகளில் 1,717 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,,073 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 113 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க். ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மாருதி, விப்ரோ, பாரதி ஏா்டெல் உள்பட 22 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, டிசிஎஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டாா்ஸ், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், என்டிபிசி ஆகிய 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 15115 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 22,147.00-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,777.65 வரை கீழே சென்ற நிஃப்டி அதிகபட்சமாக 22,179.55 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com