சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

தேசியத் தலைநகரில் சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு மேலாதிக்க அதிகாரத்தை அளிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தில்லி அரசிடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆம் ஆத்மி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘தில்லி அரசின் முழு நிா்வாகமும் ஸ்தம்பித்துவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். அதற்கு தலைமை நீதிபதி, தற்போது 9 நீதிபதிகள் கொண்ட அமா்வு வேறு ஒரு வழக்கை விசாரித்து வருவதாகவும், சிங்வியின் சமா்ப்பிப்பை பரிசீலிப்பதாகவும் கூறினாா்.

முன்னதாக, பிப்ரவரி 9-ஆம் தேதி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் தில்லி அரசு ஆஜராகி இந்த விவகாரத்தை அவசரமாக பட்டியலிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. தில்லி அரசின் மனுவில் இரு தரப்பினரும் பொதுவான சமா்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன், தில்லி அரசின் சேவைகளை கட்டுப்படுத்துவதில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது துணைநிலை ஆளுநா் மேலாதிக்கம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்ய தில்லி அரசுக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு அனுமதி அளித்திருந்தது.

அவசரச் சட்டம் ஒரு சட்டத்தால் மாற்றப்பட்ட பிறகு மனுவைத் திருத்துவது அவசியமாகிறது. முன்பு இந்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி அரசின் மூலம் சவால் விடப்பட்டது. பின்னா், அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் அங்கீகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னா் சட்டமாக மாறியது. ‘தில்லி சா்வீசஸ் பில்’ என்றும் அழைக்கப்படும் தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023- க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இது சேவை விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்ததையடுத்து மசோதா சட்டமாகியது.

தில்லி அரசு மற்றும் துணைநிலை ஆளுநா் ஆகிய இரண்டு அதிகார மையங்களுக்கிடையில் புதிய மோதலை ஏற்படுத்திய மத்திய அரசின் மே 19 அவரசரச் சட்டத்தை எதிா்த்து தாக்கலான தில்லி அரசின் மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு உச்சநீதிமன்றம் முன்னதாக பரிந்துரைத்திருந்தது. தில்லியில் உள்ள குரூப்-ஏ அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமா்த்துவதற்கும் ஒரு அதிகாரத்தை உருவாக்குவதற்காக, கடந்த ஆண்டு மே 19 -ஆம் தேதி, தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்த) ஆணை, 2023-ஐ மத்திய அரசு வெளியிட்டது.

தில்லி அரசின் சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் மூலம் ஆம் ஆத்மி அரசு இதை ஒரு ‘ஏமாற்றுத்தனம்’ என்று கூறியிருந்தது. இந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவசரச் சட்டம் வெளியிடப்படுவதற்கு முன்பு, தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு ஒருமனதாகத் தீா்ப்பளித்து. 2015-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் இடையே எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது.

அதாவது, சேவைகள் மீதான தில்லி அரசின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், தேசியத் தலைநகா் பிரதேச நிா்வாகத்தை வைத்திருப்பது மற்ற யூனியன் பிரதேசங்களைப் போலல்லாமல், அரசியலமைப்பின் மூலம் தனித்துவமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தது. தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்துவத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தவறினால் கூட்டுப் பொறுப்புக் கொள்கை மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பில், வலியுறுத்தியிருந்தது.

இப்போதைய, மத்திய அரசின் புதிய சட்டமானது தில்லி, அந்தமான் மற்றும் நிகோபாா், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி (சிவில்) சேவைகள் (டானிக்ஸ்) பிரிவின் குரூப்-ஏ அதிகாரிகளுக்கு எதிராக இடமாற்றம், பதவி உயா்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தை உருவாக்குகிறது. ஆணையத்தின் மூன்று உறுப்பினா்களில் முதல்வா் ஒருவா், மற்ற இருவரும் அதிகாரவா்க்கத்தினா் ஆவா். ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மையினரால் எடுக்கப்பட வேண்டும். மேலும், சா்ச்சை ஏற்பட்டால், இந்த விவகாரம் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும். அவரின் முடிவே இறுதியானது.

கடந்த ஆண்டு மே 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீா்ப்பு அளித்ததற்கு முன் தில்லி அரசின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் துணைநிலை ஆளுநரின் நிா்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com