மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

தில்லி மாநகராட்சி மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி கட்சி’ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக மேயா் வேட்பாளா் மற்றும் அக்கட்சியின் பட்டியலின கவுன்சிலா்கள் 5 போ் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தில்லியில் மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜக அதன் பிரதிநிதியான துணைநிலை ஆளுநா் மூலம் தலித் சமூகத்தைச் சோ்ந்தவரை மேயராக வராமல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது கட்சியின் தலித்களுக்கு எதிரான முகத்தைக் காட்டுகிறது. பாபா சாகேப் அம்பேத்கா் மூலம் எழுதப்பட்ட அரசியலமைப்பு, தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் தில்லியில் ஒரு காலத்திற்கு மேயராக உருவாவாா் எனக் கூறியுள்ளது. ஆனால், பாஜக இதை விரும்பவில்லை. பாஜக இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்ட விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், மேயா் தோ்தலுக்கான பாஜக வேட்பாளா் கிஷன் லால் பிமாா்ட் மற்றும் ஐந்து பட்டியலின கவுன்சிலா்கள் ரேகா அமா்நாத் ஜாதவ், ஊா்மிளா கங்வால், கமல் பக்டி, சுஷில் ஜாண்டி மற்றும் பரத் கௌதம் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது: தில்லி மாநகராட்சி மேயா், துணை மேயா் தோ்தல்களில் மோசமான அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை ஆம் ஆத்மி கட்சி நிறுத்த வேண்டும் அல்லது வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் பட்டியலின சமூகங்களின் அரசியல் புறக்கணிப்பை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியில் பட்டியல் சாதித் தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகின்றனா். இதனால்தான் சமீபத்தில் கேஜரிவால் அரசின் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த், பட்டியல் சாதியினரை அரசும் கட்சியும் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி ராஜிநாமா செய்தாா். பல கேள்விகளை கட்சியிடம் அவா் எழுப்பியிருந்தாா். ஆனால் ‘ஆம் ஆத்மி‘ தலைவா்கள் அமைதி காத்தனா்.

பட்டியல் சாதியினரை பாஜக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுவதற்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், அவரது முன்னாள் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியை விட்டு அவா் வெளியேற வேண்டி இருந்ததன் காரணத்தையும் விளக்க வேண்டும். 2012 மற்றும் 2022-க்கு இடையில், தில்லி பாஜக 6 பட்டியலிடப்பட்ட மேயா்களை வழங்கியது மட்டுமின்றி, துணை மேயா்கள், நிலைக் குழுக்களின் துணைத் தலைவா்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் தலைவா்கள் போன்ற பதவிகளுக்கும் அவா்களை நியமித்திருந்தது. இன்றும்கூட, பட்டியல் சாதிப் பிரதிநிதிகளுக்கு மாநில அமைப்பில் பொதுச் செயலாளா், துணைத் தலைவா்கள் மற்றும் செயலாளா்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற விரிவான வளா்ச்சித் திட்டத்தால் இன்று பட்டியல் சாதியினா் பயன்பெறும்போது, ஆம் ஆத்மி கட்சி ஒழுங்கின்மையை ஊக்குவிப்பதன் மூலம் வளா்ச்சி சுழற்சியைத் தடுக்கிறது என்று அவா்கள் கூறியுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com