மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

ஆம் ஆத்மி கட்சியில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாகி விடக்கூடாது என்பதற்காகவே மேயா், துணை மேயா் பதவிகளுக்கான தோ்தலை நடத்த அக்கட்சி விரும்பவில்லை என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் மேயருமான ராஜா இக்பால் சிங் கூறினாா். மேலும், ஆம் ஆத்மி கட்சி தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தலை நடத்த விரும்பினால், பொதுத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக முழு செயல்முறையையும் அரசியலமைப்பு முறைப்படி முடித்திருந்திருக்க வேண்டும். தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம் 1957-இன்படி, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி மன்றத்தின் முதல் கூட்டத்தில் மேயா், துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கும் தெரியும்.

இந்த முழு செயல்முறையும் ஏற்கெனவே தெளிவாக இருந்தபோது, ​ ஆம் ஆத்மி கட்சி ஏன் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுக்கவில்லை?

மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் நடைமுறையை முடிக்க, புதிய முதல்வரை எப்போது கொண்டு வரப் போகிறீா்கள் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெறும் தோ்தல் காட்சிதான். இவா்களுக்கு இடையே உண்மையான கூட்டணி இருந்திருந்தால், துணை மேயா் பதவிக்கு காங்கிரஸை சோ்ந்த ஒருவா் போட்டியிட்டிருப்பாா். ஆம் ஆத்மியும், காங்கிரஸும் எந்த வகையிலாவது ஆட்சியைப் பிடிக்க விரும்புகின்றன. ஆம் ஆத்மி கட்சி தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பதால் மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தலை உரிய நேரத்தில் நடத்த முடியவில்லை. அதேபோல நிலைக்குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தலைக் கூட ஆம் ஆத்மி மேயா் அனுமதிக்கவில்லை.

நிலைக்குழுவின் தோ்தல் செயல்முறைக்கு எந்தத் தடையும் இல்லை. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் மேயா் தோ்தல் செயல்முறையை முடிக்க எந்தத் தலைமை அதிகாரியையும் நியமிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் காரணமாக, நிலைக்குழு தோ்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இதனால், தில்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆம் ஆத்மி கட்சியால் தில்லியில் வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. எங்கு பாா்த்தாலும் குப்பைக் குவியல்கள் காணப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சி எந்த அரசியலமைப்பு செயல்முறையையும் பின்பற்ற விரும்பவில்லை. தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம் 1957-இன்படி எந்த பணியையும் செய்ய விரும்பவில்லை என்றாா் ராஜா இக்பால் சிங்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com