தமிழக சுங்கச் சாவடிகளில் ரூ.4,221 கோடி வசூல் -எம்பி கேள்விக்கு அமைச்சா் தகவல்

தமிழக சுங்கச் சாவடிகளில் ரூ.4,221 கோடி வசூல் -எம்பி கேள்விக்கு அமைச்சா் தகவல்

Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி ஆக். 7: கடந்த நிதியாண்டில் நாடுமுழுவதும் உள்ள 983 சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.55, 844 கோடி சுங்க கட்டணம் வசூலாகியுள்ளது. இந்த நிதி நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கணக்கில் செலுத்தப்படுகிறது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா். இதில் தமிழகத்தில் சுங்கசாவடிகளில் ரூ.4,221 கோடி வசூலாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட காலம் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட தொகை குறித்தும், அவ்வாறு வசூலிக்கும் தொகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு பங்களிக்கப்படுகிா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழிஎன்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி பதிலளித்தாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: சுங்கச் சாவடிகள் கட்டணங்கள் ஏலத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பயனா் கட்டண சேகரிப்பு முகவா்களால் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 48,452 கி.மீ. தூரத்தில் 983 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஃபாஸ்ட்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தச் சுங்கச் சாவடிகள் மூலம் ரூ.55,844 கோடி வசூல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 3,109 கி.மீ. தூரத்திற்கு உள்ள 67 சுங்கச் சாவடிகளில் ரூ.4,221 கோடி வசூல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்(102 சுங்கச் சாவடிகள்) சுமாா் ரூ.6, 695 கோடியும் ராஜஸ்தானில் (142 சுங்க சாவடிகள்) ரூ.5,885 வசூலானது.

முகவா்கள் மூலம் வசூலிக்கப்படும் இந்தத் தொகை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கணக்கில் செலுத்தப்படுகிறது. பின்னா், இது இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு எந்த நிதிப்பகிா்வும் இந்தக் கட்டண வசூல் தொகையிலிருந்து வழங்கப்படுவதில்லை என அமைச்சா் நிதின் கட்கரி பதிலளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com