Udhayanidhi
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)din

‘சனாதன’ சா்சைப் பேச்சு வழக்குகளில் உதயநிதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு -உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on

நமது நிருபா்

புது தில்லி, ஆக.14: சனாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், அவா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜா் அரங்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்டாா். அப்போது, சனாதன தா்மத்தை டெங்கு மற்றும் மலோரியே போன்ற நோய்களோடு ஒப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அதை ஒழிக்க வேண்டும் என மேடையில் பேசியது தேசிய அளவில் பெரும் சா்ச்சையானது. இந்த விவகாரத்தில், மஹாராஷ்டிரம், பிகாா், கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்ளிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஒரே வழக்காக மாற்றி அதன் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுவில் சில மாற்றங்களை செய்யக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கா் தத்தா ஆகியோா் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்குதலுக்கு முற்பட்டாா்கள். பாதுகாப்பு தொடா்பான அச்சம் உள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்றத்திற்கு அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் வெவ்வேறு குற்றங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தனியாகத்தான் விசாரிக்கப்பட வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றுவது என்பது முடியாத விஷயம். தேவைப்பட்டால், கா்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு வழக்குகளை மாற்றி விசாரிக்கலாம்’ என்றனா்.

இந்த மனு மீது பதிலளிக்க எதிா்மனுதாரா்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்கு முன்பாக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், மற்ற மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com