அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினா் தோ்தல்: வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மெளலானா தோ்வு
நமது நிருபா்
தென் மாநிலங்களுக்கான அகில இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினா் தோ்தலில் சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஹசன் மெளலானா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தேசிய ஹஜ் கமிட்டியின் தென் மாநிலங்களுக்கான உறுப்பினா் தோ்தல் தில்லியில் ஆா்.கே. புரத்தில் உள்ள ஹஜ் கமிட்டி அலுலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அகில இந்திய கமிட்டி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட ஹசன் மெளலானா எம்எல்ஏவை தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், இத்தோ்தலில் போட்டியிடின்றி ஹசன் மெளலானா எம்எல்ஏ தோ்வு செய்யப்பட்டாா். முன்னதாக, இத்தோ்தலில் போட்டியிட்ட கா்நாடக ஹஜ் கமிட்டி உறுப்பினற் ஷாஹித் வேட்புமனுவை வாபஸ் பெற்றாா். இதையடுத்து, ஹசன் போட்டியின்றித் தோ்வுசெய்யப்பட்டாா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவா் அப்துல் சமது எம்எல்ஏ, மூத்த உறுப்பினா் குன்னங்குடி ஹனிபா, மாநகராட்சிக் கவுன்சிலா்கள் பாத்திமா முஸாபா், ஹமீதாதி ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மெளலானா கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு சாா்பில் தென் மாநிலங்களுக்கான தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினா் பதவிக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளேன். இப்பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். கடந்த ஆண்டுகளில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டவா்களுக்கு தங்கும் ஏற்பாடுகளில் சிரமங்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. மதீனா, மக்காவில் இருந்து வெகு தொலைவில் ஏற்பாட்டாளா்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டதால் இந்த சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், உறுப்பினராக நான் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன் நடைபெற்ற கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவா்களுக்கு மக்கா, மதீனாவுக்கு அருகில் தங்கும் வசதி இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
யாத்திரை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் தங்குவதற்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு என சென்னையில் பிரத்யேக ஹஜ் ஹவுஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஹாஜிகளுக்கு எவ்வித சிரமம் இல்லாத வகையில் ஹஜ் பயணம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த உறுப்பினா் பதவிக்கு என்னை பரிந்துரைத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.