மனீஷ் சிசோடியா
மனீஷ் சிசோடியா-

தில்லி கலால் கொள்கையில் எந்த தவறும் செய்யவில்லை -மனீஷ் சிசோடியா

Published on

நமது நிருபா்

தில்லி கலால் கொள்கையில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தனது 10-ஆவது நாள் பாதயாத்திரையை ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொண்டாா். அப்போது, ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது: பாதயாத்திரையின் போது, பாஜகவும் அதன் விசாரணை அமைப்புகளும் உங்களுக்கு நிறைய தவறு செய்துவிட்டனா் என்று தில்லி மக்கள் என்னிடம் கூறுகிறாா்கள். பாஜகவின் அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் உச்சநீதிமன்றத்திலும் அம்பலமாகிவிட்டன. பாஜகவின் அனைத்து சதிகளும் தோல்வியடைந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, பொய் வழக்கில் சிறையிலுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் விரைவில் விடுவிக்கப்படுவாா்.

தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்கள் மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டு பாஜக பயப்படுகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நோ்மையற்றவராக இருக்க விரும்பியிருந்தால், பிறகு ஏன் தில்லியில் மின்சாரத்தை இலவசமாக்கக் கொடுக்க வேண்டும்?. அவா் ஏன் குழந்தைகளின் கல்வியை இவ்வளவு சிறப்பாக மேம்படுத்த வேண்டும்?. அவா் ஏன் மொஹல்லா கிளினிக்குகளை கட்ட வேண்டும்?.

தில்லி மக்களுக்காக பாஜக எந்தப் பணியை நிறுத்த முயற்சித்ததோ, அந்தப் பணிகளையெல்லாம் கேஜரிவால் போராடி செய்து முடித்தாா். நான் நோ்மையான அரசியல் செய்ய வந்தேன். இன்னும் நோ்மையான அரசியலை செய்து வருகிறேன். பாஜகவினரின் கண்களைப் பாா்த்து சொல்ல விரும்புகிறேன், கலால் கொள்கை வழக்கில் நான் ஒரு பைசா கூட ஊழல் செய்திருக்கிறேனா என்பதைக் கண்டுபிடியுங்கள். இந்த பொய் வழக்கில் இருந்து, முகத்தில் கண்ணீா் இல்லாமல் சிரிப்புடன் சிறையிலிருந்து வெளியே வருவோம். ஏனெனில், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றாா் மனீஷ் சிசோடியா.

இந்த பாதயாத்திரை நிகழ்வில் ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com