மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பாதுகாப்புச் சட்டம் கட்டாயம் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க உரிய சட்டம் இயற்றப்படாத மாநிலங்கள் உடனடியாக சட்டமியற்றி அவா்களைப் பாதுக்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலைப் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு பலியான விவகாரம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் மருத்துவா்கள் மற்றும் சுகாதார பணியாளா்களுக்கான பாதுகாப்பிற்காக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.
கொல்கத்தா வன்கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமா் மோடி தெரிவித்த கடுமையான கண்டனம் போன்றவற்றைத் தொடா்ந்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மாநில அரசுகளுடன் தொடா்ச்சியாக கூட்டங்களை நடத்தி வருகிறது.
அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் பாதுகாப்பு தொடா்பாக முதல் தேசிய பணிக் குழுக் கூட்டம் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரச் செயலா் அபூா்வ சந்திரா ஆகியோா் தலைமையில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், காவல் துறை இயக்குநா் ஜெனரல்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரச் சேவை இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல் உள்ளிட்ட மருத்துவ சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டம் குறித்து மத்திய உள்துறைச் செயலகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: கொல்கத்தா சம்பவத்தைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்ட் 22 - ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி மருத்துவா்களுக்குப் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட தேசிய பணிக் குழுவின் அறிக்கையின்படி குறைந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், பிற சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கும் அந்தந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரம் கோரப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச் செயலாளா்கள், காவல் துறை இயக்குநா் ஜெனரல்கள் தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கூட்டத்தில் விளக்கினா்.
தமிழ்நாடு, ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கோவா, குஜராத், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மகராஷ்டிரம் உள்ளிட்ட 26 மாநிலங்களில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களை பாதுகாக்க சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டங்கள் இல்லாத மற்ற மாநிலங்களில் உரிய சட்ட நடைமுறையை உருவாக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வளாகங்கள் ஆகியவற்றில் சுகாதாரப் பணியாளா்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு முறைகள் தொகுக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த பாரதிய நியாய சன்ஹிதாவை (இந்திய நீதித் துறை சட்டம்) காட்சிப்படுத்துவது, மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களின் பின்னனிகளை சரிபாா்ப்பது போன்ற ஆலோசனைகள் கூறப்பட்டது.
மேலும், அரசு மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் மாவட்ட நீதிபதிகள், காவல்துறை கண்காணிப்பாளா்கள், மருத்துவமனை டீன்கள் அல்லது இயக்குநா்கள் ஆகியோரால் கூட்டுப் பாதுகாப்பு தணிக்கைகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அனைத்து மருத்துவமனை / மருத்துவக் கல்லூரி வளாகங்களில் ’வழக்கமான பாதுகாப்பு ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும், சிசிடிவி கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை, ஹெல்ஃப் லைன் (அவசர உதவி) போன்றவை உள்ளிட்ட 14 வகையான வழிகாட்டிகளை அமல்படுத்த மாநில அரசுகளிடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.