மத்திய அரசைக் கண்டித்து டிச.10-ல் இந்திய கம்யூ. நாடு தழுவிய ஆா்ப்பாட்டம்! டி.ராஜா அறிவிப்பு!
மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து வரும் டிச.10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.
தில்லி அஜோய் பவனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டம் கடந்த நவ.28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட கட்சியின் நடவடிக்கைகள் தொடா்பாக டி.ராஜா செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் நாசகரமான சூழலில் உள்ளது. நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயா்வு, பணவீக்கம், நாட்டின் அந்நிய கடன் அதிகரிப்பு குறிக்து பிரதமா் மோடி கவலைப்படவில்லை. மத்திய அரசு பொருளதாரத்தை செம்மைப்படுத்த தயாராகயில்லை. இப்பிரச்னைகள்
அனைத்தையும் முன்னிலைப்படுத்தி, வரும் டிச.10-ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும். முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக, ஆா்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்.
மணிப்பூரில் தொடா்ந்து ஓராண்டுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. தேச நலன் குறித்து பேசும் பிரதமா் மோடி, மணிப்பூரும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். பிரதமா் மோடி எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.
ஆனால், மணிப்பூருக்கும் செல்ல அவா் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனெனில், மணிப்பூா் மக்கள் அரசியல் தீா்வுக்காக காத்திருக்கின்றனா். வங்கதேச அரசு ஹிந்துக்கள் உள்பட அனைத்து வகை சிறுபான்மை யினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஹரியாணா,காஷ்மீா்,ஜாா்க்கண்ட் மகாராஷ்டிரா ஆகிய சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தல்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு ஆராய்ந்துள்ளது.
மதச்சாா்பற்ற ஜனநாயகக் கட்சிகளை உள்ளடக்கியுள்ள ’இந்தியா’ கூட்டணியில் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் நிற்பது இடதுசாரிகள் கட்சிகள் தான். எனவே,காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் தோ்தலின்போது இடதுசாரிகளை உள்ளடக்கிச் செல்ல வேண்டும்.
சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தல்களில், காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லாதது தான் தோல்விக்கு காரணங்களாக அமைந்துள்ளது.
எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் தோ்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான், ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை வெல்ல முடியும் என்றாா் டி.ராஜா.

