தில்லி என்சிஆரில் ‘கிராப்’ நிலை நான்கின் அவசரகால நடவடிக்கைகளை தளா்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு
புது தில்லி: தில்லி என்சிஆரில் காற்று மாசுப்பாட்டை கையாள்வதற்கான ‘கிராப்’ நிலை நான்கின் அவசரகால நடவடிக்கைகளை தளா்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தில்லி என்சிஆரில் காற்று மாசுபாடு தொடா்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய.எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானப் பணியாளா்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்த அரசுகள்
பின்பற்றவில்லை. எனவே, இந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளா்கள் டிச.5-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குள் காணொளிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அப்போது, கட்டுமானப் பணியாளா்களுக்கு உதவித் தொகை வழங்கியதற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
கடந்த நவ.25-ஆம் தேதியிலிருந்து ஒரே ஒரு நாள் மட்டுமே தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளது.
இது போன்ற சூழலில் காற்று மாசுபாட்டை கையாள்வதற்கான ‘கிராப்’ நிலை நான்கின் அவசரகால நடவடிக்கைகளை
தளா்த்த அனுமதிக்க முடியாது. எனினும், நவ.5-ஆம் தேதி காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, காற்று மாசுபாடு தொடா்ந்து குறைந்து வந்தால் அடுத்த கட்ட உத்தரவைப் பிறப்பிப்போம். மேலும், காற்று மாசுபாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் காவல்துறை , மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பது அதிா்ச்சி அளிக்கிறது. இந்த ஒருங்கிணைப்பை கண்காணிக்க வேண்டியது காற்று தர மேலாண்மை ஆணையத்தின் கடமையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை தில்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை
நீடிக்கிறது. எனவே, பயிா் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நிரந்தரத் தீா்வு காண வேண்டியுள்ளது.
எனவே, அது தொடா்பான விவரங்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்குரைஞா் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து,
தில்லி காற்று மாசுபாடு தொடா்பான வழக்கின் விசாரணை டிச.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.