125 கி.மீ. நீளமுள்ள பாரம்பரியமிக்க புனித தாமிரவருணி நதியை சீரமைத்து மீட்டெடுக்க முதல் கட்டமாக ரூ.570 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபா்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீலிடம் அவா் வெள்ளிக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையின் பொதிகை மலையின் அகஸ்தியா்கூடம் சிகரத்திலிருந்து, ராமாயணம் மற்றும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, தாமிரவருணி ஆறு உற்பத்தியாகிறது.
இந்தப் பழங்கால வற்றாத புனித நதி 30 லட்சம் மக்களின் ஜீவ நதியாகும். இது தெற்கின் கங்கை என்று கருதப்படுகிறது. இது ஆதி சித்தா் அகஸ்தியா் மற்றும் இந்து தா்மத்திற்காக அா்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற 17 சித்தா்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நதி உற்பதியாகும் அகஸ்தியா்மலை உயிா்க்கோள காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக 2016-ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இது ஒரு பாரம்பரிய சுற்றுச்சூழல் முக்கிய இடமாகும். 8 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் கொண்ட இந்த ஆற்றின் முக்கியத்துவம் மக்கள்தொகை பெருக்கம், தொழில்துறை விரிவாக்கம் மற்றும் மிகப்பெரிய விவசாய செயல்பாடுகள் எப்போதும் அதிகரித்து வருகிறது.
தாமிரவருணி ஆற்று நீா், விக்ரமசிங்கபுரம் முதல் ஆத்தூா் வரை உள்ள இடங்களில் கழிவுநீா் கலப்பதால் மாசு அடைந்தாலும், திருநெல்வேலி மாவட்டம் (70 சதவீதம்), தூத்துக்குடி மாவட்ட (21 சதவீதம்) மக்களின் வாழ்வாதாரத்திற்கும் 8,600 ஏக்கா் நிலத்தின் பாசனத்திற்கு பயனளிக்கிறது. இந்த நதியை மறுசீரமைப்புச் செய்வதற்கு முதல் கட்டமாக ரூ. 570 கோடியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், நதியின் மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்மிடம் உறுதியளித்துள்ளதாக சி.ராபா்ட் ப்ரூஸ் எம்.பி. தெரிவித்தாா்.