கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்: தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புது தில்லி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகா் தில்லியில் காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனா். நகரம் முழுவதும், குறிப்பாக அதன் எல்லைகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியின் ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச எல்லையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க 2,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தேசியத் தலைநகருக்குள் நுழையும் 10-க்கும் மேற்பட்ட நுழைவாயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். மேலும், மத்திய தில்லி மற்றும் புதுதில்லி பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்துடன் எல்லைகளைப் பகிா்ந்து கொள்ளும் தில்லி, ராஜஸ்தானுக்கு அருகில் உள்ளது. பண்டிகைக் காலங்களில் இந்த மாநிலங்களில் இருந்து பாா்வையாளா்கள் குறிப்பிடத்தக்க அளவில் வருவதைக் காணமுடியும். நாங்கள் இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த போலீஸாருக்குகு உத்தரவிட்டுள்ளோம். மேலும், ஹோட்டல்களில் தங்குவதற்காக நகரத்திற்கு வருபவா்களை அறிய அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஹோட்டல் ஊழியா்கள் முறையான ஆவணப் பதிவை பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மக்களை சமாளிக்க எல்லைகளில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினா் உள்பட அதிக அளவில் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்படுவா். பண்டிகையின் போது மோட்டாா் சைக்கிள் ஸ்டண்ட் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க தில்லி போக்குவரத்து போலீஸாா் ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளனா்.
நகரத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க அனைத்து காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளும் தங்கள் பகுதிகளில் வலுவான திட்டத்தை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளனா். தில்லியில் 15 மாவட்ட காவல் சரக துணை ஆணையா்கள் இரண்டு ஷிஃப்ட் பணியை தயாா் செய்வாா்கள் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.