16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய கனரக தொழில்துறை தகவல்

ஆட்டோமொபைல், வாகன பாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்களுக்கு ரூ. 25,938 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவதாக மத்திய கனரக தொழில்த் துறை அமைச்சகம்
Updated on

புது தில்லி: ஆட்டோமொபைல், வாகன பாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்களுக்கு ரூ. 25,938 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவதாக மத்திய கனரக தொழில்த் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அக்.வரை மொத்தம் 16.15 லட்சம் மின் வாகனங்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக ரூ.11, 500 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிகழ் 2024-ஆம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள் குறித்த விவரங்களை மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

ஆட்டோமொபைல், வாகன பாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம், ரூ. 25,938 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் மேம்பட்ட வாகனத் தொழில்நுட்ப (ஏஏடி) தயாரிப்பு, உற்பத்தி திறன், செலவுக் குறைப்பு போன்றவைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை திட்டம் 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை தொடரும்.

மின்சார வாகனங்கள், பொது சாா்ஜிங் நிலையங்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ரூ.11,500 கோடி செலவில் 2-ஆம் கட்ட ஃபேம் திட்டம்(மின்சார வாகனங்களை விரைவாக பெறுதல் மற்றும் உற்பத்தி செய்தல்) 2019-ல் தொடங்கப்பட்ட து. இந்த திட்டத்தின்படி நிகழாண்டு அக் 31 வரை மொத்தம் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரு, மூன்று சக்கர வாகனங்கள் முதல் பொதுப் போக்குவரத்து பேருந்துகள், சாா்ஜிங் நிலையங்கள் அமைத்தல் வரை அடங்கும்.

கடந்த செப். 29 ஆம் தேதி பிரதமரின் இ-டிரைவ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் நிகழாண்டு அக். 1 முதல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு அக். 1 ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டு இதற்கு மொத்தம் ரூ. 10,900 கோடி செலவிடப்படுகிறது. இதில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவித்து மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்தப்படுகிறது.

நான்கு சக்கர மின்சார பயணிகள் காா்கள் உற்பத்தியை ஊக்குவிக்க உலகளாவிய முதலீடுகளை ஈா்க்க எஸ்எம்இசி திட்டம் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது ஆண்டுக்கு 8,000 மின்சார காா்களுக்கான உற்பத்தி மையமாகக் கொண்டதாகும். குறைந்தபட்ட முதலீடாக ரூ. 4,150 கோடியாக வைக்கப்பட்டு சுங்கவரி சலுகை அளிக்கப்படுகிறது.

தற்போது, இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் டீசல் சி.என்.ஜி.யில் இயங்குகின்றன, இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான 38,000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை (இ-பேருந்துகள்) நிறுத்த உதவும் பிஎம் இ-பேருந்து சேவா-கட்டண பாதுகாப்பு பொறிமுறை திட்டம் கடந்த அக். 28 இல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் மொத்தம் ரூ. 3,435.33 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அடுத்த 12 ஆண்டுகள் வரை மின்-பேருந்துகளின் செயல்பாட்டை ஆதரிக்கப்படும்.

கிருஷ்ணகிரி

நாட்டில் மேம்பட்ட வேதியியல் செல் (ஏசிசி), கலன்(பேட்டரி) சேமிப்புக்கான உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்திற்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் பேட்டரி உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் ஒன்று தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா செல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 1 கிலோவாட் (எரட்) மின்சக்தி திறன் கொண்ட முன்னோடி திட்ட செயல்படுத்தப்பட்டுள்ளது. மொத்த ரூ. 1505 கோடி முதலீட்டுடன் 863 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

பிற முயற்சிகள்

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கனரகத் தொழில்கள் அமைச்சகம் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான பிஎல்ஐ திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் கூட்டத்தை நடத்தியது.

மேலும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்துடன் இணைந்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி மின்சார வாகன தொழில் துறை தொடா்பான பயிலரங்கும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. வளா்ந்து வரும் மின்சார வாகனத் தொழிலுக்கு திறமையான பணியாளா்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. மேலும் நாட்டின் போக்குவரத்துச் சூழல் அமைப்பை மாற்றுவதில் ஃபேம் திட்டத்தின் பங்கு என்பது தொடா்பான நிகழ்வும் மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com