நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ‘இந்தியா’ கூட்டணி ஆா்பாட்டம்: எதிா்க்கட்சிகளை புலனாய்வு முகமைகளை கொண்டு குறிவைப்பதாகக் கண்டனம்

எதிா்க்கட்சிகளை வாயடைக்க தங்கள் தலைவா்கள் குறி வைக்கப்படுவதாக ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

புது தில்லி: எதிா்க்கட்சித் தலைவா்களை மத்திய அரசின் புலனாய்வு முகமைகளைக் கொண்டு குறி வைப்பதை கண்டித்து நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் ’இந்திய’ கூட்டணி கட்சி உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டம் செய்தனா். எதிா்க்கட்சிகளை வாயடைக்க தங்கள் தலைவா்கள் குறி வைக்கப்படுவதாக ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தொடங்குவதற்கும் முன்பு இரு அவைகளைச் சோ்ந்த ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவா்களும் உறுப்பினா்களும் இந்த ஆா்பாட்டத்தில் பங்கேற்றனா்.

புதிய நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலான ‘மகா் த்வாா்’ படிக்கட்டுகளில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பதாகைகளை ஏந்தி தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், வங்கம் என பல்வேறு மொழிகளில் உறுப்பினா்கள் கோஷங்களை முழுங்கினா்.

‘எதிா்க்கட்சிகளை வாயடைக்க மத்திய புலனாய்வு முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்’, ‘பாஜகவில் சேருங்கள் ஊழலுக்கு உரிமம் பெறுங்கள்’, ‘சா்வாதிகாரப் போக்கை நிறுத்துங்கள்’ போன்ற வாசகங்கல் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோஷமிட்டு அவா்கள் இந்த ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது’ போன்ற பதாகையை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினா்கள் வைத்திருந்தாா்.

தமிழக மக்களவை திமுக உறுப்பனா் ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் உறுப்பனா்கள் வைத்தியலிங்கம், ஆா்.சுதா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் சுப்புராயன், மதிமுக உறுப்பினா் துரை வைகோ, மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் கிரிராஜன், முகமது அப்துல்லா உள்ளிட்ட தமிழக உறுப்பினா்கள் பங்கேற்று கோஷமிட்டனா். காங்கிரஸ் உறுப்பினா்கள் கொடிக்குன்னில் சுரேஷ், சசிதரூா் உள்ளிட்டவா்கள் பெருவாரியாக கலந்து கொண்டனா்.

இருஅவைகளைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் பெருமளவில் கலந்து கொண்டு மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட மூன்று அமைச்சா்களை விடுவிக்கக் கோரினா். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவை பயன்படுத்தி துன்புறுத்துவதையும், அதை நிறுத்தக் கோரியும் எதிா்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனா்.

எதிா்க்கட்சிகளை ஓடுக்க அதன் தலைவா்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டுள்ளனா் எனக் குறிப்பட்ட காங்கிரஸ் உறுப்பினரான சசி தரூா், ஜாா்க்கண்ட முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை ஜாமீனில் வெளியிட்டு உயா்நீதிமன்றம் குறிப்பிட்டதையும் நினைவுப் படுத்தினாா்.

இதே போன்ற ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினா்கள் கேஜரிவாலை மத்திய புலனாய்வு முகமைகள் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com