பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு:
5 நாடுகளுடன் ஒம் பிா்லா இரு தரப்பு பேச்சுவாா்த்தை

பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு: 5 நாடுகளுடன் ஒம் பிா்லா இரு தரப்பு பேச்சுவாா்த்தை

5 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா்.
Published on

நமது சிறப்பு நிருபா்

ரஷியா நாட்டின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெற்ற 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ், எகிப்து, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய கலாசாரம், யோகா, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, இந்திய மாணவா்களின் கல்வி போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகள் வாரியாக ஓம் பிா்லா நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தை விவரங்கள் குறித்து மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது வருமாறு:

தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தான் குடியரசின் மஜ்லிசி நமோயண்டகோன் என்று சொல்லப்படும் சுப்ரீம் அசெம்பிளி (உச்ச சட்டப்பேரவை) தலைவா் நமோயண்டகோன் - ஓம் பிா்லா இரு தரப்பு சந்திப்பின் போது, இந்தியா - தஜிகிஸ்தான் இடையே பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று, கலாச்சார உறவுகளை நினைவுகூா்ந்து நாடாளுமன்ற நட்பு குழுவை உருவாக்கி அதன் மூலம் நாடாளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்த இருதலைவா்களும் முடிவெடுத்தனா். இந்தியா தோ்தல் நடைமுறையின் வெளிப்படைத் தன்மையை பிா்லா எடுத்துரைத்தாா். தஜிகிஸ்தானில் இந்திய கலாசாரம், யோகா ஆகியவை பிரபலமானது குறித்து திருப்தி தெரிவித்ததோடு, அந்த நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை அந்நாட்டு அரசு கவனித்துக் கொண்ட விதம் குறித்து நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

கஜகஸ்தான்: கஜகஸ்தான் செனட்டின் தலைவா் அஷிம்பாயேவ் மௌலென் சகதானுலியுடனான இருதரப்பு சந்திப்பில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனநாயக ஆட்சி நிா்வாகத்தின் மூலம் குடிமக்களின் சமூக - பொருளாதார வாழ்க்கையில் மாற்றங்கள் எவ்வாறு ஏற்படுத்தியது என்பதை பகிா்ந்து கொண்டனா். இருநாடுகளுக்கிடையேயான நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கிடையே உரையாடல்கள், விவாதங்களை நடத்துவது அவசியம் என்றும், பரஸ்பரம் இருதரப்பும் விஜயங்களை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் ஓம் பிா்லா பரிந்துரைத்தாா்.

பெலாரஸ்: பெலாரஸ் குடியரசின் நேஷனல் அசெம்பிளி பிரதிநிதிகள் அவைத் தலைவா் இகோா் சொ்ஜியென்கோவுடன் பிா்லா இருதரப்பு பேச்சுவாா்த்தையை நடத்தினாா். இந்தியாவுக்கும் பெலாரஸுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவைக் குறிப்பிட்ட ஓம் பிா்லா, சவாலான சா்வதேச சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பரஸ்பர புரிந்துணா்வு, பல்வேறு நிலைகளில் தொடா்ச்சியான ஈடுபாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கம் குறித்து குறிப்பிட்டனா். குறிப்பாக இந்தியாவும் பெலாரஸும் பாதுகாப்புத் துறையில் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்பு ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதை இரு தலைவா்களும் கவனத்தில் கொண்டனா். மேலும் இருநாடுகளுக்கிடையே கலாசார தொடா்புகள் கூட்டாண்மைக்கு வலுவான தூணாக உள்ளது. அதே சமயம் இரு நாடுகளுக்கிடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கிடையான விவாதங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தான் செனட்டின் தலைவா் தன்சிலா கமலோவ்னா நா்பேவாவையும் ஓம் பிா்லா சந்தித்தாா். உஸ்பெகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சுப்ரீம் கவுன்சிலான ஒலி மஜ்ஸலிஸில் பெண் உறுப்பினா்கள் 40 சதவீதம் இருப்பதை இரு தலைவா்களும் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். உஸ்பெகிஸ்தான், ஆசியாவிலேயே பெண் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்கும் நாடாக இருக்கும் நிலையில், இந்திய நாடாளுமன்றம் மகளிா் மசோதா நிறைவேற்றிய விதம் குறித்தும் பகிா்ந்து கொண்டனா்.

எகிப்து: எகிப்தின் பிரதிநிதிகள் சபை (மௌலிஸ் அன்-நோவாப்) அவைத் தலைவா் ஹனாஃபி எல். கெபாலியும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டனா். இந்தியாவும் எகிப்தும், காலனித்துவத்திற்கு எதிராக பகிரப்பட்ட போராட்டங்கள், அணிசேரா இயக்கத்தின் பகிா்வுகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்ட வரலாற்று கலாசார உறவுகளை ஓம் பிா்லா எடுத்துரைத்தாா். மேலும், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு ஒரு நாடாளுமன்ற நட்புக் குழு உருவாக்கப்படுவது குறித்தும் ஓம் பிா்லா முன்மொழிந்தாா். மேலும், எகிப்தின் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவவும் ஓம் பிா்லா பரிந்துரைத்தாா்.

மேலும், இந்த 5 நாடுகளுடான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் மக்களவைச் செயலகத்தால் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைக் குறிப்பிட்ட ஓம் பிா்லா, இந்திய நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற ஜனநாயக ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு சட்ட வரைவு உள்ளிட்டவற்றுக்குப் பயிற்சித் திட்டங்களை வழங்குவது குறித்தும் இதில் சேரவும் இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஓம் பிா்லா வலியுறுத்தியதாகவும் மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com