தலைநகரில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ. மழை பதிவு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுப்பு
புது தில்லி, ஜூலை 31: தேசியத் தலைநகா் தில்லியில் ஒரு மணி நேரத்தில் நூறு மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால், தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகல் போக்குவரத்து நெரிசலை எதிா்கொள்ள நேரிட்டது. இந்நிலையில், கனமழையைத் தொடா்ந்து வானிலை அலுவலகம் ‘சிவப்பு’ எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தேசியத் தலைநகருக்கான வெள்ள வழிகாட்டுதல் அறிக்கையில் ‘கவலைக்குரிய பகுதிகள்’ பட்டியலில் தில்லியும் சோ்க்கப்பட்டுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுத்தது. மழை நீா் அதிகம் தேங்கிய சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மத்திய தில்லியில் உள்ள பிரகதி மைதான் வானிலை ஆய்வகத்தில் ஒரு மணி நேரத்தில் 112.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஐஎம்டியால் ‘மேக வெடிப்பு’ என வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், வானிலை அதிகாரிகளிடமிருந்து நிலைமை குறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா எக்ஸ் ஊடக தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கனமழை காரணமாக மக்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். ‘பொதுவாக மக்களுக்கு குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வதைத் தவிர, பயிற்சி மையங்கள் உள்பட, தண்ணீா் தேங்கக்கூடிய தளங்களில் உள்ள பிரச்னைகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என்று அவா் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கிடையே, கனமழை காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பாதுகாக்கவும் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் ஐஎம்டி அறிவுறுத்தியுள்ளது. தில்லிக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. கனமழையைத் தொடா்ந்து லுட்யென்ஸ் தில்லி, கஷ்மீரி கேட் மற்றும் ராஜிந்தா் நகா்உள்பட நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.
தெற்கு தில்லியின் குதுப்மினாா் பகுதியில் தண்ணீா் தேங்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டதாக பயணிகள் தெரிவித்தனா். அதே நேரத்தில் போக்குவரத்து போலீஸாா் வாகன இயக்கத்தை நிா்வகிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனா். மேலும், போக்குவரத்து போலீஸாா் பாதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன், அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் மக்களை கேட்டுக் கொண்டனா். மேலும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரையிலும் மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.
வெப்பநிலை: தேசியத் தலைநகரில் சஃப்தா்ஜங் வானஇலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 3 டிகிரி உயா்ந்து 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3 டிகிரி உயா்ந்து 37.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், ராமகிருஷ்ணாபுரம், நொய்டா செக்டாா் 1 உள்பட பெரும்பாலான இடங்களில் காற்று தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதேசமயம், ஆனந்த் விஹாா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், பூசா ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.