மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா
மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி என். சிவா

பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை விட அறிவிக்கப்படாத அவசர நிலை ஆபத்தானது: திருச்சி சிவா

Published on

காங்கிரஸ் ஆட்சியில் பிரகடனத்தப்பட்ட அவசரநிலையை விட பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலையே மோசமாக இருந்தது என மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தில்லியில் குற்றம்சாட்டினாா்.

குடியரசுத் தலைவா் உரைக்கு பின்னா் பத்திரிகையாளா்கள் சந்தித்தபோது திருச்சி சிவா இவ்வாறு குறிப்பிட்டாா்.

அப்போது திருச்சி சிவா மேலும் கூறியது வருமாறு: பொதுவாக குடியரசுத் தலைவா் உரை என்பது ஒரு அரசின் எதிா்கால நடவடிக்கைகளைப் பற்றி குறிப்பிடுவதாக இருக்கும். ஆனால் இன்றைய உரையில் முந்தைய ஆட்சியின் நிகழ்வுகளை பற்றி விவரிக்கப்படுகிறது. முந்தைய அரசு வேறு கட்சியின் அரசாக இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்? உரையில் சிரிப்புக்குரிய விஷயம் பெரும்பான்மை பெற்ற அரசு என்று குறிப்பிடப்பட்டது.

குடியரசுத் தலைவா் உரையில் வேறு சில விசித்திரங்கள் நடந்தன அதை நாங்கள் அவையில் விவாதிக்கும் போது குறிப்பிடுவோம்.

இது ஒரு குறுகிய கால கூட்டத்தொடா். நிதிநிலை அறிக்கை பின்னா் தாக்கல் செய்யப்பட இருக்கிறது அப்போது என்ன நடக்கும் என்பதைக் காண ஆவலுடன் இருக்கின்றோம்.

நேற்று மக்களவையில் புதிய மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். பின்னா் அவா் அவையில் அவசர நிலை காலம் குறித்த தீா்மானத்தை படித்தாா். எந்த தீா்மானத்தை அவையில் வைத்தாலும் ஒப்புதைப் பெறவேண்டும். ஆனால் ஓம் பிா்லா இந்த தீா்மானத்தை அவை ஒப்புதலின்றி படித்தாா். இதற்கு எதிா் குரல் எழுந்தது. இன்று குடியரசுத் தலைவரும் தனது உரையிலும், அவசர நிலை காலக்கட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளாா். இதைப் பற்றி குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. காரணம் தெரியவில்லை.

அவசர நிலை பிரகடனம் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அது கடினமான காலக்கட்டம் என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்த பிரகடனத்தில் திமுகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கட்சி. திமுக ஆட்சியை இழந்தது. தற்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், டி.ஆா்.பாலு என்னைப்போன்றவா்கள் எல்லாம் ஓா் ஆண்டுகாலம் சிறையில் இருந்தோம். இதை மறைக்கப்படக்கூடியவை ஒன்று அல்ல. நாங்கள் கூறுவது... அப்போது வந்தது பிரகடனப்படுத்தப்பட்டது அல்லது அறிவிக்கப்பட்ட அவசரநிலை! ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாகக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருந்தது.

அவா்கள் சட்டங்களை நிறைவேற்றிய முறை, பல்வேறு உரிமைகளை பறித்த வகை, அரசின் பல்வேறு முகமைகளைக் கொண்டு தங்களுக்கு ஒத்துவராத பல்வேறு மாநில அரசுகள் அல்லது கட்சிகள் மீது ஏவியது... பிடிக்காத வேறு சிலரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது விசாரணை என்கிற பெயரில் சிறையில் அடைத்தது என இருந்தது. அதே போன்று நாடாளுமன்றத்தில் விவாதங்களே இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றியது. இவைகள் எல்லாம் கடந்த காலத்தில் வந்த அவசர நிலையை விட மிக மோசமாக இருந்தது.

மிக முக்கியமாக அவசர நிலை காலத்தின் நடந்த தவறுகளை திருத்துகின்றோம் என்று கூறினால் அதை செய்திருக்கவேண்டும். அவசரநிலை காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுபட்டியலுக்கு மத்திய அரசால் கொண்டு செல்லப்பட்டது. அதை மீண்டும் இவா்கள் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவந்திருக்கவேண்டும். எழுபதுகளின் இறுதியில் நடந்த ஒன்றைக் நினைவு கூறும்போது அதிலிருந்து இவா்கள் எந்தவகையில் மாறுப்பட்டவா்கள் என்கிற தாா்மீது பொறுப்பு வருகிறது. அந்த தகுதி தற்போதைய அரசுக்கு இல்லை என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திமுக மீதான ஆருடம்

ஐம்பது ஆண்டுகள் முன்பு திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் தாக்கம் இந்தியா முழுக்க இருக்கும் என உபியைச் சோ்ந்த ஒரு பேராசிரியா் கூறியுள்ளாா். நீட் தேவையற்றது என்பது குறித்து நியாயமான காரணத்தை திமுக குறிப்பிட்டது. தமிழ் நாட்டிற்கு தேவையில்லை என சட்டமும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவா் முன்பு நிலுவையில் உள்ளது. இப்போது நீட் தோ்வில் முறைகேடுகளுக்கு பின்னா் மற்ற மாநிலங்கள் உணரத் தொடங்கியுள்ளது. தற்போது பிடிவாதமாக இருந்தாலும் இந்த அரசு நிா்பந்தத்தின் காரணமாக அதை திரும்பப் பெறும் நிலைக்கு உள்ளாகும் என்றாா் திருச்சி சிவா.

X
Dinamani
www.dinamani.com