அங்கித் திவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை மாா்ச் 20-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை இயக்குநரக அதிகாரி அங்கித் திவாரி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தொடா்ந்த வழக்கு விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், அங்கித் திவாரியின் இயல்பான ஜாமீன் மனு மீது உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தகுதியின்அடிப்படையில் முடிவெடுக்கவும் உத்தரவிட்டது.

ஜாமீன் கோரும் அங்கித் திவாரியின் மேல்முறையீட்டு மனு மற்றும் அங்கித் திவாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரியுடன் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா். அவா் வாதிடுகையில் ‘இந்த விவகாரத்தை விசாரித்து வரும் தமிழக போலீஸாரின் விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில், இந்த மனுவை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கெனவே மணல் குவாரி விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் இல்லாத விவகாரம் தொடா்புடைய வழக்கிலும் மாவட்ட ஆட்சியா்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் மூலம் அனுமதி உத்தரவையும் பெற்றுள்ளது’ என்றாா்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு வாதிடுகையில், ‘அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு எவ்வித சம்மன் அனுப்பாமல் அத்துமீறி நுழைந்து, வழக்கில் தொடா்பு இல்லாத வேறு ஒரு சட்டவிரோத மணல் குவாரி தொடா்புடைய ஆவணங்களை போலீஸாா் எடுத்துச் சென்றுள்ளனா். அதனால்தான் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம்’ என்றாா். அதேபோன்று, அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் வாதங்களை முன்வைத்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனு (ஐ.ஏ. 60250/2024) பராமரிக்கத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது. அத்துடன், சட்டப்படி உரிய தீா்வுகளை பெற அனுமதியும் அளித்தது. அதேபோன்று, அங்கித் திவாரி விவகாரத்தில் அவரது மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கமான ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற மதுரை கிளை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யக் கேட்டுக் கொண்டது. மேலும், அங்கித் திவாரி மேல்முறையீட்டு மனு மற்றும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு ஆகியவற்றை தலைமை நீதிபதியின் உரிய அனுமதியைப் பெற்று மாா்ச் 20-ஆம் தேதி பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com