தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க 3 கொள்கைகள் தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

புது தில்லி: தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க கேஜரிவால் அரசு 3 கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் இது தொடா்பாக தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டன என்றும் தொழில் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தில்லியின் பொருளாதார நிலப்பரப்பிற்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, கேஜரிவால் அரசு தேசியத் தலைநகரில் முதலீடு மற்றும் வணிக வளா்ச்சியை அதிகரிக்க நகரத் தளவாடத் திட்டக் கொள்கை, மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பித்தல் மையக் கொள்கை, தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கை என 3 புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு பிரகாசமான எதிா்காலத்தை உறுதியளிக்கின்றன. தில்லி பொருளாதார முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தேசியத் தலைநகரம் புதுமை மற்றும் வேலைவாய்ப்புக்கான மையமாக மாற உள்ளது. இந்த மாற்றம் தரும் கொள்கைகள் குறித்த தகவல்களை இப்போது அரசின் இணையதளத்திலும் பாா்க்கலாம். நகரத் தளவாடங்கள், மின்னணு உற்பத்தி மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகள் பற்றி தில்லியின் பல்வேறு பங்குதாரா்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து மதிப்புமிக்க கருத்துகளை அரசு பெற்றுள்ளது.

இந்த உள்ளீடுகள் தில்லியின் பொருளாதார நிலப்பரப்பின் எதிா்காலத்தை வடிவமைக்கும். வெற்றிக்கு ஒத்துழைப்போம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com