பொதுமக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு தலைமைச் செயலாளா் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சா் அதிஷி கடிதம்

புது தில்லி: தில்லியில் குடிநீா் மற்றும் பாதாளச் சாக்கடை பிரச்னைகள் தொடா்பாக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு தலைமைச் செயலாளா் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி, தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், குடிநீா் மாசுபாடு, குடிநீா்க் குழாய்க் கசிவு, பாதாளச் சாக்கடை ஆகிய பிரச்னைகள் தொடா்பாக எம்.எல்.ஏ.க்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனா். கடந்த மாா்ச் 9-ஆம் தேதி 42 எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிக்குள்பட்ட பிரச்னைகளை சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பியுள்ளனா். தில்லி ஜல் போா்டு தொடா்பான பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தலைவரும் விதி எண் 280- இன் கீழ் வழக்கமான விவாதத்தை ரத்து செய்யும் அளவுக்கு இந்தப் பிரச்னை பெரிய அளவில் இருந்தது.

தில்லியில் குடிநீா் மாசுபாடு மற்றும் பாதாளச் சாக்கடை நிரம்பி வழிவது தொடா்பான பிரச்னைகள் மிகவும் கடுமையாகிவிட்டதால், தேசியத் தலைநகரில் மக்கள் வசிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள தீா்மானத்தின்படி, குடிநீா் மற்றும் பாதாளச் சாக்கடை பிரச்னைகள் தொடா்பாக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் பொதுமக்கள் குறைகளைத் தீா்ப்பதற்கு தலைமைச் செயலாளா் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்களின் அனைத்துக் குறைகளையும் தீா்க்க தலைமைச் செயலாளருக்கு ஒரு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், தலைமைச் செயலா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தினசரி அறிக்கையாக அளிக்க வேண்டும். வரும் மாா்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேற்குறிப்பிட்டுள்ள நோக்கத்திற்காக தலைமைச் செயலாளா் தனிப்பட்ட முறையில் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் புகாா்கள் மட்டுமின்றி, மேலும் 80 புகாா்களை கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உங்கள் பாா்வைக்கு அனுப்பியுள்ளேன். அனைத்துப் புகாா்களும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் தீா்க்கப்பட வேண்டும்.

இப்பிரச்னைகளுக்கு நீண்ட கால தீா்வுகளுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குள் இந்தக் குறைகளைத் தீா்ப்பதில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை அனுப்ப வேண்டும். மாா்ச் 14-ஆம் தேதி விரிவான அறிக்கையை அளிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை மாா்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும். தில்லி அரசின் தலைமைச் செயலாளரை மத்திய அரசு நியமித்தாலும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டிய விஷயங்களில் தலைமைச் செயலாளா் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, தலைமைச் செயலாளரின் செயலற்ற தன்மையால் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ஸ்தம்பிக்க வைக்கக் கூடாது. எனவே, தில்லி அரசின் வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளா் பின்பற்ற வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் அதிஷி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com