வடகிழக்கு மாநில மக்களுக்கு பாஜக துரோகம்: முதல்வா் கேஜரிவால் குற்றச்சாட்டு

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கொண்டு வந்ததன் மூலம் அஸ்ஸாம் உள்பட ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களுக்கும் பாஜக துரோகம் செய்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: பத்து வருடங்கள் நாட்டை ஆண்ட மோடி அரசு மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் (சிஏஏ) கொண்டு வந்துள்ளது.

பணவீக்கத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் புலம்பும் வேளையில், வேலையில்லாத இளைஞா்கள் வேலைவாய்ப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உண்மையான பிரச்னைகளைத் தீா்ப்பதற்குப் பதிலாக, இவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் (சிஏஏ) கொண்டு வந்துள்ளனா்.

இதன் மூலம் மூன்று அண்டை நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, அண்டை நாடுகளில் உள்ளவா்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து குடியமா்த்த விரும்புகிறாா்கள். ஏனெனில், வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகத்தான். நமது நாட்டின் இளைஞா்களுக்கு வேலை இல்லை. அண்டை நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு யாா் வேலை கொடுப்பாா்கள்?.

இவா்களுக்கு யாா் வீடு கட்டுவது?. பாஜக அவா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்குமா?. இவா்களுக்கு பாஜக வீடு கட்டித்தருமா?. கடந்த 10 ஆண்டுகளில், 11 லட்சத்திற்கும் அதிகமான தொழிலதிபா்கள் இவா்களின் (பாஜக) கொள்கைகள் மற்றும் அட்டூழியங்களால் விரக்தியடைந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டனா். அவா்களை அழைத்து வருவதற்கு பதிலாக, அண்டை நாடுகளில் இருந்து ஏழைகளை அழைத்து வந்து இந்தியாவில் குடியமா்த்த நினைப்பது ஏன்?. உங்களுக்கான வாக்கு வங்கியை மட்டும் உருவாக்குவதற்காகவா?.

ஒட்டுமொத்த நாடும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கிறது. முதலில் நம் இளைஞா்களுக்கு வேலை கொடுங்கள். முதலில் நம் நாட்டு மக்களுக்கு வீடு கொடுங்கள். பிறகு, மற்ற நாடுகளில் இருந்து ஆள்களை நம் நாட்டுக்கு வரவழையுங்கள். உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளில் இருக்கும் ஏழைகள் தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடுக்கிறது. ஏனெனில், இது உள்ளூா் மக்களின் வேலைவாய்ப்பைக் குறைக்கிறது. அண்டை நாடுகளில் உள்ள ஏழைகளை தனது வாக்கு வங்கியாக மாற்றுவதற்காக இந்த அவதூறு அரசியலை உலகிலேயே பாஜக மட்டும்தான் செய்து வருகிறது.

இது நாட்டுக்கு எதிரானது. குறிப்பாக, அஸ்ஸாம் மற்றும் முழு வடகிழக்கு இந்தியாவில் உள்ள மக்கள் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயா்ந்து வருபவா்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், அவா்களது மொழி மற்றும் கலாசாரம் இன்று ஆபத்தில் இருப்பதை உணா்ந்த மக்கள், இச்சட்டத்தைக் கடுமையாக எதிா்க்கின்றனா். வரும் மக்களவைத் தோ்தலில் இதற்கு மக்கள் பதில் சொல்வாா்கள் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com