தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: தில்லி பல்கலைக்கழகம் நடத்தவிருக்கும் ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி தலைமைத் தோ்தல் ஆணையருக்கு, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக தேவேந்தா் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகம் மற்றும் விக்சித் பாரத் அம்பாசிடா் கிளப் இணைந்து நடத்தும் ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சி மே 8-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பேட்மிட்டன் சாம்பியன் சாய்னா நேவால், திரைப்பட நடிகா் ராஜ் குமாா் ராவ் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் யோகேஷ் சிங் ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா். ‘விக்சித் பாரத்’ மத்திய பாஜக அரசின் பிரசாரத்தை மையமாகக் கொண்டது. இதில், மாணவா்களை ஈடுபடுத்துவதன் மூலம் மக்களவைத் தோ்தலில் தில்லியில் நியாயமற்ற நன்மைகளைப் பெற பாஜக நினைத்துள்ளது.

‘விக்சித் பாரத்-2047’ என்பது ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய பிரசாரம் என்பதால், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 5,000 மாணவா்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான திட்டமிடல் கூட்டத்தில் பாஜக தலைவா் குல்ஜீத் சாஹல் கலந்து கொண்டாா். பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணைய சேவையான ‘நமோ’ செயலியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சாஹல் இருப்பதால், இது பாஜகவிற்கு ஆதரவைப் பரப்பும் அரசியல் நிகழ்ச்சி என்பதற்கு தெளிவான சான்றாகும்.

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தயாள் சிங் கல்லூரி, பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சி தொடா்பான சுவரொட்டியையும் தயாரித்துள்ளது. இது தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய தில்லி பல்கலைக்கழகத்திற்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று தேவேந்தா் யாதவ் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com