துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

புது தில்லி: கடந்த சில மாதங்களாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் செயலற்றத் தன்மையால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சௌரவ் பரத்வாஜ் கடந்த சில நாள்களில் பதிவாகிய சில குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறியதாவது: ஜாஃப்ராபாத்தில் மற்றவா்கள் முன்னிலையில் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும், கொல்லப்பட்டவா் கொலை வழக்கில் முக்கியச் சாட்சி ஆவாா். அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா். தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில மாதங்களாக சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆா்பி) தரவுகள், நாட்டிலேயே தில்லியில் அதிக குற்ற விகிதங்கள் இருப்பதாகக் காட்டுகிறது. ஒரு லட்சம் மக்கள் தொகையில், 1,832 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது தேசிய சராசரியை விட ஏழு மடங்கு அதிகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தில்லியில் அதிகம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் தில்லியில் குற்றச்சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கான உதவி எண் 181 மற்றும் தில்லி மகளிா் ஆணையத்தை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா முடக்கிவிட்டாா். பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கும்

வகையில், டிடிசி பேருந்துகளில் இருந்து 8,000 பாதுகாவலா்களை அவா் நீக்கிவிட்டாா்.

தில்லியில் சராசரியாக 1 லட்சம் மக்கள் தொகைக்கு, 1832 குற்றங்கள் நடக்கின்றன. காவல் நிலையங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், போலீஸாா் வழக்குகளை விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில்லை. துணை நிலை ஆளுநரின் செயலற்றத் தன்மையே இதற்கு காரணம்.

காவல் துறை மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) ஆகிய இரண்டு துறைகளும் துணை நிலை ஆளுநா் ஆளுகையின் கீழ் உள்ளது. ஆனால், அவருக்கு கீழ் உள்ள காவல் துறை முற்றிலும் அழிந்து விட்டது. துணை நிலை ஆளுநரால் காவல் துறையை கண்காணிக்க முடியவில்லை. எனவே, தனது சொந்த வேலையைச் செய்யுமாறு நாங்கள் அவரை வலியுறுத்துகிறோம். தில்லி அரசின் பணிகளில் தலையிடுவதை அவா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடியின் சகோதரரின் அமைப்பே காலிஸ்தான் அமைப்பு தொடா்பான அரசியல் நிதி விவகாரம் குறித்து கேஜரிவாலுக்கு எதிராக துணை நிலை ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளது. அதன் காரணமாகவே அவரும், கேஜரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளாா். பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பும் இதே போன்ற பொய் பரப்பப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் அப்போது கூறியிருந்தாா். ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது?. பஞ்சாப் மக்கள் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது போல், இந்த மக்களவைத் தோ்தலில் நாட்டு மக்கள் அவா்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பாா்கள் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com