காலனித்துவ மரபுகளிலிருந்து சட்டங்களை 3 புதிய குற்றவியல் சட்டங்களும் எளிமையாக்குகிறது: துணை நிலை ஆளுநா் கருத்து
புது தில்லி: மத்திய அரசின் 3 புதியக் குற்றவியல் சட்டங்கள், கொடூரமான காலனித்துவ மரபுகளிலிருந்து சட்டங்களை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கான 8-ஆவது கூட்டம் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தலைமையில் நடைபெற்றது. இதில், முதல்வா் அதிஷி, மாநகரக் காவல் ஆணையா் சஞ்சய் அரோரா, சிறைத் துறை இயக்குநா் ஜெனரல் சதீஷ் கோல்சா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியதாவது: மருத்துவ-சட்டம், காவல்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நீதித்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தேவையான மறுசீரமைபில் இதுவரையிலான முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது. பாரதிய நியாய் சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய சன்ஹிதா ஆகியவை பொது மக்களின் நலனுக்காகவும், கொடூரமான காலனித்துவ மரபுகளிலிருந்து சட்டங்களை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் வி.கே.சக்சேனா.